Published:Updated:

கட்டுப்பாட்டை இழக்கிறதா அ.தி.மு.க?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

நீக்கப்பட்ட 305 நிர்வாகிகள்... தீர்ந்துகொண்டிருக்கும் லெட்டர் பேடுகள்...

கட்டுப்பாட்டை இழக்கிறதா அ.தி.மு.க?

நீக்கப்பட்ட 305 நிர்வாகிகள்... தீர்ந்துகொண்டிருக்கும் லெட்டர் பேடுகள்...

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில், அமாவாசை வந்துவிட்டாலே கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் அலற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த தினத்தில், புகார்களுக்கு உள்ளான நிர்வாகிகளைப் பதவியிலிருந்து கட்டம்கட்டுவதை வழக்கமாக்கியிருந்தார் ஜெயலலிதா. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு அ.தி.மு.க வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் அமாவாசையாகவே மாறியிருக்கிறது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை மட்டும் 305 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். சசிகலாவைச் சந்தித்தவர்கள், பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசியவர்கள், தி.மு.க-வுடன் தொடர்பிலிருந்தவர்கள், கட்சி விரோத நடவடிக்கை எனப் பல காரணங்களை முன்வைத்து இந்த நீக்கங்கள் நடைபெற்றிருந்தாலும், ‘ஒரு கட்சிக்கு இது ஆரோக்கியமானதா?’ என்கிற அழுத்தமான கேள்வியை முன்வைத்து அ.தி.மு.க-வுக்குள் விவாதம் எழுந்திருக்கிறது!

கட்சியிலிருந்து நீக்கம் என்பது அ.தி.மு.க-வில் புதிதல்ல. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்த பின்பு, சசிகலா, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக சுமார் 3,000 நிர்வாகிகள் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்களுடன் ஒத்துப்போகாத நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டுவந்தனர். அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, குறைவாக இருந்த இந்த நீக்க எண்ணிக்கை, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க அமர்ந்த பிறகு வேகம் பெற்றிருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

கட்டுப்பாட்டை இழக்கிறதா அ.தி.மு.க?

“சுமுகமாகத் தீர்வுகாண்பதற்குத் தலைமை விரும்பவில்லை!”

“கடந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 16 நீக்க அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஜூலையில் மட்டுமே தஞ்சை தெற்கு, கன்னியாகுமரி, சேலம் புறநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 29 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாகக் கூறப்பட்டாலும், நீக்கப்பட்ட அந்த நிர்வாகிகளின் பின்னால் எத்தனை ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பார்கள் என்பதைத் தலைமை யோசிப்பதில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், இந்த நீக்கம் அதிகரித்தது. கடந்த பிப்ரவரியில் மட்டும் 157 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது கட்சிக்குப் பெரிய பின்னடைவு.

ஒரு புகார் வந்தால், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதாவின் வழக்கம். இதற்காகக் கட்சிக்குள் ஐவரணி செயல்பட்டது. இதுபோக, தன்னுடைய ‘சோர்ஸ்’கள் மூலமாகவும் புகார்களை ‘கிராஸ் செக்’ செய்துகொள்வார் ஜெயலலிதா. அதன் பிறகுதான் கடும் நடவடிக்கைகள் பாயும். இப்போது மாவட்டச் செயலாளர்களின் ராஜாங்கம்தான் நடக்கிறது. தங்களுக்குப் பிடிக்காத நிர்வாகிகள், தொண்டர்களைக் கட்சித் தலைமை மூலமாகக் கட்டம் கட்டிவிடுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்ட 10 பேரும், தருமபுரி, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் புறநகர், விருதுநகர் கிழக்கு மாவட்டங்களில் நிலவும் உட்கட்சிப் பூசலால் நீக்கப்பட்டவர்கள். இவர்கள் மீதான புகார்களைக் கட்சித் தலைமை விசாரிக்கவே இல்லை.

மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டிய நெருக்கடியில்தான், பன்னீரும் எடப்பாடியும் இருக்கிறார்கள். கடந்த ஒன்பது மாதங்களில் நீக்கப்பட்ட 305 பேரில், 50 பேர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 16 பேர் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டத்திலேயே, கட்சி விரோத நடவடிக்கைகள் களைகட்டுகின்றன. இது ஏன் நடக்கிறது என்பதை அமர்ந்து பேசி, சுமுகமாகத் தீர்வுகாண்பதற்குத் தலைமை விரும்பவில்லை. ஆனா ஊனா என்றால், லெட்டர் பேடை எடுத்து நீக்க அறிக்கை டைப் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படியே போனால், ‘எங்கள் இருவரையும் தவிர, எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குகிறோம்’ என்று ஒரு நள்ளிரவில் இவர்கள் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று நொந்துகொண்டனர்.

“மாவட்டச் செயலாளர்கள் கையில்தான் கட்சி இருக்கிறது!”

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கழகச் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசினோம். “முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது பண மோசடிப் புகார் எழுந்தபோது, அதைக் காரணமாகக் காட்டி கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட பிறகும்கூட, கட்சியிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருசார்பாகவே அ.தி.மு.க தலைமை நடந்துகொள்வது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. பன்னீர் - எடப்பாடி கட்டுப்பாட்டில் இப்போது கட்சி இல்லை. மாவட்டச் செயலாளர்கள் கையில்தான் கட்சி இருக்கிறது. அதுதான் இது போன்ற நீக்கப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்” என்றார்.

புகழேந்தி
புகழேந்தி
கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம். “கட்சியில் ஒரு லட்சம் நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதில் ஒருசிலர் தவறான பாதையில் செல்லும்போது, கட்சிக் கட்டுப்பாட்டைக் காப்பதற்காக இது போன்ற நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாவட்டச் செயலாளர்கள் முறையாக விசாரணை நடத்தி, அதன் பிறகுதான் நீக்கத்துக்குப் பரிந்துரைக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஒருசில நீக்கத்தைவைத்து, கட்சியில் கட்டுப்பாடு இல்லை என்று சொல்லக் கூடாது. இதனால், கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை” என்றார்.

‘கட்சியில் இது ஒன்றுதான் முக்கியப் பிரச்னையென்றால், அதில் கட்சித் தலைமை கவனம் செலுத்தித் தீர்வு காணுமென்று எதிர்பார்க்கலாம். கட்சியே ஒட்டுமொத்தமாகப் பிரச்னையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வுக்குள் சுழன்றடிக்கும் பிரச்னைகளின் புயல் அவ்வளவு சீக்கிரம் ஓயப்போவதில்லை. அதற்குள் பல லெட்டர் பேடுகள் அச்சடிக்க வேண்டியிருக்கும்’ என்று புன்னகைக்கிறார்கள் அ.தி.மு.க-வை நன்கு அறிந்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism