Published:Updated:

சண்டையா... சமாதானமா? - குழப்பியடிக்கும் பா.ஜ.க-தி.மு.க!

மோடி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி - ஸ்டாலின்

பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சமாதான கீதம் பாடுகிறார்கள்’ என்கிற கருத்துரு பரவிய நிலையில், காங்கிரஸ் வட்டாரத்தில் அனல் கிளம்பியது.

சண்டையா... சமாதானமா? - குழப்பியடிக்கும் பா.ஜ.க-தி.மு.க!

பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சமாதான கீதம் பாடுகிறார்கள்’ என்கிற கருத்துரு பரவிய நிலையில், காங்கிரஸ் வட்டாரத்தில் அனல் கிளம்பியது.

Published:Updated:
மோடி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி - ஸ்டாலின்

எதிரும் புதிருமாக இருந்த பா.ஜ.க - தி.மு.க உறவில், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையைத் தொடர்ந்து குழப்ப ரேகைகள் படர ஆரம்பித்திருக்கின்றன. செஸ் ஒலிம்பியாட் விழா போஸ்டர் விவகாரம் தொடங்கி, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பாடிய வாழ்த்துப் பா வரை நிகழ்ந்திருக்கும் நிகழ்வுகள், இரு கட்சிகளுக்கும் இடையே நீடிப்பது, ‘சண்டையா... சமாதானமா?’ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் முயற்சியாக, ‘ஒரே நாடு, ஒரே மொழி’ கொள்கைக்கு எதிராக மீண்டும் உரக்கப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடமிருந்தும் தி.மு.க-வைக் கண்டித்து அறிக்கை வந்திருக்கிறது. ஆனால், குழப்பமோ இன்னும் முழுவதுமாகத் தீர்ந்தபாடில்லை!

கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க-வை தி.மு.க விமர்சித்த அளவுக்கு வேறெந்த மாநிலக் கட்சியும் கடுமையாக விமர்சித்ததில்லை. பிரதமரின் கடந்தகால வருகையின்போது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டதில் தொடங்கி, சமூக வலைதளங்களில் ‘GoBackModi’ பதிவுகளை உலகளவில் டிரெண்ட் செய்தது வரை தி.மு.க-வின் தாக்குதல்கள் அதிரடியாகவே இருந்தன. 2022, மே 26-ம் தேதி மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோதுகூட, முதல்வர் ஸ்டாலினின் உரையில் சூடு பறந்தது. பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே, 16 முறை ‘ஒன்றிய அரசு’ என அழுத்தமாக உச்சரித்தார் முதல்வர். ஜி.எஸ்.டி நிதிப் பங்கீடு, அலுவல் மொழியாகத் தமிழ் மொழி எனக் கோரிக்கைகளை அடுக்கினார். அந்தத் தீப்பொறிப் பேச்சுகளெல்லாம், செஸ் ஒலிம்பியாட் விழாவுக்காக பிரதமர் மோடி வந்தபோது இல்லை. அதைப்போலவே, தொட்டதுக்கெல்லாம் தி.மு.க அரசை விமர்சிக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவைச் சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு, பா.ஜ.க-வினரையே அதிரவைத்தார். சிந்தாந்தப் போராக நீடித்த பா.ஜ.க - தி.மு.க மோதலில், தலைமைகளின் இந்த மனமாற்ற நடவடிக்கைகளால் தொண்டர் களிடையே குழப்பம் அதிகரித்திருக்கிறது. கூட்டணிக்குள்ளும் சலசலப்புகள் எழுந்திருக் கின்றன. இந்தக் குழப்ப நடவடிக்கைகள் நாடாளு மன்றத்திலிருந்தே தொடங்கியதுதான் ‘ஹைலைட்.’

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

போஸ்டர் விவகாரத்தில் பல்டி... சூடான காங்கிரஸ்!

ஜூலை 18-ம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் அவையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை யில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி-க்கள் என்.ஆர்.இளங்கோ, எம்.எம்.அப்துல்லா, கல்யாணசுந்தரம், கிரிராஜன், சண்முகம் உள்ளிட்ட 19 பேர் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, ‘ஜனநாயகம் கொல்லப்பட்டது’ என்கிற வாசகம் எழுதப்பட்ட மாஸ்க்கை அணிந்தபடி இதர தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். ஐக்கிய முற்போக் குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி அவதூறாகப் பேசியதாக, மக்களவையில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்தது காங்கிரஸ். பா.ஜ.க-வின் நடவடிக்கைகளால், நாடாளுமன்றமே அமளி துமளி ஆகிக்கொண்டிருந்தபோதுதான் பிரதமரை தமிழ்நாட்டில் அமோகமாக வரவேற்றது தி.மு.க அரசு.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை நகரம் முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என்பதற்காக, ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் ஒட்டினர். இதற்கு, பலவாறாக எதிர்ப்புகள் கிளம்பியபோதும், தமிழ்நாடு போலீஸார் பா.ஜ.க-வினரை எங்குமே தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டப் பட்ட மோடி படத்தின்மீது கறுப்பு மையைப் பூசினார்கள். உடனே மை பூசியவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து சூடான அறிக்கையும் வந்தது.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சிலர், “பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சமாதானமாவதைச் சில சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்த காவல்துறை, அரசு விளம்பரத்தைச் சேதப்படுத்தியதாக பா.ஜ.க-வினரை ஏன் கைதுசெய்யவில்லை. விழா மேடையில் பிரதமருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின், தனது பேச்சின்போது, ‘20,000 வீரர்களை வைத்து இதற்கு முன்பாக செஸ் போட்டியை நடத்தியவர் மோடி’ என்று புகழ்ந்து தள்ளினார். செஸ் போட்டிக்கான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது, போட்டி நடப்பதற்கு உறுதுணை வகித்ததாக மத்திய அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய அவசியமென்ன... எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’ என்கிற வாசகத்தை உலக அளவில் டிரெண்ட் செய்தது தி.மு.க. ஆனால், இந்த முறை பிரதமருக்கு எதிரான பதிவுகள் கண்காணிக்கப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனரைவைத்து எச்சரிக்கை விடுக்கிறார்கள். சொந்தக் கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் ஐ.பெரியசாமியை ஆறு மணி நேரம் அமலாக்கப் பிரிவு விசாரித்திருக்கிறது. தன் கட்சிக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கையை பா.ஜ.க அரசு எடுத்துவரும் நிலையில், முதல்வரும் பிரதமரும் நீண்டகால நண்பர்கள்போல அளவளாவியது, தி.மு.க-வுக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் தேவையற்ற குழப்பத்தை விதைத்திருக்கிறது. அதேநேரம், விழா மேடை யிலேயே, ‘குறுகியகாலத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்’ என்று புளகாங்கிதம் அடைந்திருக் கிறார் மோடி. கிடைத்த கேப்பிலெல்லாம் தி.மு.க-வைப் பாராட்டி குஷிப்படுத்த பா.ஜ.க-வும் தயங்கவில்லை.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

ரிவர்ஸ் எடுத்த கவர்னர்... வழியனுப்பப் படையெடுத்தத் தலைகள்!

அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா இத்தனை காலம் தள்ளிப்போனதற்குக் காரணமே ஆளுநர்தான். ‘சிண்டிகேட் உறுப்பினரான உதயநிதி தன்னோடு மேடையேறக் கூடாது’ என்று ஆளுநர் ரவி கண்டிஷன் போட்டிருந்தார். இதனால்தான் பட்டமளிப்பு விழாவே தள்ளிப்போனது. ஆனால், திடீர் மனமாற்றமாக ஜூலை 29-ம் தேதி பட்டமளிப்பு விழாவுக்கு தேதி யைக் குறித்தார் ஆளுநர். மதுரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் பெயருக்குக் கீழே தனது பெயர் போடப்பட்டதால், அந்த விழாவையே உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது பரபரப்பானது. அண்ணா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அழைப்பிதழிலும், எல்.முருகனின் பெயருக்குக் கீழேதான் பொன்முடியின் பெயர் இடம்பெற்றது. ஆனாலும், எந்தச் சங்கடமும் இல்லாமல், அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்ததோடு, மத்திய அரசிடம் தமிழ்நாடு வளர்ச்சிக்கு உதவுமாறு கோரிக்கையும் வைத்தார் பொன்முடி. உதயநிதிக்கு எதிரான மனநிலையில் இருந்த ஆளுநர், உதயநிதியுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டது தனிக்கதை. சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டபோது வழக்கத்துக்கு மாறாக 10-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் நேரில் சென்று வழியனுப்பிவைத்தனர். எதற்காக இத்தனை பேர் செல்ல வேண்டும்?

காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-வுக்குமிடையே விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் குயுக்தியான திட்டம். ‘நீங்கள் ஒரு சீட்கூட ஒருபோதும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது’ என ராகுல் காந்தி சவால்விட்டுப் பேசியதை கெளரவப் பிரச்னையாக பா.ஜ.க-வினர் பார்க்கிறார்கள். அதனால்தான், காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்தும் முயற்சியாக இப்படி உறவாடுகிறார்கள். அதற்கு ஒத்திசைவது போல, தி.மு.க-வும் நடந்துகொள்வதுதான் வேதனையளிக்கிறது. இது தி.மு.க-வின் சித்தாந்த அரசியலுக்கு ஆபத்தானது” என்றனர் விரிவாக.

துரைமுருகன் - மோடி
துரைமுருகன் - மோடி

‘இது ஆரோக்கியக் கூட்டணி’ விளக்கிய ஸ்டாலின்!

‘பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சமாதான கீதம் பாடுகிறார்கள்’ என்கிற கருத்துரு பரவிய நிலையில், காங்கிரஸ் வட்டாரத்தில் அனல் கிளம்பியது. தவிர, தி.மு.க-வின் தொண்டர்களும், திராவிட மாடல் சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசும் அமைப்புகளும் குழம்பிப்போயின. குழப்பத்தைத் தீர்க்கும்விதமாக, ஜூலை 30-ம் தேதி கேரள மலையாள மனோரமா சேனல் நடத்திய கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். மலையாளத் திலும் உரையாடி பார்வையாளர்களைக் கவர்ந்த வர், மாநில சுயாட்சி தொடங்கி ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கையின் தாக்கங்கள் குறித்தும் உரையாற்றினார். ‘ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள்’ என்று முதல்வர் பேசியது டிரெண்ட் ஆனது. ‘ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க தலைமை’ என்று முதல்வர் குறிப்பிட்டது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. நிகழ்ச்சியில், தி.மு.க கூட்டணி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கைக்கான கூட்டணி. தி.மு.க தலைமை யிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும்” என விளக்கம் கொடுத்தார் ஸ்டாலின்.

அன்றைய தினம், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ நடத்திய விருது வழங்கும் விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா. அறிவாலயத்தில் சித்தராமையா - ஸ்டாலின் சந்திப்பு நடந்தபோது, மனம்விட்டு சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் கள். நம்மிடம் பேசிய தி.மு.க அமைச்சர்கள் சிலர், “நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்தும், கூட்டணி மனமாச்சர்யங்கள் குறித்தும், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் குறித்தும்தான் அதிகம் பேசப்பட்டது. மற்றபடி, தி.மு.க-விடமிருந்து காங்கிரஸைப் பிரித்தெடுக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருப்பதை இரு தரப்பும் உணர்ந்தே இருக்கின்றன. அதேசமயம், ஒரு மாநில விழாவுக்கு விருந்தினராக வரும் பிரதமரை அரசியல் நாகரிகத்தோடு வரவேற்பதும், பாராட்டுவதும் தவறல்ல. அதுவும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வில், சர்ச்சையை ஏற்படுத்தும்விதத்தில் அரசியல் பேசக் கூடாது. அதனால்தான், கண்ணியத்துடன் முதல்வர் நடந்துகொண்டார்” என்றனர்.

மோடி - கனிமொழி
மோடி - கனிமொழி

சண்டையா... சமாதானமா? தீராத குழப்பம்!

தன் நிலைப்பாட்டை முதல்வர் விளக்கி விட்டாலும், பா.ஜ.க-வினர்தான் பெரிய அளவில் குழம்பிப்போயிருக்கிறார்கள். செல்லுமிட மெல்லாம், ‘நாங்கள்தான் தி.மு.க-வுக்கு மாற்று... நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி’ என்று கூறிவந்தார் அண்ணாமலை. ஆனால், முதல்வ ருடன் பிரதமர் மோடி அளவளாவிய விதமும், தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் உடல்நலத்தை விசாரித்ததும், தி.மு.க எம்.பி கனிமொழியிடம் அவர் தாயின் உடல்நலத்தைப் பாசத்தோடு கேட்டறிந்ததும் பல குழப்பங்களை பா.ஜ.க-வுக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன. உச்சகட்டமாக, ஜூலை 31-ம் தேதி குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, ‘தமிழ்நாடு இந்தியா வின் எலைட் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியா விலேயே சிறந்த காவல்துறையாகத் தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது’ என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சிலர், “தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது, உளவுத்துறை செயல்படவில்லை என அண்ணாமலை ஒருபக்கம் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காவல்துறையை ஏகத்துக்கும் பாராட்டியிருக்கிறார் வெங்கைய நாயுடு. டெல்லியின் வியூகம் எது என்பதே தெரியவில்லை. ‘நாம சண்டை செய்யறோமா, இல்லை சமாதான மாப் போறோமா?’ எனத் தொண்டர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். தி.மு.க-வினர் மத்தியிலும் இந்தக் குழப்பம் இருக்கிறது. அதேசமயம், ஸ்டாலின் கேரள நிகழ்ச்சியில் பேசியதும், அண்ணா பல்கலையின் கல்வித்தரம் குறைந்திருப் பது குறித்தும், தேர் விபத்துகள் தொடர்வது குறித்தும் அண்ணாமலை அறிக்கைவிட்டதும் பழையபடி எதிரெதிர் திசையில் களத்துக்கு வந்ததுபோல் இருக்கிறது. ஆனாலும், டெல்லியின் கணக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, இது சண்டையா, சமாதானமா, ராஜதந்திரமா என்பது எங்களுக்கே புரியவில்லை” என்றனர்.

சிந்தாந்தத்தின் அடிப்படையில் மோதிக் கொண்ட தி.மு.க - பா.ஜ.க இடையே, சமாதானத் தென்றல் வீசுவதாக காங்கிரஸ் கட்சி சந்தேகப்பட்டு கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. அதேநேரம், உறவுக் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர் பா.ஜ.க - தி.மு.க-வினர். பாராட்டுவது விமர்சிப்பது, பாராட்டுவது விமர்சிப்பது என மாறி மாறி அடுக்கி விநோத அரசியல் சாண்ட்விட்ச்சை சமைத்துக்கொண்டிருக்கின்றன இரு கட்சிகளும். இதில் சிக்கித்தவிப்பது என்னவோ தொண்டர்கள்தான்!