Published:Updated:

அரியணை ஏறுவாரா அகிலேஷ்?

அகிலேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
அகிலேஷ்

அகிலேஷின் வியூகங்கள் எடுபடுமா அல்லது மறுபடியும் வீழ்ந்துபோவாரா?

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கும் சூழலில், பா.ஜ.க-வுக்குக் கடும் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். பா.ஜ.க மீதான விவசாயிகளின் அதிருப்தி, சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி, மம்தாவின் ஆதரவு இவையெல்லாம் அகிலேஷை அரியணை ஏற்றுமா அல்லது பா.ஜ.க-வே மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்பதுதான் உத்தரப்பிரதேச அரசியலில் எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெறும் கட்சியே அடுத்து வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதனாலேயே, உத்தரப்பிரதேசத்தில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க. கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் எட்டு முறை அங்கு பயணம் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. சர்வதேச விமான நிலையம், புதிய மருத்துவக் கல்லூரி, 800 கோடி ரூபாய் செலவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் புதிய வளாகம், நெடுஞ்சாலைகள்... என்று அங்கு புதிது புதிதாகத் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார் மோடி.

பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க-தான் வெற்றிபெறும் என்று ஆரூடம் சொல்கின்றன பல்வேறு கருத்துக்கணிப்புகள். இந்த நிலையில்தான், பா.ஜ.க-வுக்குக் கடும் போட்டியைக் கொடுத்துவருகிறது சமாஜ்வாடி. அகிலேஷின் புதிய வியூகங்கள் அந்தக் கட்சியினருக்கு புது உற்சாகத்தை ஊட்டியுள்ளன. தந்தை முலாயம் சிங் யாதவ், தாய்மாமன் சிவபால் யாதவ் ஆகியோருடனான பிணக்குகளைச் சரிசெய்துவிட்டு, மாநிலம் முழுவதும் சமாஜ்வாடி வெற்றி யாத்திரையை நடத்திவருகிறார் அகிலேஷ். அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா, சர்தார் வல்லபாய் பட்டேல், ஆச்சார்யா நரேந்திர தேவ், அப்துல் கலாம் ஆகியோரின் புகைப்படங்களுடன் வேனில் வலம்வரும் அகிலேஷ், இதுவரை எட்டு கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு, ஒன்பதாவது கட்ட பிரசாரத்தை உன்னாவ் பகுதியிலிருந்து தொடங்கியிருக்கிறார்.

அரியணை ஏறுவாரா அகிலேஷ்?

2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து படுதோல்வியைச் சந்தித்த அகிலேஷ் யாதவ், இம்முறை கூட்டணி வியூகத்தை மாற்றி யாதவர் மற்றும் இஸ்லாமியர் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளைப் பெருமளவில் கவரும் வகையில், பல சிறிய கட்சிகளுடனும், அமைப்புகளுடனும் கைகோத்துள்ளார். கிழக்கு உ.பி-யில் செல்வாக்குள்ள சுஹல்தேவ் பாரதி சமாஜ்வாடி கட்சி, மேற்கு உ.பி-யிலும், கிழக்கு உ.பி-யின் சில பகுதிகளிலும் செல்வாக்கு பெற்றுள்ள மஹன் தள், கிழக்கு மாவட்டங்களில் செல்வாக்குள்ள ஜன்வாடி சோஷலிஸ்ட் கட்சி, பிரக்யாராஜ் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் செல்வாக்குள்ள அப்னா தள் ஆகியவற்றுடன் கைகோத்துள்ளார் அகிலேஷ். இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்து அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி களமிறங்கினாலும், இஸ்லாமிய வாக்காளர்கள் சமாஜ்வாடி கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார் அகிலேஷ்.

விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற மேற்கு உத்தரப்பிரதேசத்தின் வாக்குகள், வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த 2017 தேர்தலில் அங்குள்ள 71 தொகுதிகளில் 51 தொகுதிகளை அள்ளியிருந்தது பா.ஜ.க. விவசாயிகள் போராட்டத்தால் இம்முறை அங்கு எழுந்திருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிரான அலையைச் சாதகமாக்கிக்கொள்ள முயலும் அகிலேஷ், லக்கிம்பூர் கேரியில் கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்குவோம்’ என்று வாக்குறுதி அளித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதும், அகிலேஷுக்குக் கூடுதல் பலம்.

‘‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு ராம் மனோகர் லோஹியா, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகள் ஒன்றுசேர வேண்டியது அவசியம்’’ என்று சித்தாந்தரீதியாகப் பேசும் அகிலேஷ், ‘‘எங்கள் கூட்டங்களுக்கு மக்கள் உற்சாகமாகத் திரண்டுவருகிறார்கள். ஆனால், பா.ஜ.க கூட்டங்களில் காலி நாற்காலிகள்தான் சிதறிக்கிடக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் நாற்காலிகள் காலியாகும் என்பதற்கான அறிகுறி இது’’ என்று கிண்டல் செய்யவும் தவறுவதில்லை. ஆனாலும், அகிலேஷின் வியூகங்கள் எடுபடுமா அல்லது மறுபடியும் வீழ்ந்துபோவாரா என்பதை கட்சிகளின் கடைசி நேர வியூகங்களே முடிவு செய்யும்!