கட்டுரைகள்
Published:Updated:

மதமாற்ற விவகாரம்... `முரண்பாட்டு மூட்டை, தி.மு.க' - `இந்திய தலிபான், பி.ஜே.பி!'

மதமாற்ற விவகாரம்..
பிரீமியம் ஸ்டோரி
News
மதமாற்ற விவகாரம்..

அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்குச் சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்

``தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக, கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை'' என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. மறுபுறம் `இந்த விவகாரத்தில் தி.மு.க முரண்பாடுகளுடன் நடந்துகொள்கிறது’ என்று விமர்சிக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல் பட்டியைச் சேர்ந்த ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர், 2022, ஜனவரி மாதம் பள்ளி விடுதியில் விஷமருந்தி, தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அவர் படித்துவந்த தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியின் வார்டன் சகாயமேரி (62) கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அந்தப் பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றம் செய்வதாக பா.ஜ.க-வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், மரணத்துக்கு முன்பாக பேசியதாகச் சொல்லப்படும் வீடியோவில் அந்தப் புகாரை மாணவி மறுத்திருந்தார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, வார்டன் சகாய மேரி ஜாமீனில் விடுதலையானார்.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

இதற்கிடையே பாஜக-வைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய், ``அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்குச் சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அது தொடர்பாக, ``மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ``தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக, கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டுகள், தமிழக அரசுக்குப் பொருந்தாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை'' என்று பதிலளித்திருக்கிறது.

நாராயணன் 
திருப்பதி Iகான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
நாராயணன் திருப்பதி Iகான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லையென்றால் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், ‘மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது ஏன்... குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை கேட்கப்படுவதையும் எப்படிப் புரிந்துகொள்வது... இந்தியா என்பது ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கு ஒரு மதத்துக்கு எதிராகப் பேசுவது தவறு. எனினும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது, ஒருவரைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய நினைப்பது மத அடிப்படைவாதத்துக்கு வழிவகுக்கும். இந்த விஷயத்தில் தி.மு.க அரசு முரண்பாடுகளோடு நடந்துகொள்கிறது'' என்றார்.

மதமாற்ற விவகாரம்... `முரண்பாட்டு மூட்டை, தி.மு.க' - 
`இந்திய தலிபான், பி.ஜே.பி!'

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ``தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. களத்தில் நிலவும் உண்மையையே நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசு. பாஜக-வினருக்கு மதத்தைத் தவிர பேசுவதற்கு எதுவும் கிடையாது. ஆப்கானிஸ்தானில் எப்படிப் பெண்கள் படிக்கக் கூடாது என்று தாலிபன்கள் சொல்கிறார்களோ, அவர்களைப் போன்றவர்கள்தான் பா.ஜ.க-வினரும். அவர்கள் பேசுவதைப் புறம் தள்ளிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.