Published:Updated:

இலங்கையில் சரியும் பொருளாதாரம்! - வைரஸ்-இனப்பிரச்னை- கடன்

இலங்கையில் சரியும் பொருளாதாரம்!
பிரீமியம் ஸ்டோரி
இலங்கையில் சரியும் பொருளாதாரம்!

நிலாந்தன்

இலங்கையில் சரியும் பொருளாதாரம்! - வைரஸ்-இனப்பிரச்னை- கடன்

நிலாந்தன்

Published:Updated:
இலங்கையில் சரியும் பொருளாதாரம்!
பிரீமியம் ஸ்டோரி
இலங்கையில் சரியும் பொருளாதாரம்!

அண்மை வாரங்களாக இந்திய யூடியூபர்களும், இந்திய ஊடகங்களும் ஒரு விஷயத்தின்மீது அதிக கவனத்தைக் குவித்துவருகின்றனர். ‘இலங்கைத் தீவு பொருளாதாரரீதியாக வங்குரோத்து (காலியான) நிலையை அடைந்துவிட்டது’ என்பதே அது!

நாட்டின் அந்நியச் செலாவணி வரத்து குறைந்துவிட்டது. வைரஸ் தொற்றால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டமையே உடனடிக் காரணம். நாட்டுக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டித்தரும் தொழில்துறைகள் படுத்துவிட்டன. தைத்த ஆடைகள் உற்பத்தித்துறை, சுற்றுலாப் பயணத்துறை, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இலங்கையர்கள் சம்பாதிக்கும் பணம் ஆகிய அனைத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. விளைவாக, நாட்டின் அந்நியச் செலாவணி வரத்து குறைந்துவிட்டது. அதனால் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் முழுவதுமாக நிறுத்திவிட்டது. அதுமட்டுமல்ல... பல பொருள்களின் இறக்குமதிகளையும் நிறுத்திவிட்டது. கொழும்பில் இப்போது அமெரிக்க டாலரைக் காண முடியவில்லை. இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துகொண்டே போவதால், வணிகர்கள் டாலரைப் பதுக்குகிறார்கள்!

இலங்கையில் சரியும் பொருளாதாரம்!  - வைரஸ்-இனப்பிரச்னை- கடன்

வரிசைகட்டும் துயரம்... திணறும் அரசாங்கம்!

சமூக முடக்க காலத்தில் பொருள்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில், வணிகர்கள் பொருள்களைப் பதுக்குகிறார்கள். இதனால், சாதாரண மக்கள் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு மக்கள் பால் மாவுக்காக வரிசையில் நின்றார்கள். அதன் பிறகு சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நின்றார்கள். கடந்த வாரம் கோதுமை மாவுக்காக வரிசையில் நின்றார்கள். இப்போது சீனிக்காக.

இவ்வாறாக, ஒருபுறம் பொருள்களுக்காக வரிசை. இன்னொருபுறம் வாக்‌ஸினுக்காக வரிசை. இவை தவிர, மின்தகன மேடைகளில் உடல்களைத் தகனம் செய்வதற்காகவும் மக்கள் காத்திருக்கிறார்கள். இதுதான் இப்போதுள்ள இலங்கைத் தீவு.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு மேஜர் ஜெனரலை அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளராக நியமித்து, அவருக்கு அவசரகாலச் சட்டத்தின்கீழ் அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறது அரசாங்கம். ஒரு பெருந்தொற்றுச் சூழலுக்குள் நாட்டை அதிகம் ராணுவமயப்படுத்திய ஓர் அரசாங்கமே இலங்கைத் தீவில் இருக்கிறது. எனினும், யாரை நியமித்தும் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வைரஸுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே அரசாங்கம் தடுமாறுகிறது. வைரஸைக் கட்டுப்படுத்துவதென்றால் நாட்டை முடக்க வேண்டும். நாட்டை முடக்கினால், ஏற்கெனவே சரிந்துபோயிருக்கும் பொருளாதாரம் மேலும் முடங்கிவிடும். அதனால், நாட்டை முழுமையாக முடக்க அரசாங்கம் தயங்குகிறது. அதனால்தான், கடந்த பல மாதங்களாக மருத்துவர்களும் துறைசார் நிபுணர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முழு அளவு சமூக முடக்கத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்கியது. இதுவரை அறிவிக்கப்பட்ட பெரும்பாலான சமூக முடக்கங்கள் அரைச் சமூக முடக்கங்கள்தான். அவை முழுச் சமூக முடக்கங்கள் அல்ல என்பதால்தான், அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் வைக்கப்பட்டன. முதலில் ‘போக்குவரத்து கட்டுப்பாடு’ என்று சொன்னார்கள். அதன் பிறகு ‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு’ என்று சொன்னார்கள். இப்போது ‘ஹைபிரிட் முடக்கம்’ என்று கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு பெயர்களால் ஏன் அழைக்கவேண்டியிருக்கிறது? ஏனெனில், அது ஒரு முழு முடக்கம் இல்லை என்பதால்தான்!

இலங்கையில் சரியும் பொருளாதாரம்!  - வைரஸ்-இனப்பிரச்னை- கடன்

சீனாவின் கடன்பொறி... தீர்வுகாணப்படாத இனப்பிரச்னை!

வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையும், தைத்த ஆடைகள் ஏற்றுமதித் துறையும் பெருமளவுக்கு முடங்கிவிட்டன. சமூக முடக்கத்தின் காரணமாக அவை மேலும் முடங்கினால் பொருளாதாரம் தாங்காது. எனவே, சமூகத்தை முழுமையாக முடக்க அரசாங்கம் தயாரில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட எல்லாச் சமூக முடக்கங்களும் மருத்துவ நோக்கு நிலையிலிருந்து அல்ல... பொருளாதார நிலையிலிருந்தே அறிவிக்கப்பட்டன. எனினும், பொருளாதாரத்தை நிமிர்த்த முடியவில்லை. பசில் ராஜபக்சேவை நிதியமைச்சராக நியமித்ததன் மூலமும் அதை நிமிர்த்த முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஏனெனில், வைரஸ் வந்துதான் இலங்கைத் தீவின் பொருளாதாரம் முடங்கியது என்பதல்ல. வைரஸுக்கு முன்னரே அது சீனாவின் கடன்பொறியில் சிக்கிய ஒரு பொருளாதாரம்தான். இலங்கைத் தீவின் பொருளாதாரம் பல தசாப்தங்களுக்கு முன்னரே சரியத் தொடங்கிவிட்டது. அதற்கு மூலகாரணம் இனப்பிரச்னைதான். தென்னாசியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி முதலில் திறக்கப்பட்டது இலங்கைத் தீவுதான். இது நடந்தது 1977-ல். ஆனால், அதன் பிறகு திறக்கப்பட்ட நாடுகள் எங்கேயோ போய்விட்டன. இனப்பிரச்னை காரணமாக இலங்கை தொடர்ந்து பின்தங்கிவிட்டது. ஆயின், 2009-க்குப் பிறகு பொருளாதாரத்தை நிமிர்த்தியிருக்க வேண்டும். ஏன் நிமிர்த்த முடியவில்லை? ஏனென்றால், இலங்கைத் தீவு யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறிவிட்டது. அதாவது, இனப்பிரச்னைக்குத் தீர்வுகாணப்படவில்லை. இனப்பிரச்னை தீர்க்கப்பட்டால்தான், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால்தான் முதலீட்டுக் கவர்ச்சிமிக்கதாக நாடு மாறும்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. ஏற்கெனவே யுத்தத்தால் சுருண்டுபோயிருந்த பொருளாதாரம், சீனாவின் கடன்பொறிக்குள் இலகுவாய்ச் சுருண்டது. இப்போது வைரஸ் தாக்கத்தால் அது மேலும் சுருண்டுவிட்டது. அதை நிமிர்த்த அரசாங்கம் திணறுகிறது.

சர்வதேச அரசியல்... இலங்கையின் கடன்... விடாத இனப்பிரச்னை!

அண்மையில் இலங்கை அரசாங்கம், பங்களாதேஷிடம் கடன் வாங்கியது. பங்களாதேஷ் 1972-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, ஒரு வறிய நாடாக இருந்தது. இப்போது இலங்கைத் தீவுக்கு கடன் வழங்கும் வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடமிருந்து 150 மில்லியன் டாலரையும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 780 மில்லியன் டாலரையும், சீனாவிடமிருந்து 300 மில்லியன் டாலரையும் அண்மையில் கடனாகப் பெற்றிருக்கிறது.

தைத்த ஆடைகள் ஏற்றுமதியில், ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகை இலங்கை அரசாங்கத்துக்கு அனுகூலமானது. ஆனால், இந்தச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவதென்றால், ‘இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும்’ என்று ஐரோப்பிய யூனியன் கேட்கிறது. இங்கேயும் பொருளாதாரத்தோடு இனப்பிரச்னை தொடர்புறுகிறது. இங்கு மட்டுமல்ல... எல்லா விடயங்களிலும் இலங்கைத் தீவின் பொருளாதாரம் இனப்பிரச்னையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.

சரிந்துவிழும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, மிகப்பெரிய சீனப் பொருளாதாரத்தால் முடியும். ஆனால், முழுக்க முழுக்க சீனாவைச் சரணடைந்தால், அதை இந்தியாவும் சகித்துக்கொள்ளாது; அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும் சகித்துக்கொள்ளாது. சீனாவை முழுமையாகச் சார்ந்து நின்றால், அதன் விளைவுகள் இனப்பிரச்னையில்தான் எதிரொலிக்கும். ஏனென்றால், இலங்கைத் தீவில் கால்பதிக்க முற்படும் எந்தவொரு வெளித்தரப்பும் இனப்பிரச்னைக்கு ஊடாகத்தான் இலங்கைத் தீவினுள் நுழைகிறது.

இலங்கையில் சரியும் பொருளாதாரம்!  - வைரஸ்-இனப்பிரச்னை- கடன்

சீனாவை நோக்கி அதிகமாகச் சாய்ந்தால் மறுபடியும் இந்தியாவும் அமெரிக்காவும் இனப்பிரச்னையை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் ராஜபக்‌சேக்களுக்கு உண்டு. ஏற்கெனவே அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்பிரச்னையை ஒரு பேசுபொருளாக வைத்திருக்கின்றன. இந்தியாவும் ஐ.நா-வில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவித்திருக்கிறது. ‘இனப்பிரச்னைக்கான தீர்வும், இலங்கைத் தீவின் ஆள்புல ஒருமைப்பாடும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட முடியாதவை’ என்று ஐ.நா-வுக்கான இந்தியப் பிரதிநிதி கடந்த ஜெனீவா கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தார். அதாவது, இனப்பிரச்னையைத் தீர்க்கவில்லையென்றால், இலங்கைத் தீவின் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியாது என்று பொருள். இதே கருத்தை அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய துணை வெளிவிவகார அமைச்சரும் மீள வலியுறுத்தியிருந்தார். மேலவையில் வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலாக அவர் அவ்வாறு கூறியிருந்தார். எனவே, சீனாவுக்கு எதிராக வெளித்தரப்புகள் இலங்கைத் தீவினுள் தலையிட விரும்பினால், அதற்கு இனப்பிரச்னைதான் ஒரே வழி என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

அதனால்தான், சீனாவில் மட்டுமல்லாமல் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவிகளைப் பெற வேண்டுமென்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இப்போது இலங்கை அரசாங்கம், கடன் கேட்டு மேற்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. அதற்காக, அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற பசில் ராஜபக்சேவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. மேற்கு நாடுகளால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் ஜி.எல்.பீரிஸை புதிய வெளியுறவு அமைச்சராக நியமித்திருக்கிறது. மிலிந்த மொரகொடவை ஒரு மூலோபாய திட்டத்தோடு டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது.

எனினும், இவ்வாறான முயற்சிகளால் சரிந்துவிழும் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான ஒரே முன் நிபந்தனை என்னவென்றால், இனப்பிரச்னைக்குத் தீர்வைக் காண்பதுதான். ஆனால், யுத்த வெற்றி வாதத்துக்குத் தலைமை தாங்கும் ராஜபக்சேக்களால் இனப்பிரச்னைக்குத் தீர்வைக் காண முடியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism