Published:Updated:

பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணமல்ல!

ஜீவன் தொண்டமான்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவன் தொண்டமான்

இலங்கை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணமல்ல!

இலங்கை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Published:Updated:
ஜீவன் தொண்டமான்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவன் தொண்டமான்

இந்திய வம்சாவளிகளான இலங்கை மலையகத் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’, தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, ராஜபக்சே அரசின் அமைச்சரவையிலிருந்து விலகியிருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் இலங்கை அரசில் பங்கெடுத்து வந்த இ.தொ.கா., தற்போது இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்துவருகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில், இ.தொ.கா பொதுச்செயலாளரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனது பூர்வீக கிராமம் எம்.புதூருக்கு வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், மக்கள் போராட்டத்துக்கும் உண்மையான காரணம் என்ன?”

‘‘கடந்த வருடங்களில் இலங்கை அரசு எடுத்த சில தவறான முடிவுகள்தான் இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம். உதாரணமாக, தேர்தல் வாக்குறுதியில் ‘10 வருட காலத்துக்குள் 50% கெமிக்கல் உரப் பயன்பாட்டைக் குறைப்போம்’ என்றுதான் கோத்தபய ராஜபக்சே கூறியிருந்தார். அப்படிப் பார்த்தால், வருடத்துக்கு 5% குறைத்தால் சரியானதாக இருந்திருக்கும். ஆனால், இவரோ ஓவர் நைட்டில் 100%-யும் தடைசெய்வதாக அறிவித்துவிட்டார். இந்தத் தடையால், தேயிலைத் தொழில் 30 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. தோட்டத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அடுத்த வருடம்தான் இதன் முழு பாதிப்பும் தெரியவரும்.’’

“ராஜபக்சே குடும்பத்தினர்தான் இலங்கைப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் ஊடகமும் குற்றம்சாட்டுகின்றனவே?”

“இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. வேறு பல பின்னணிகளும் உள்ளன. அது பெரிய கதை. இதில், எல்லோருக்குமே பங்கிருக்கிறது. நாங்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டாலும், அவர்கள் தலையில் எல்லாப் பழியையும் போட்டு, தப்பிக்க விரும்பவில்லை.”

‘‘இலங்கையில், தமிழர்களுக்கு எதிராகப் பல்வேறு பிரச்னைகள் நடந்தபோதும்கூட, ராஜபக்‌சே அரசுக்கு ஆதரவாக இருந்துவந்த தங்கள் கட்சி, இப்போது மட்டும் ராஜினாமா செய்தது ஏன்?”

“இலங்கையில், 2009 வரை போர் நடந்தது. இதை, தமிழர் - சிங்களருக்கு இடையேயான போராக மீடியா சித்திரித்தது. ஆனால், இது ஓர் அமைப்புக்கும் அரசுக்கும் இடையேயான எல்லை சார்ந்த, உரிமை சார்ந்த போர் என்பதுதான் உண்மை. இதில் நாங்கள் நடுநிலை வகித்தாலும், பல ஆண்டுகளாக மலையகத் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. 2009-ல் போர் முடிந்த பிறகு, வெற்றிக்கூட்டத்தை மகிந்த ராஜபக்சே நடத்தினார். அப்போது அமைச்சராக இருந்த எங்கள் தலைவர் ஆறுமுக தொண்டமான், வெற்றிக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம், அந்த வலி எங்களுக்கும் தெரியும்.

மலையக மக்களின் நலனுக்காகத்தான் நாங்கள் அரசாங்கத்துடன் இருந்தோம். அதாவது, எங்களுக்கு அபிவிருத்திரீதியான அரசியல் தேவைப்பட்டது. அதனால் அரசில் இருந்தோம். ஆனால், தற்போது பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கெமிக்கல் உரத் தடையால், எம் நுவரேலியா மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, மக்கள் பிரச்னையை ஆலோசித்துத்தான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகினோம்.’’

‘‘இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீர, உங்கள் கட்சி சொல்லும் தீர்வு என்ன?’’

“ஜனாதிபதி, அவராகவே ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அவர் ஒத்துவரவில்லையென்றால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை நீக்கலாம். அதேநேரம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தால், நாங்கள் நடுநிலை வகிப்போம் என்று கூறியிருந்தோம். அதைக்கூட சிலர் விமர்சித்தார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று நாங்கள் ஆதரவு அளித்தால், நாளை அதே கட்சியிலிருந்துதான் அடுத்த ஜனாதிபதியும் பொறுப்புக்கு வருவார் எனும்போது, எங்கள் மக்களின் நலன் பாதிக்கப்படும். எனவே இதற்கு ஒரே வழி, ஜனாதிபதிக்கான அதிகாரத்தைக் குறைத்து, பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படுவதுதான்!”

பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணமல்ல!

“இலங்கையில் நடைபெற்றுவரும் போராட்டங்களைப் பயன்படுத்தி, ஜே.வி.பி போன்ற இடதுசாரி அமைப்புகள் ஆட்சியைக் கைப்பற்றவிருப்பதாகச் சொல்கிறார்களே?”

“வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இலங்கையில் எல்லாக் கட்சியினரும் இப்போது அரசியல் செய்ய நினைப்பார்கள். அதேநேரம், இலங்கையில் இனி வரும் காலம் மிக மோசமானதாக இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். காரணம், இலங்கை அரசு இப்போது உலக வங்கியில் (ஐ.எம்.எஃப்) உதவி கேட்டு நிற்கிறது. அவர்களோ இலங்கைப் பொருளாதாரத்தைச் சரிசெய்ய சில நிபந்தனைகள் விதித்துள்ளார்கள். அதையெல்லாம் நடைமுறைப்படுத்தினால் 80% அரசு ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும். இது நாட்டில் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் இனி ஆட்சியில் அமர்பவர்களுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன.’’

‘‘இலங்கைப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் போராட்டங்கள், சிங்கள - தமிழ் மக்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்கிறதா?”

‘‘தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தார்கள். இப்போது, அவர்களுக்கும் பாதிப்பு என்றதும் அரசுக்கெதிராக வீதிக்கு வந்துவிட்டார்கள். ஜனநாயகரீதியான போராட்டங்களுக்குத் தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் ஆதரவளித்துவருகிறார்கள். எல்லோரும் சிங்களர், தமிழர், முஸ்லிம் என்பதை மறந்து, இலங்கையர் என்று உணரும்போதுதான் நாட்டில் நிலையான ஆட்சியும் சமத்துவமும் வரும். ஆனால், `புத்த மதத்தினருக்கே முன்னுரிமை’ என்கிற சட்டத்தை மாற்றாதவரை இலங்கையில் சமத்துவம் என்பது கேள்விக்குறிதான்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism