Published:Updated:

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

பிரியங்கா காந்தி - மோடி
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா காந்தி - மோடி

காங்கிரஸின் கவர்ச்சி வாக்குறுதிகள்... முற்றுகையிட்ட பா.ஜ.க மூவர் படை...

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

காங்கிரஸின் கவர்ச்சி வாக்குறுதிகள்... முற்றுகையிட்ட பா.ஜ.க மூவர் படை...

Published:Updated:
பிரியங்கா காந்தி - மோடி
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா காந்தி - மோடி

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் 2022, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கவிருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசியக் கட்சிகள் வரை பல்வேறு வியூகங்களை வகுத்துவருகின்றன. அதேசமயம், மற்ற நான்கு மாநிலங்களைவிட உத்தரப்பிரதேசத்தின் மீதே தேசியக் கட்சிகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. அந்த மாநிலத்தில் வெற்றிபெறக் கட்சிகள் வகுத்துள்ள வியூகங்கள் என்னென்ன?

ஸ்மார்ட்போன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டி!

அக்டோபர் 26-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுடன் உ.பி தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியின் வாக்குறுதிகள் வியக்கவைக்கின்றன. “10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவச் சிகிச்சை, விவசாயக் கடன் தள்ளுபடி, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டி...” என்று நீள்கின்றன காங்கிரஸின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள். தவிர, “காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவிகிதம் ஒதுக்கப்படும்” என்று அவர் அறிவித்திருப்பது அனைத்துக் கட்சிகளையும் விழி உயர வைத்திருக்கிறது.

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

உ.பி-யின் லக்கிம்பூரில் விவசாயிகள்மீது மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாக எழுந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல் ஆளாகப் போய் நின்றார் பிரியங்கா. ஆக்ராவில் 25 லட்சம் ரூபாய் திருடியதாக அருண் வால்மீகி என்ற துப்புரவுப் பணியாளர் வீட்டில் காவல்துறை சோதனைக்குச் சென்றபோது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அங்கும் உடனடியாகப் போய் நின்றார் பிரியங்கா. பட்டியல் சமூகத்தினரின் பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணியில் ஈடுபடுவது, தன்னைக் கைதுசெய்ய வந்த காவலர்களுடன் நட்பு பாராட்டுவது என்று தொடர்ந்து லைம்லைட்டில் இருந்துவரும் பிரியாங்காவின் செயல்பாடுகள் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது தெரியவில்லை!

சுற்றிச் சுழலும் மூவர் படை!

உ.பி-யில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க, தீவிர முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த நான்கு மாதங்களில் ஆறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் மோடி. ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைத்தவர், 5,200 கோடி ரூபாய் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறார். மாநிலத்தில் முகாமிட்டுள்ள அமித் ஷா கள நிலவரங்களை ஆய்வு செய்வதுடன், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் பிஸியாகியிருக்கிறார். இங்கு நவம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை மார்ச் வரை நீட்டித்ததுடன் கோதுமை, அரிசியோடு கூடுதலாக ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ உப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

இன்னொரு பக்கம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி, காசி, சித்ரகோட், மதுரா இங்கெல்லாம் மதரீதியிலான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார். மாநில பா.ஜ.க-வின் ஐடி, சமூக வலைத்தளப் பிரிவுகளும் ‘பா.ஜ.க அரசு செய்த நலத்திட்ட உதவிகளை மறந்துவிடாதீர்...’, ‘வலிமையான அரசு... நேர்மையான அரசு’ என்கிற கோஷங்களை ஒவ்வொருவரின் மொபைலுக்கும் எஸ்.எம்.எஸ் செய்துவருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் சிலவற்றிலும் `பா.ஜ.க-தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ என்றே ஆரூடம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், ஹத்ராஸ் பாலியல் வழக்கு, உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதும், கொரோனாவைச் சரியாகக் கையாளாமல்போனதும், விவசாயிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் மாநில பா.ஜ.க-வின் இமேஜை சரித்திருக்கிறது என்பதும் உண்மையே!

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

என்ன செய்கின்றன இதர கட்சிகள்?

2017 சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் மண்ணைக் கவ்வியபோது சமாஜ்வாடி கட்சிதான் 49 இடங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அந்தக் கட்சி பா.ஜ.க-வின் கோட்டைகளான அயோத்தி, வாரணாசி ஆகிய இடங்களில் பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளி அதிக வார்டுகளைக் கைப்பற்றியது. இப்போது அதே உற்சாகத்துடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது சமாஜ்வாடி. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டும் அகிலேஷ் யாதவ், `பா.ஜ.க-வை வெளியேற்றுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம்?

கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 18 இடங்களை மட்டுமே கைப்பற்றிய மாயாவதியின் பகுஜன் சமாஜ், இந்தத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. 2007-ல் பிராமணர் சார்புக் கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைத்தார் மாயாவதி. இம்முறையும் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறார் அவர். இவர்கள் தவிர ராஷ்டிரிய லோக் தளம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் வியூகங்களில் மும்முரமாகியிருக்கின்றன.

பரபரப்பான தேர்தல் களத்தில் பா.ஜ.க-தான் முன்னணியில் இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்காதது பா.ஜ.க-வுக்குத்தான் லாபம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு செல்லவேண்டிய பா.ஜ.க எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளை பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஒவைசி ஆகியோர் கொத்திச் செல்லக் காத்திருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸுக்குக் கடந்த முறையை விட கூடுதல் ‘எரிபொருள்’ கிடைத்திருப்பதும் உண்மைதான். ஆனால், நான்கு மாதங்களுக்குள் காட்சிகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது!

உ.பி தேர்தல் முடிவுகளே 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அந்த வகையில் உ.பி-யை நாடே உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது!