கட்டுரைகள்
Published:Updated:

மத வெறுப்புப் பிரசாரங்கள்... நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தொடரும் அவலம்!

ராஜா சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜா சிங்

முஸ்லிம்களைக் கொன்று குவிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்” என்றெல்லாம் வெறிக் கூச்சலிட்டார்கள்

இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் (Hate Speeches) அதிகரித்துவருவதாகப் பல தரப்பினரும் கவலை தெரிவித்துவரும் நிலையில், ‘வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக, மாநில அரசுகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’ என்கிற அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதை மதிக்காமல், நாட்டின் பல பகுதிகளிலும் வெறுப்புப் பேச்சுகள் தொடரவே செய்கின்றன.

Iகாஜல் ஹிந்துஸ்தானி
Iகாஜல் ஹிந்துஸ்தானி

பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘சாகல் இந்து சமாஜ்‘ என்ற அமைப்பின் சார்பில் மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில், பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்ட தெலங்கானா எம்.எல்.ஏ-வான டி.ராஜா சிங், மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காளிச்சரண் மகராஜ், மதரீதியான வெறுப்புப் பேச்சுகளை உமிழ்ந்துவரும் யூடியூபர் காஜல் ஹிந்துஸ்தானி, சிறுபான்மையினருக்கு எதிரான பொய்த் தகவல்களைப் பரப்பிவரும் தொலைக்காட்சி நெறியாளர் சுரேஷ் சாவன்கே போன்றவர்கள் பங்கேற்று மத வெறுப்புப் பிரசாரங்களைச் செய்துவருகிறார்கள்.

Iராஜா சிங்
Iராஜா சிங்

கடந்த பிப்ரவரி மாதம், மகாராஷ்டிராவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜா சிங், ``சிவாஜி மட்டும் இல்லாமல்போயிருந்தால், எல்லா இந்துக்களுக்கும் சுன்னத் செய்திருப்பார்கள். இந்துக்கள் யாரும் காவல் துறைக்கு பயப்பட வேண்டாம். லவ் ஜிகாத்தில் ஈடுபடுகிற, பசுக்களைக் கொலைசெய்கிற அப்சல் சந்ததியினருக்குப் பாடம் புகட்டுங்கள்” என்று பேசினார். போலீஸார் இவர்மீது விசாரணைக்கு உத்தரவிட்டபோதும் அதை மதிக்காமல் சோலாப்பூர், ஷீர்டி, அகமதுநகர், ஔரங்காபாத் என மத வெறுப்புப் பேச்சுகளைத் தொடர்ந்துவருகிறார், ராஜா சிங்.

ஔரங்காபாத் கூட்டத்தில் பேசிய நெறியாளர் சுரேஷ் சாவன்கே, ``லவ் ஜிகாத் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டால், ஆட்களைத் திரட்டிக்கொண்டு உடனடியாகச் செல்லுங்கள். அவர்களின் ஆண்குறியை அகற்றுங்கள்” என்றார்.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடைபெற்ற ‘தர்ம சன்சாத்’ என்ற மத நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியவர்கள், ``முஸ்லிம்களைக் கொன்று குவிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்” என்றெல்லாம் வெறிக் கூச்சலிட்டார்கள். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது.

Iராஜா சிங்
Iராஜா சிங்

இந்த நிலையில்தான், வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ``வெறுப்புப் பேச்சுகள் அதிகரிப்பதற்கு அரசின் கையாலாகாத்தனமே காரணம். வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாகப் புகார் வந்தாலும், வராவிட்டாலும் அனைத்து மாநில அரசுகளும் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’' என்று கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதற்குப் பிறகும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், ஜல்கான், தானே உள்ளிட்ட இடங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

தானேவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய நிலேஷ் சந்திர மகாராஜ், ``மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றிருக்காவிட்டால், இந்து சமூகம் இன்றைக்கு மெக்காவிலும் மதீனாவிலும் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும்” என்று பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு தொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

நாட்டின் அமைதியையும், சமூக, மத நல்லிணக்கத்தையும் குலைக்கும் வெறுப்புப் பேச்சுகளை எந்த மத, அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தினாலும், சட்டம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் எந்த பேதமும் இன்றி இதை உறுதிப்படுத்த வேண்டும்!