Published:Updated:

இது யாருக்கும் யாருக்குமான யுத்தம்? - உணர்ச்சிப்பெருக்கில் உ.பி தேர்தல்

உ.பி தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
உ.பி தேர்தல்

உத்தரப்பிரதேசத் தேர்தலை ‘மண்டல் Vs கமண்டல் மோதல்' என்றே வர்ணிப்பார்கள். ஜாதிப் பிரிவினைகளும் மத உணர்வுகளும் கூர்மையாக இருக்கும் மண் அது

இது யாருக்கும் யாருக்குமான யுத்தம்? - உணர்ச்சிப்பெருக்கில் உ.பி தேர்தல்

உத்தரப்பிரதேசத் தேர்தலை ‘மண்டல் Vs கமண்டல் மோதல்' என்றே வர்ணிப்பார்கள். ஜாதிப் பிரிவினைகளும் மத உணர்வுகளும் கூர்மையாக இருக்கும் மண் அது

Published:Updated:
உ.பி தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
உ.பி தேர்தல்

“இந்தத் தேர்தல் 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்கும் இடையிலான யுத்தம்'' என்கிறார், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். ‘வளர்ச்சி' என்ற முகமூடியைப் போட்டு இந்த வார்த்தைகளை அவர் சொன்னாலும், யோகி எதைக் குறிப்பிடுகிறார் என்பது உத்தரப்பிரதேசத்தின் பாமர வாக்காளருக்கும் புரியும். அந்த மாநிலத்தில் சுமார் 19 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அந்த 20 சதவிகிதம் என்று அவர் குறிப்பிடுவது அவர்களைத்தான்.

‘‘காசி விஸ்வநாதருக்கு அழகிய வளாகம் கட்டிவிட்டோம். அயோத்தியில் ராமபிரானுக்கு ஆலயம் எழுப்பிவருகிறோம். மதுரா கிருஷ்ணருக்கு மாபெரும் கோயில் கட்டாமல் விட்டுவிட முடியுமா?'' என்று கேட்கிறார், உ.பி துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌர்யா. ‘பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி அமையும்' என்ற முழக்கத்தை யோகியும் எழுப்புகிறார்.

யோகியை வாரணாசி அல்லது அயோத்தியில் போட்டியிட வைத்து, இந்த உணர்வை உயிரோட்டமாக வைத்திருக்கலாமா என்றுகூட யோசித்தது பா.ஜ.க. ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டது. பா.ஜ.க-வுக்குக் கடும் போட்டியாக விளங்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை ‘திப்பு சுல்தான்' என்றுதான் பா.ஜ.க தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தேர்தலை எந்த திசையில் எடுத்துச் செல்ல பா.ஜ.க விரும்புகிறது என்பதற்கான சமிக்ஞைகள் இவை.

இன்னொரு பக்கம் பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒருங்கிணைத்து ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் அகிலேஷ் யாதவ். முஸ்லிம்கள் மற்றும் யாதவ்களின் கட்சியாக மட்டுமே அறியப்பட்ட அது, மற்றவர்களையும் தன் வசம் இழுத்திருக்கிறது. உ.பி-யில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்கு 44 சதவிகிதம். இவை ஒட்டுமொத்தமாக யார் பக்கம் சாய்ந்தாலும் வெற்றி உறுதி. 2012-ல் சமாஜ்வாடியும், 2017- ல் பா.ஜ.க-வும் அதனால்தான் ஜெயித்தன. யோகி ஆதித்யநாத், உயர்வகுப்பாகக் கருதப்படும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் சமூகத்தினரே அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற கோபம் பிற சமூகங்களுக்கு இருக்கிறது. அந்தக் கோபத்தைக் கிளறிவிடும் அகிலேஷ், ‘‘எல்லாச் சமூகங்களுக்கும் அதிகாரத்தைத் தருவோம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம்'' என்றெல்லாம் வாக்குறுதிகள் தருகிறார்.

உத்தரப்பிரதேசத் தேர்தலை ‘மண்டல் Vs கமண்டல் மோதல்' என்றே வர்ணிப்பார்கள். ஜாதிப் பிரிவினைகளும் மத உணர்வுகளும் கூர்மையாக இருக்கும் மண் அது. தேர்தல் மோதல்கள் பெரும்பாலும் அந்த அடிப்படையில்தான் நிகழும். இப்போதும் அதில் துளியும் மாற்றமில்லை. முசாஃபர்பூர் கலவரங்களின் சுவடு அழியாத சூழலில் கடந்த 2017 தேர்தல் நடைபெற்றது. அகிலேஷ் ஆட்சியை இழந்தார். 403 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 312 தொகுதிகளை வென்று பெரும்பலத்துடன் ஆட்சி அமைத்தது பா.ஜ.க. வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று சாதாரண எதிர்க்கட்சியாகச் சுருங்கிப்போனது சமாஜ்வாடி.

இது யாருக்கும் யாருக்குமான யுத்தம்? - உணர்ச்சிப்பெருக்கில் உ.பி தேர்தல்

இம்முறை உ.பி தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. வழக்கமாகத் தேர்தல் அறிவிப்பு வந்தாலே, எல்லாக் கட்சிகளிலிருந்தும் கொத்துக் கொத்தாகப் பலர் போய் பா.ஜ.க-வில் சேர்வார்கள். இம்முறை பா.ஜ.க-விலிருந்து பலர் வெளியேறுகிறார்கள். சமீப ஆண்டுகளில் எங்கும் நடக்காத விஷயம் இது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி எங்கோ ஒரு குகையில் இருக்கும் கிளியின் உடலில் ஓர் அசுரனின் உயிர் இருப்பதுபோல, உத்தரப் பிரதேசத்தில்தான் மத்திய அரசின் உயிர் இருக்கிறது. உ.பி-யில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு ஏற்பட்டால், மோடியின் அரசு ஆட்டம் காணும். அதனால் மோடியின் ஆதரவாளர்கள், மோடி எதிர்ப்பாளர்கள் என்று இருதரப்பினரும் உ.பி-யைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

வழக்கமான உ.பி தேர்தல் என்பது நான்குமுனைப் போட்டியாக இருக்கும். இம்முறை அதை இருமுனைப் போட்டிக்கான களமாகக் கிட்டத்தட்ட மாற்றியிருக்கிறார் அகிலேஷ். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த மோசமான தோல்விக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போன பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்னமும் வெளியில் வரவில்லை. அவர் கட்சியிலிருந்த செல்வாக்கான தலைவர்கள் பலரை சமாஜ்வாடியும் பா.ஜ.க-வும் இழுத்துக்கொண்டன. ‘நானும் ரௌடிதான்' என்ற ரேஞ்சில்தான் தேர்தலில் நிற்கிறது மாயாவதி கட்சி.

காங்கிரஸ் நிலைமை இதைவிடப் பரிதாபம். பிரியங்கா காந்தியை உ.பி காங்கிரஸுக்குப் பொறுப்பாளராகப் போட்டுப் பல திட்டங்களை உருவாக்கியது தலைமை. ஆனால், கொரோனா குறுக்கிட்டு அவரைச் செயல்பட விடாதபடி செய்துவிட்டது. உ.பி காங்கிரஸின் முக்கிய முகமாக இருந்தவர் ஜிதின் பிரசாதா. யோகி முதல்வரான பிறகு பா.ஜ.க மீது கோபத்தில் இருந்த பிராமண சமூகத்தை காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்கு அவர் முயன்றார். இதற்காகத் தனி அமைப்பையும் அவர் உருவாக்கினார். ஒரு கட்டத்தில் அவரையே பா.ஜ.க இழுத்துக்கொண்டது.

‘எப்படியும் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமையும்' என்ற நம்பிக்கையில் மற்ற பலர் காத்திருந்தார்கள். அதுவும் நடக்கவில்லை. அகிலேஷ் யாதவ் அதற்குத் தயாராக இல்லை. ‘அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், உ.பி தேர்தலானது மோடிக்கும் ராகுல் காந்திக்குமான யுத்தமாக மாறிவிடும். அது தனக்கு லாபம் தராது. யோகிக்கும் அகிலேஷுக்குமான மோதலாக இந்தத் தேர்தலைக் கட்டமைப்பது மட்டுமே தனக்கு நல்லது' என்று அவர் கருதினார். அதனால் காங்கிரஸைக் கண்டுகொள்ளவே இல்லை. ‘இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கும் சமாஜ்வாடிக்குமான மோதல்தான். இனியும் காங்கிரஸில் இருப்பதில் அர்த்தமில்லை' என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டு இம்ரான் மசூத் போன்ற தலைவர்கள் வெளியேறினார்கள். கடந்த முறை ஏழு இடங்களில் ஜெயித்தது காங்கிரஸ். அவர்களில் நான்கு எம்.எல்.ஏ-க்கள் இப்போது கட்சி மாறிவிட்டனர். பெண்களுக்கு அதிக வாய்ப்புகள், உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவுக்கு வாய்ப்பு என்று கவனம் ஈர்த்தாலும், காங்கிரஸ் எந்தக் கணக்கிலும் இல்லை என்பதே உண்மை.

இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே சாமர்த்தியமாகக் கணக்கு போட்டு அரசியல் செய்துவருகிறார் அகிலேஷ் யாதவ். தன் சித்தப்பா சிவபால் யாதவுடன் சமரசம் செய்துகொண்டார். சிவபால் யாதவ் தன் கட்சியை சமாஜ்வாடியுடன் சேர்க்க மறுத்தாலும், தேர்தல் உடன்பாட்டுக்கு சம்மதித்தார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட்டுகள் மத்தியில் செல்வாக்கு படைத்த ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்தார். மஹன் தள் கட்சியை அடுத்து வளைத்தார். ராஜ்பர் சமூகத்தினர் மத்தியில் கணிசமான ஆதரவு பெற்றிருக்கும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் பா.ஜ.க முகாமில் இருந்தது. அதையும் தன் பக்கம் இழுத்தார்.

அடுத்து பா.ஜ.க-வின் அடிமடியில் கைவைத்தார். மௌர்யா சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கான தலைவர் சுவாமி பிரசாத் மௌர்யா. மாநில அமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருந்த இவரை தன் கட்சிக்கு இழுத்தார். அடுத்தடுத்து தாராசிங் சௌகான், தரம்சிங் சைனி என்று இன்னும் இரு அமைச்சர்கள் வந்தார்கள். கூடவே ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்கள் தாவினார்கள். இந்த எல்லாமும் ஒரே நேரத்தில் நிகழாமல், அடுத்தடுத்த நாள்களில் நடக்கவைத்து, ஒட்டுமொத்த மீடியா கவனமும் தன்மீது இருக்குமாறு பார்த்துக்கொண்டார் அகிலேஷ். ‘பா.ஜ.க-விலிருந்து ஒரு பெரும் பட்டாளமே வெளியில் வந்துவிட்டது. அந்தக் கட்சியே பலவீனமாகிவிட்டது' என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார். இப்படி மௌர்யா, குர்ஜார், ராஜ்பர், சைனி, காஷ்யப், குஷ்வாஹா என்று பல சமூகத் தலைவர்களை இணைத்திருக்கிறார். பா.ஜ.க-விலிருந்து விலகிய பலரையும், ‘‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை'' என்று சொல்ல வைத்திருக்கிறார்.

இத்தனை பின்னடைவுகளுக்குப் பிறகும் பா.ஜ.க ஈடுகொடுத்து நிற்கிறது. அப்னா தள், நிஷாத் கட்சி என்ற இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அது. ‘‘பிரதமர் மோடியே பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்தான். அவர் தன் இதயத்தில் அவர்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார். பா.ஜ.க-வின் டபுள் என்ஜின் ரயிலில் டிக்கெட் கிடைக்காத அச்சத்தில் இருந்தவர்கள் திப்பு சுல்தானின் ஓட்டை வாகனத்தில் செல்வதற்கு பிளாக் டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்'' என்று அதிருப்தியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார், உ.பி பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்.

ஐந்து ஆண்டு ஆட்சியில் பா.ஜ.க அரசு மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. சமீபத்திய மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மிகுந்த கவனத்துடன் உ.பி தலைவர்களுக்கு இடம் கொடுத்தார் மோடி. உ.பி விவசாயிகள் கோபத்தைத் தணிக்க வேளாண் சட்டங்களையே வாபஸ் பெற்றார்.

வேட்பாளர் பட்டியலிலும் எல்லாச் சமூகத்தினருக்கும் பங்களித்து, பெரும் தலைவர்கள் பட்டாளத்தையே அந்த மாநிலத்தில் களமிறக்கியிருக்கிறது பா.ஜ.க. ஒவ்வொரு தொகுதியிலும் அமைப்புரீதியாக பலம் பொருந்திய கட்சியாகவும் அது இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பது ஓர் இந்துவாக நம் கடமை' என்று நினைக்கும் வாக்காளர்கள் அதிகம் உருவாகியிருக்கும் மாநிலம் அது.

பா.ஜ.க-வும் அகிலேஷும் சமபலத்துடன் மோதும் ஒரு களமாகவே இப்போது உ.பி இருக்கிறது.

*****

இது யாருக்கும் யாருக்குமான யுத்தம்? - உணர்ச்சிப்பெருக்கில் உ.பி தேர்தல்

கனவில் வந்த கிருஷ்ணர்!

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வந்தால், கடவுள்களும் பிஸியாகிவிடுவார்கள். இம்முறை பகவான் கிருஷ்ணர் சிக்கியிருக்கிறார். பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி ஹர்னாத் சிங் யாதவ், ‘‘என் கனவில் இரண்டு முறை கிருஷ்ணர் வந்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மதுராவில் போட்டியிட வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். யோகி மதுராவில் போட்டியிட வேண்டும். கிருஷ்ண ஜென்ம பூமி கனவு நனவாக வேண்டும்'' என்று சொன்னார். இதை வலியுறுத்தி பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் கடிதம் எழுதினார். ஆனால், தாக்கூர் சமூக வாக்குகள் இல்லாத மதுராவில் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க யோகி விரும்பவில்லை. தன் சொந்த மண்ணான கோரக்பூர் சென்றுவிட்டார்.

அகிலேஷ் யாதவும் சும்மா இல்லை. ‘‘தினமும் இரவில் என் கனவில் கிருஷ்ணர் வருகிறார். `தேர்தலில் ஜெயித்து நீதான் ஆட்சி அமைப்பாய்' என்று சொல்கிறார். சமாஜ்வாடி கட்சி உ.பி-யில் ராமராஜ்ஜியத்தை அமைக்கும்'' என்றார். யோகி இதில் கடுப்பாகி, ‘‘அகிலேஷின் கனவில் கிருஷ்ணர் வரமாட்டார். வந்திருந்தால், `தேர்தலில் நீ தோல்வியடையப் போகிறாய்' என்றுதான் எச்சரித்திருப்பார்'' என்றார். ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஓவைசி, ‘‘உ.பி தேர்தல் என்ன கிண்டர் கார்டன் டிராமாவா?'' என்று கேட்டுவிட்டு, ‘‘முஸ்லிம்கள் என் கனவில் வந்து அகிலேஷுக்கு ஓட்டு போடமாட்டோம் என்றார்கள்'' என்று நக்கல் செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism