Published:Updated:

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

- நிலாந்தன்

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

- நிலாந்தன்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

ஏறக்குறைய இருபத்தொன்பது மாதங்களுக்கு முன்பு யாருக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களோ அவரை இப்பொழுது ‘வீட்டுக்குப் போ’ என்று கேட்டு வீதியில் இறங்கியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிய “கோட்டா, வீட்டுக்குப் போ” என்ற வசனத் தொடரும் ஒரு மந்திர வார்த்தையாக மாறியது.

சிங்கள மக்கள் யுத்த காலத்தில்கூட இந்த அளவுக்கு சமூக அமைதியை இழந்ததில்லை. நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் ஓர் அரசுத் தலைவரின் இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டமை என்பது இதுதான் முதல் தடவை. வெல்லக் கடினமான ஒரு யுத்தத்தை வென்று கொடுத்த காரணத்தால் சிங்கள மக்களால் ‘இரண்டாவது துட்டகெமுனுக்களில் ஒருவர்’ என்று கொண்டாடப்பட்டவர் இவ்வளவு விரைவாக தனது கீர்த்தியை இழப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை அரசாங்கத்துக்கு எதிராகக் கொதிக்க வைத்திருக்கிறது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தோடு முரண்பட்டுக் கொண்டு வெளியேறிவருகின்றன.

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்
இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

மக்கள் அலையலையாக வீதிக்கு வந்தார்கள். சில ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒழுங்குபடுத்தின. சில ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பாக எழுந்தன. அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அறிவித்து ஊரடங்குச் சட்டத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்த நினைத்தது. ஆனால் நிலைமை கைமீறிப் போய் விட்டது. சிங்கள மக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறி ஆங்காங்கே தெருவில் இறங்கத் தொடங்கினார்கள். அடுத்த கட்டமாக படையினரை மக்களுக்கு எதிராக இறக்கினால் மட்டும்தான் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை. எனவே அரசாங்கம் இறங்கி வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சரவை தன் பதவியை ராஜினாமா செய்தது.

முதலில் ராஜினாமா செய்தது மஹிந்தவின் மகன் நாமல்தான். அது மட்டுமல்ல, சமூக வலைதளங்களை அரசாங்கம் முடக்கியது தொடர்பாக விமர்சனக்  கருத்தொன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவ்வாறு நாமல் ராஜபக்ச முதலில் பதவி விலகி அதன்மூலம் தனது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முற்படுகிறார். அதாவது ராஜபக்ச குடும்பத்தின் அடுத்த வாரிசு தன்னைப் பலப்படுத்துகிறது என்று பொருள்.

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்
இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

சிங்கள மக்கள் கேட்பது ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பத்தையும் ‘வீட்டுக்குப் போ’ என்றுதான். எனினும் கோட்டாபயவும் மஹிந்தவும் பதவிகளைத் துறக்கவில்லை. பதிலாக அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து அதன்மூலம் மக்களுடைய கோபத்தைத் தற்காலிகமாகத் தணிக்கப் பார்க்கிறார்கள். தமது போராட்டத்தின் பலனாக அமைச்சரவை மாற்றப்படுகிறது என்ற திருப்தியோடு மக்கள் தற்காலிகமாக அமைதி அடையக்கூடும்.

புதிய அமைச்சரவையில் அரசாங்கம் மந்திரவாதிகளை நியமித்தாலும்கூட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு உடனடியாக மீள முடியுமா என்ற சந்தேகம் உண்டு. தவிர, புதிய அமைச்சரவையானது ஓர் இடைக்கால அரசாங்கமாக அல்லது தேசிய அரசாங்கமாக அமையக்கூடிய வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், எதிர்க்கட்சிகள் அதில் இணையப்போவதில்லை என்று அறிவித்து விட்டன. ஆனால் அரசாங்கத்தின் தோல்விகளை தமது வெற்றிகளாக மாற்றத் தேவையான ஐக்கியமும் தலைமையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் குறைவு.

எனவே புதிய அமைச்சரவையின் மூலம் நிலைமை தற்காலிகமாகத்தான் தணிக்கப்பட்டிருக்கிறது. எந்த மாற்றத்தைச் செய்தாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி கிடைக்கவில்லை என்றால் சிங்கள மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள்.

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

இவ்வாறு தென்னிலங்கை கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் வடக்கு கிழக்கு தமிழ்ப்பகுதிகளில் நிலைமை எவ்வாறு உள்ளது?

பெருமளவுக்கு அமைதியாக உள்ளது. இப்பொழுது நிலவும் நெருக்கடி முழு நாட்டுக்கும் உரியது. அது இனரீதியானது அல்ல. எனினும் தென்னிலங்கையில் நடக்கும்  ஆர்ப்பாட்டங்களில் சிங்களமக்கள் தாமாக முன்வந்து பெருந்திரளாக இணைவதைப் போல தமிழ் மக்கள் இணைவதாகத் தெரியவில்லை.

யாழ்ப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் முதலில் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தைச் செய்தார்கள். அடுத்த நாள் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினார்கள். அதில் இணைந்த தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு. அதோடு, கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காணப்பட்டார். இவைதவிர தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக சிங்கள மக்களோடு இதுவரையிலும் இணையவில்லை.

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

ஒரு பகுதி தமிழர்கள் நம்புகிறார்கள், அது கர்மபலன் என்று. அதாவது, இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சக்கள் வெற்றி பெற்றபொழுது அதைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்கள் இப்பொழுது அதே வெற்றி நாயகரை ‘வீட்டுக்குப் போ’ என்று கேட்பது முன்வினைப்பயன் என்று நம்பும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அதை ரசிக்கிறார்கள். தவிர கடந்த 12 ஆண்டுகளுக்குள் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் ராஜபக்சக்களுக்கு எதிராகவே வாக்களித்தார்கள். ஆனால் சிங்கள மக்கள்தான் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவாக ஒரு இரும்பு மனிதன் வேண்டும் என்று கேட்டு கோட்டாபய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்தார்கள்.

எனவே, சிங்கள மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்திற்காகப் போராடுகிறார்கள் என்றும், ஆனால் ஆட்சி மாற்றங்களால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். 2015-ம் ஆண்டு அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபொழுது அதில் தமிழ்க் கட்சிகள் மறைமுகப் பங்காளிகளாகச் செய்யப்பட்டன. ஆனால் முடிவில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். எனவே மீண்டும் ஒரு தடவை ஆட்சி மாற்றத்தின் கருவிகளாகத் தொழிற்பட பெரும்பாலான தமிழ் மக்கள் தயாரில்லை.

இனப்பிரச்னையும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும்

சிங்கள மக்களின் கோபம் ஒரு ஆட்சி மாற்றத்தோடு தணிந்துவிடும். ஆனால் தமிழ் மக்களுக்கு அதனால் நீதி கிடைக்குமா என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு பெரும்பாலான சிங்கள எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை. மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பெரும்பாலான சிங்களக் கட்சிகள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் நிலையிலோ அல்லது இறந்த காலத்துக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலோ பெரும்பாலான சிங்களக் கட்சிகள் இல்லை.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சிங்கள மக்களுக்கும் நீதி கிடைக்காது. தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களை இணைத்துப் பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்பா விட்டால் பொருளாதாரத்தை நிரந்தரமாகக் கட்டியெழுப்ப முடியாது. இப்பொழுது நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பொருளாதாரத்தைத் தற்காலிகமாக முண்டு கொடுத்து நிமிர்த்தும் நோக்கிலானவை. நிரந்தரமான ஒரு தீர்வு வேண்டும் என்றால் அது இனப்பிரச்னைக்கான தீர்விலிருந்தே தொடங்க வேண்டும். ஏனென்றால், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளின் வேர் இனப்பிரச்னையில் இருந்தே தொடங்குகிறது. இனப்பிரச்னையின் விளைவாக வீங்கிக் கொழுத்த ராணுவம் நாட்டின் பட்ஜெட்டில் பெருந்தொகையை விழுங்கிவருகிறது. கடந்த சில தசாப்தங்களாக பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியின் கூட்டுத் தொகையைவிடவும் பல மடங்கு அதிகமானது. எனவே பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்பது இனப் பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்தே தொடங்குகிறது.