தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேர், இரண்டு விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில், பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் ஒன்பது விசைப்படைகளில் வந்து தமிழக மீனவர்களைச் சுற்றிவளைத்தனர். இதையடுத்து தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்திருப்பதாகக் கூறி, தமிழக மீனவர்கள் 21 பேரையும், இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றி, கைதுசெய்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படட தமிழக மீனவர்கள் 21 பேர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. முன்னதாக நேற்று முதல் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றி அவர்களைக் கைதுசெய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
