Published:Updated:

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

சைலேந்திர பாபு, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
சைலேந்திர பாபு, ஸ்டாலின்

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கந்துவட்டிக் கொடுமையால் எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கந்துவட்டிக் கொடுமையால் எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Published:Updated:
சைலேந்திர பாபு, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
சைலேந்திர பாபு, ஸ்டாலின்

கந்துவட்டி கொடுமையை ஒழிக்க, ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்கிற நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைதான் இது. அதேநேரத்தில் கடைகளில் தொடங்கி, காவல்துறை வரை புரையோடிப்போயிருக்கும் ‘கந்துவட்டி’ குற்றங்களை, இந்த ஆபரேஷன் உண்மையாகவே களையுமா?’ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ‘ஆபரேஷன் ஸ்டார்மிங்’, ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ எனத் தமிழ்நாடு காவல்துறை இதுவரை உருட்டிய உருட்டுகளெல்லாம், உருப்படியாக எந்தப் பலனும் தராத நிலையில், ‘ஆபரேஷன் கந்துவட்டி என்ன ரிசல்ட் தரப்போகிறது?’ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

கந்துவட்டிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை களமிறங்கியதற்கு, சமீபகாலமாக நடந்த தற்கொலைகள், தீக்குளிப்புச் சம்பவங்கள்தான் பிரதான காரணம். எங்கே இந்த விஷயங்கள் பூதாகரமாகிவிடுமோ என்கிற பதற்றத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறது காவல்துறை.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கந்துவட்டிக் கொடுமையால் எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தலைநகர் சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில், ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ், தன்னுடைய மனைவி காயத்ரி, இரண்டு குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துக் கொன்றுவிட்டு தானும் அதே ரம்பத்தால் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்டார். இவர்களின் மரணத்துக்கு, கந்துவட்டியே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சென்னை கொளத்தூர் மக்காராம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் கந்தன் கடந்த மே 24-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் அவர் பேசிய வீடியோவில், “ராஜமங்கலத்திலுள்ள திருப்பதி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேலு அடிக்கடி போனில் வட்டி கேட்டு மிரட்டுவது தாங்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

“போலீஸ்னா பயந்துருவோமா..?” - உயிரைக் குடித்த கந்துவட்டி!

அவிநாசி அருகேயுள்ள ராயம்பாளையத்தில் கந்துவட்டிக் கொடுமையால் பேரூராட்சி ஒப்பந்த ஊழியர் பரிமளா, கடந்த மே 24-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கடன் கொடுத்த தனசேகரன், பரிமளாவை சாதிப்பெயர் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசியதுதான் தற்கொலைக்கான காரணம் எனத் தெரியவந்தது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான செல்வகுமார், அனிதா என்பவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வட்டிக்குக் கடன் பெற்றிருக்கிறார். பணத்தை வட்டியுடன் திரும்பக் கொடுத்த பிறகும், முழு வட்டித்தொகை வரவில்லை என்று பொங்கிய அனிதா, “போலீஸ்னா பயந்துருவோமா... நீ இன்னும் 12 லட்சம் ரூபாய் தந்தே ஆகணும்” என்று செல்வகுமாரை மிரட்டியிருக்கிறார். கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் செல்வகுமார் தற்கொலை செய்த இந்த வழக்கில், காவல்துறையினர் அனிதாவைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த சித்ரா, அதே பகுதியில் வசித்துவரும் ரங்கநாயகி என்பவரிடம் சிறிது சிறிதாக 7 லட்சம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து வட்டி கட்டிவந்தவர், கொரோனா காலத்தில் கட்டாத நிலையில், வட்டி மற்றும் அசலுடன் மொத்தம் 20 லட்சம் ரூபாயைச் செலுத்தச் சொல்லி ரங்கநாயகியும் அவர் குடும்பத்தினரும் சித்ராவை மிரட்டியுள்ளனர். “கடன் கட்ட முடியலைன்னா, உன் வீட்டை எழுதிக் கொடுத்துடு” என்று சித்ராவுக்கு நெருக்கடியும் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் விரக்தியடைந்த சித்ரா, கடந்த மே 5-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில், வட்டிக்குக் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோபிநாத்
கோபிநாத்

காக்கி - கரைவேட்டி கூட்டணி... உடைவது எப்போது?

கந்துவட்டித் தொழிலில் அரசியல் பிரமுகர்கள் பெருமளவில் ஈடுபட்டிருப்பதால், சில ‘மாமூல்’ காக்கிகளும் கண்டுகொள்வதில்லை. கரைவேட்டிக்கும் காக்கிக்கும் இடையேயான இந்தக் ‘கூட்டணியை’ உடைப்பதே சவாலான காரியம் என்கிறார்கள், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள்.

பெயர் குறிப்பிட வேண்டாமென்று நம்மிடம் பேசிய சென்னை கோயம்பேடு மார்க்கெட் பூ வியாபாரி ஒருவர், “பூ வியாபாரத்தை விரிவுபடுத்த, அரசியல் பின்புலமுள்ள வணிகர் சங்கப் பிரமுகர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் வட்டிக்குப் பணம் வாங்கினேன். தினமும் வட்டி கொடுத்துவிடுவேன். கொரோனா காலகட்டத்தில் வட்டி கொடுக்க முடியவில்லை. வட்டிக்கு வட்டி என அசல் தொகை நான்கு மடங்காகிவிட்டது. என்னுடைய பெயரிலிருந்த இடத்தை மிரட்டிக் கேட்டனர். உடனே, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். புகாரை வாங்கிக்கொண்ட சப் இன்ஸ்பெக்டர், மறுநாள் விசாரணைக்கு என்னையும் வட்டிக்குப் பணம் கொடுத்தவரையும் வரச் செய்தார். வட்டிக்குக் கொடுத்தவரை சேரில் அமரவைத்து, என்னைக் குற்றவாளியைப்போல நிற்கவைத்து மிரட்டும் தொனியில் பேசினார். வழக்கு பதிவுசெய்யாமல் விவகாரத்தை முடித்துவிட்டார். இவர்களின் மிரட்டலால், என்னுடைய இடத்தை எழுதிக் கொடுத்தேன். காவல்துறையிலுள்ள சில அதிகாரிகளும், வட்டி பிசினஸ் செய்யும் நபர்களும் இப்படி கூட்டுவைத்துக்கொண்டிருக்கும் வரை கந்துவட்டிக் கொடுமை ஒருபோதும் ஒழியாது” என்றார் வேதனையுடன்.

அரசியல் கட்சிப் பிரமுகர்கள் செய்யும் அடாவடி வட்டி வசூல், கட்சிக்காரர்களைக்கூட சில சமயங்களில் பதம்பார்த்துவிடுகிறது. சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள ஓர் ஆளுங்கட்சிப் பகுதிச் செயலாளருக்கு அடைமொழிப் பெயரே ‘எட்டு பைசா’ என்பதுதான். கட்சிக்காரர்

களிடம்கூட கறார் காட்டும் அந்த நபர், குறித்த நேரத்தில் வட்டி வரவில்லையென்றால், கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர் களின் குடும்பப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் பேசுவார். சில போலீஸ் அதிகாரிகளே, அந்த நபரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தின் கதவைத் தட்டினாலும், புகார் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறார்கள்.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

குறிவைக்கப்படும் மானம்... பின்னணியில் கவுன்சிலரும் அமைச்சரும்!

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத், “ஆலந்தூரைச் சேர்ந்த ராஜா என்கிற செந்திலிடம் 5 லட்சம் ரூபாயை 5 பைசா வட்டிக்குக் கடன் வாங்கினேன். நான் வட்டி செலுத்த முடியாத சமயங்களில், வட்டிக்கு வட்டி என்று 5 லட்சம் வாங்கிய கடன் 10 லட்சமாக ஆனது. அதற்காக இதுவரை 19 காசோலைகளையும், 22 ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜா என்கிற செந்தில் என்மீது புகாரளித்திருக்கிறார். அதில் நான் 27 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில், எஸ்.ஐ ஒருவர் என்னை அழைத்து கைதுசெய்துவிடுவதாக மிரட்டினார். என்னுடைய தம்பிக்கு போன் செய்து, ‘உன்னுடைய அண்ணன் ஆலந்தூருக்கு வந்தால் தீஞ்சுடுவான்’ என செந்தில் தரப்பு மிரட்டியிருக்கிறது. என் குடும்பமே உயிர் பயத்திலிருக்கிறது. செந்திலுக்கு ஆதரவாக காங்கிரஸின் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவரும் என்னை மிரட்டிவருகிறார். மேலும், இவருக்கு சென்னையிலிருக்கும் அமைச்சர் ஒருவரின் தயவும் இருப்பதால், தைரியமாக மிரட்டுகிறார். உயிருக்கு பயந்து சென்னை பரங்கிமலை துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறேன். காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் பீதியுடன்.

தமிழ்நாடு தழுவிய அளவில் பெரும் சமூக, சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மாறியிருக்கும் இந்தக் கந்துவட்டித் தொழில், கடன் வாங்கியவர்களின் மானத்தைத்தான் முதலில் குறிவைக்கிறது. குறிப்பாக, பாலியல்ரீதியாக விடப்படும் மிரட்டல்கள் அதிரவைக்கின்றன. நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த பழ வியாபாரிகள் சிலர், “வியாபாரிகள், கூலித்தொழிலாளிகளிடம் வட்டிக்குப் பணம் கொடுக்கும் கும்பல், வட்டி வரவில்லையென்றால், குடும்பப் பெண்களைக் கடத்திச் சென்றுவிடுகின்றனர். சில சமயங்களில் அந்தப் பெண்களின் மானமும் சூறையாடப்படுகிறது. இது போன்ற பாலியல் மிரட்டல்களை எதிர்கொள்ள முடியாமல், சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்த இறப்புகளை குடும்பப் பிரச்னை எனக் காரணம் குறிப்பிட்டு பொதுவாக அந்த வழக்குகளை முடித்துவிடுகிறது போலீஸ். அதற்காக, காவல்துறையிலுள்ள சில அதிகாரிகள் சிறப்பாக கவனிக்கப்படுகின்றனர். சில போலீஸ் அதிகாரிகளே, தங்களுக்கு வரும் அபரிமிதமான மாமூல் வருவாயை, இந்தக் கந்துவட்டிக் கும்பலிடம் கொடுத்து, ‘ரொட்டேஷனில்’ விடச் சொல்கிறார்கள். இந்த பிசினஸ் நெட்வொர்க் தென் மாவட்டங்கள் முழுவதும் இருக்கிறது. பயிரை மேயும் இந்த வேலிகளால் நடத்தப்படும் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ நியாயமாக நடக்குமா?” என்றனர்.

ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

மார்க்கெட் பகுதிகள், நடைபாதை வியாபாரிகள், குடிசைப் பகுதிகள்தான் கந்துவட்டிக் கும்பலின் பிரதான பிசினஸ் பாயின்ட்டுகள். ஆட்டோ டிரைவர்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எனப் பொருளாதாரச் சிக்கலில் உழல்பவர்களைக் குறிவைத்து கந்துவட்டிக் கும்பல் செயல்படுகிறது. கடன் கொடுப்பதற்கு முன்பு, ஸ்டாம்ப் பேப்பர், செக், சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. வட்டிப் பணம் சரியாகக் கொடுக்கவில்லையென்றால், உள்ளூர் போலீஸாரின் உதவியோடு மோசடி வழக்கைப் பதிவுசெய்வதாக மிரட்டியே காரியத்தைச் சாதித்துக்கொள்கிறது. பண விவகாரம் தொடர்பாக லோக்கல் காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தால், அந்தக் காவல் மாவட்டத்திலிருக்கும் காக்கிகள், ‘பர்சன்டேஜ்’ பேசி கட்டப்பஞ்சாயத்து செய்வது காலம் காலமாக நடக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சென்னையில் பணியாற்றும் மிக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் குடும்பமே கந்துவட்டி பிசினஸில்தான் கோலோச்சுகிறது. தீயணைப்புத்துறையில் இருக்கும் உயரதிகாரிகள் இருவர், சினிமா வட்டாரத்திலுள்ள ‘வட்டி பிரமுகர்’ ஒருவர் மூலமாகத் தங்கள் பணத்தை வட்டிக்கு விட்டிருக்கிறார்கள். தென்னக ரயில்வே யூனியன் ஆதரவு பெற்றவர்கள் துணையோடு, கடைநிலை ஊழியர்களுக்குக் கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. வட்டிக்குப் பணம் வாங்கும் ரயில்வே ஊழியர்களின் ஏ.டி.எம் கார்டையும் பின் நம்பரையும் கந்துவட்டிக் கும்பல் வாங்கி வைத்துக்கொள்ளும். பின்னர் மாதம்தோறும் சம்பளத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். இது பெரும் சிக்கலாக தென்னக ரயில்வேயில் நிலவிவருகிறது. சமீபகாலமாக, வட்டிக்குப் பணம் கொடுக்கும் புதிய மொபைல் ஆப்கள் முளைத்திருக்கின்றன. எந்த ஆவணமும் இல்லாமல், சில மணி நேரத்திலேயே இவர்கள் ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை கடன் தருகிறார்கள். வட்டி செலுத்தத் தவறினால், கடன் வாங்கியவரின் புகைப்படத்தை நிர்வாணமாக ‘மார்பிங்’ செய்து, அவர் தொடர்பிலுள்ள எண்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். இது தொடர்பான புகார்களும் காவல் நிலையங்களில் ஏராளமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ கண்டறிந்து, பிரச்னைகளைக் களைய வேண்டும்” என்றனர்.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, விழுப்புரத்தில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஏ ப்ளஸ் ரெளடிகள் பட்டியலை வெளியிட்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இவர்களைச் சிறையில் அடைப்போம்” என்றார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், செப்டம்பர் 2021-ல் ரெளடிகளை ஒழிப்பதற்கு ‘ஆபரேஷன் ஸ்டார்மிங்’ என்கிற நடவடிக்கையை எடுத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு. தமிழகம் முழுவதும் ரெளடிகளை விரட்டி விரட்டிக் கைதுசெய்ததாகக் காவல்துறை மார்தட்டிக்கொண்டது. ஆனால், ஸ்டாலின் பட்டியலிட்ட அந்த ஏ ப்ளஸ் ரெளடிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. அதேபோல, கடந்த மார்ச் மாதம் கஞ்சா விற்பனையை ஒழித்துக்கட்ட ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்கிற நடவடிக்கைக்குப் பாய்ந்தது காவல்துறை. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டதாக போலீஸார் பட்டியிலிட்டனர். ஆனால், இன்று வரை கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறது. கஞ்சா கடத்தலின் ஆணிவேரை போலீஸ் தொடக்கூட இல்லை.

இந்த நிலையில்தான், ஜூன் 8-ம் தேதி ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்கிற புது ஆக்‌ஷனை ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. சமூகத்தின் சகல இடங்களிலும் கந்துவட்டிக் கும்பல் வியாபித்திருக்கிறது. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ‘நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு’ என்கிற ஒரு ஸ்பெஷல் பிரிவை உருவாக்கி, தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த நில அபகரிப்புப் புகார்கள் அனைத்தையும் பதிவுசெய்ய வைத்தார். பலர்மீது நடவடிக்கையும் பாய்ந்தது. அதுபோல, தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கி, கந்துவட்டிக் கும்பல் மீது தைரியமாகப் புகாரளிக்கவைப்பதும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதுமே இந்தக் கொடூரத்தை ஒழிக்கும் தீர்வாக அமையும். காவல்துறையின் கடந்தகால நடவடிக்கைகள்போல, இந்த ‘ஆபரேஷன் கந்துவட்டி’ வெறும் ஆக்டிங்காக முடிந்துவிடக் கூடாது என்பதே, கந்துவட்டிக் கொடுமையால் பரிதவிப்போரின் ஒரே கவலையாக இருக்கிறது!

*****

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

சட்டம் என்ன சொல்கிறது?

14, நவம்பர் 2003-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா `தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டம்’ கொண்டுவந்தார். இந்தச் சட்டத்தின்படி, கடன் வழங்கும் தொழில் செய்ய விரும்பும் நபர், கட்டாயமாக வட்டாட்சியரிடம் பதிவுசெய்து அதற்கான உரிமம் பெற வேண்டும். கந்துவட்டி முதல் மீட்டர் வட்டி வரை வட்டி வசூல் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர், “கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றங்களை நேரடியாக அணுகலாம். கந்துவட்டி தடைச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூல் செய்வது குற்றம். வட்டி வசூல் செய்பவர்கள், கடன் வாங்கியவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்திருந்தால், அதை நீதிமன்றம் மீட்டுத் தரும். கந்துவட்டிப் பிரச்னையால் யாராவது தற்கொலை செய்துகொண்டால், பணம் கொடுத்தவர்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவுசெய்யப்படும். அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்திருக்கிறது இந்தத் தடைச் சட்டம்” என்றார்!

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

“ஆபரேஷன் குபேரா கொண்டுவர வேண்டும்!”

“தமிழ்நாட்டில் இதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களும் இருந்தும், அவை முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை. கேரளாவில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ‘ஆபரேஷன் குபேரா’வைத் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று 2014-ம் ஆண்டு நான் நீதிபதியாக இருந்தபோது உத்தரவிட்டிருந்தேன். எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அது நடக்கவில்லை. அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க தனியொரு பிரிவு ஏற்படுத்தி, தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்!”

- கிருபாகரன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

ஆபரேஷன் கந்துவட்டி... ஆக்‌ஷனா... ஆக்டிங்கா?

“ஏழை மக்களுக்கு வங்கிகளில் எளிதில் கடன் கிடைக்க வேண்டும்!”

“பல்வேறு வங்கிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு எளிதில் கடன் கிடைப்பதில்லை. இதன் காரணமாகத்தான் அதிக வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள். இவர்களுக்கு எளிமையான முறையில் கடன் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். கந்துவட்டி தொடர்பான சிக்கலில் மாட்டிக்கொண்டால், என்ன செய்வது என்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை!”

- பாடம் நாராயணன், சமூக ஆர்வலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism