Published:Updated:

மம்தா கோட்டையைச் சரிக்கும் அமித் ஷா!

பா.ஜ.க-வின் ஆதார சக்தியான ஜனசங்கத்தை உருவாக்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மாநிலம்... தேசப் பிரிவினையின்போது மிக மோசமான கலவரங்கள் நடைபெற்ற மாநிலம்...

பிரீமியம் ஸ்டோரி
நந்திகிராம்... மேற்கு வங்க அரசியலில் தவிர்க்க முடியாத அடையாளம். டாடா நானோ தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை இடதுசாரி அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து இங்கு நடத்திய தொடர் போராட்டங்கள்தான், மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தின. 34 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த இடதுசாரிக் கூட்டணியை வீழ்த்தி 2011-ம் ஆண்டு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் காரணமாக அமைந்தது அந்தப் போராட்டமே! அந்தப் போராட்டத்தில் மம்தாவின் தளபதியாக இருந்தவர் சுவேந்து அதிகாரி.
மம்தா கோட்டையைச் சரிக்கும் அமித் ஷா!

நந்திகிராமில் வென்று மம்தாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, டிசம்பர் 19-ம் தேதி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். அதேநாளில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒரு டஜன் தலைவர்களை இழுத்திருக்கிறது பா.ஜ.க. “தேர்தல் நடக்கும்போது மம்தா தனி மரமாக நிற்பார்’’ என்று அந்த மேடையில் சூளுரைத்திருக்கிறார் அமித் ஷா.

தமிழகத்துடன் சேர்த்து, வரும் மே மாதத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்காக, கடந்த ஓராண்டாகவே உக்கிரமாகக் களமாடும் பா.ஜ.க., செல்வாக்கான தலைவர்கள் பலரை பல்வேறு கட்சிகளிலிருந்து இழுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இது உச்சம் தொட்டிருக்கிறது. ‘சீட்டுக்கட்டு கோபுரம்போல மம்தா கட்சி சரிந்துகொண்டிருக்கிறது’ என வர்ணிக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். இந்தியாவிலேயே அரசியல் படுகொலைகள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்காளம். கொரோனா காலத்திலும் அங்கு கொலைகள் தொடர்கின்றன.

பா.ஜ.க-வின் ஆதார சக்தியான ஜனசங்கத்தை உருவாக்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மாநிலம்... தேசப் பிரிவினையின்போது மிக மோசமான கலவரங்கள் நடைபெற்ற மாநிலம்... காஷ்மீருக்கும் அஸ்ஸாமுக்கும் அடுத்து மக்கள்தொகையில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் மாநிலம்... இப்படிச் சாதகமான பல அம்சங்கள் இருந்தாலும், மேற்கு வங்காளத்தில் தாமரை மலரவில்லை. கொல்கத்தாவின் போ பஜார் பகுதியில் செட்டிலாகியிருக்கும் குஜராத்தி, ராஜஸ்தானி வணிகர்கள் தாண்டி யாரும் பா.ஜ.க பக்கம் வந்ததில்லை. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய அளவுக்கு செல்வாக்கான கட்சியாக அங்கு இப்போது பா.ஜ.க இருப்பதற்குக் காரணமே மம்தா பானர்ஜிதான்.

2011 தேர்தலில் முதன்முறையாக ஜெயித்து ஆட்சிக்கு வந்தார் மம்தா. 294 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 184 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் அவரது ஆட்சி அமைந்தது. அப்படி ஆட்சிக்கு வந்ததுமே, ‘எனக்கு எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது’ என நினைத்தார் மம்தா. தன்னுடன் கூட்டணிவைத்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து முக்கியத் தலைவர்கள் பலரைத் தன் கட்சிக்கு இழுத்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் அடுத்த தேர்தலில் கூட்டணி சேர்ந்தனர். அந்தக் கூட்டணியை அநாயாசமாக வீழ்த்தி, 2016 தேர்தலில் 211 எம்.எல்.ஏ-க்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் மம்தா. எதிர்க்கட்சிகளை உடைக்கும் வேகம் இம்முறை இன்னும் அதிகமானது. மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 17 எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினார்கள். இப்படி ‘மம்தாவை எதிர்க்க யாருமே இல்லை’ என்று ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆசைப்பட்டது பா.ஜ.க. 2019 நாடாளுமன்றத் தேர்தலை இதற்கு இலக்காக நிர்ணயம் செய்தது. இதை மம்தா எதிர்பார்க்கவில்லை.

சாரதா சிட் பண்ட் ஊழல்... மம்தா அரசுக்கு ஏற்பட்ட முதல் தலைவலி. கட்சியில் மம்தாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த முகுல் ராய், இந்த ஊழல் வழக்கில் சிக்கினார். 2017-ம் ஆண்டு இவரை இழுத்து பா.ஜ.க தனது வேட்டையைத் தொடங்கியது. அந்தப் பெரிய மீனில் தொடங்கி, அடுத்தடுத்து ஏராளமான மீன்கள் பா.ஜ.க-வின் வலையில் விழுந்தபடி இருக்கின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவுதான், சுவேந்து அதிகாரி.

மம்தா கோட்டையைச் சரிக்கும் அமித் ஷா!

தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் அரசியல் புள்ளிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்களை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிடுவது பா.ஜ.க-வின் ஸ்டைல். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி தலைவர்கள் வரிசையாக வந்து வங்கத்தை முற்றுகையிட்டனர். விளைவு... 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் 18 பா.ஜ.க வசம் வந்தன. சதவிகிதக் கணக்கு பார்த்தால், மம்தா கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் வெறும் மூன்று சதவிகித வாக்கு வித்தியாசம்தான். சட்டமன்றத் தொகுதிவாரியாகக் கணக்கிட்டால், திரிணாமுல் காங்கிரஸ் 164 தொகுதிகளிலும், பா.ஜ.க 121 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்பகுதிகள், வடக்கு வங்கம், ஜங்கல்மஹால், மத்திய வங்கம், தெற்கு வங்கம் என ஐந்து பிரதேசங்களாக மேற்கு வங்காளத்தைப் பிரிக்கிறார்கள். இதில் தெற்கு வங்கத்தில்தான் கொல்கத்தா உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகள் வருகின்றன. மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் இங்குதான் உள்ளன. இங்கும் மத்திய வங்கத்திலும் இன்னமும் மம்தா கட்சியே கணிசமான செல்வாக்கு செலுத்துகிறது. ‘மற்ற இடங்களைப்போல இங்கும் அதை உடைத்துவிட்டால் வெற்றிதான்’ என நினைக்கிறது பா.ஜ.க. இந்த வட்டாரத்தில் சுவேந்து அதிகாரி போன்ற செல்வாக்குள்ள தலைவர்களை அதற்காகவே தேடித் தேடி வளைக்கிறது.

தொடர்ச்சியான பத்தாண்டுகள் ஆட்சி மீதான மக்கள் அதிருப்தி, சலிப்பு, உறவினர் அபிஷேக் பானர்ஜியை அரசியல் வாரிசாக வளர்ப்பதால் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், சில ஊழல் குற்றச்சாட்டுகள் என எல்லாவற்றையும் வைத்து மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட முடியும் என்று நம்புகிறது பா.ஜ.க.

அமித் ஷா தொடங்கி அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரும் இதற்காக மேற்கு வங்காளத்தை உற்று கவனித்தபடியே இருக்கின்றனர். நம்பிக்கையுடன் பொறுப்புகள் கொடுத்த பலரும் திடீரென வெளியேறுவதால், ‘யார் நம்முடன் விசுவாசமாக இருப்பார்கள், யாரெல்லாம் விலகிப்போவார்கள்’ என்று புரியாமல் குழப்பத்தில் தவிக்கிறார் மம்தா. இன்றைக்கு அவரது கட்சியே கலகலத்துப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களையும் காங்கிரஸையும் அலட்சியம் செய்த மம்தா, இன்று பா.ஜ.க-வை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சிகளின் உதவியைக் கோரும் மனநிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால், ‘பழையவற்றை மறக்காத’ கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியினரும் தனிக்கூட்டணிக்குத் தயாராகிவருகிறார்கள். மம்தாவின் வாக்குவங்கியாக இருக்கும் முஸ்லிம் வாக்குகளைப் பங்கு போட ஒவைஸியும் பிஸியாகிவிட்டார். வருகிற தேர்தல் மம்தாவுக்கு வாழ்நாளில் இதுவரை சந்திக்காத பெரிய சோதனையாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு