Published:Updated:

“நாங்கள் ஏன் போராட வேண்டும்?” - இலங்கை தமிழ்ப் பகுதிகளின் நிலவரம் என்ன?

யாழ்ப்பாணம்
பிரீமியம் ஸ்டோரி
யாழ்ப்பாணம்

- யாழ்ப்பாணத்திலிருந்து லைவ் ரிப்போர்ட்!

“நாங்கள் ஏன் போராட வேண்டும்?” - இலங்கை தமிழ்ப் பகுதிகளின் நிலவரம் என்ன?

- யாழ்ப்பாணத்திலிருந்து லைவ் ரிப்போர்ட்!

Published:Updated:
யாழ்ப்பாணம்
பிரீமியம் ஸ்டோரி
யாழ்ப்பாணம்

படங்கள்: எம்.ஆர்.சிவக்குமார், எஸ்.கிரிஷாந்த்

கடந்த இதழில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடக்கும் போராட்டங்கள் பற்றியும், கள நிலவரம் பற்றியும் பதிவுசெய்திருந்தோம். இந்த முறை இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ்ப் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் சென்றோம். அங்கு நமக்குக் கிடைத்த தகவல்களையும், தமிழ்ப் பகுதிகளின் நிலையையும் விரிவாகப் பார்ப்போம்!

“நாங்கள் ஏன் போராட வேண்டும்?” - இலங்கை தமிழ்ப் பகுதிகளின் நிலவரம் என்ன?

அழியாத போர்ச்சுவடுகள்!

தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 400 கி.மீ தூரத்திலிருக்கிறது யாழ்ப்பாணம். கொழும்பு பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி, எட்டு மணி நேரம் பயணப்பட்டு யாழ்ப்பாணத்தை அடைந்தோம். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்த ஒளவையார் சிலை நம்மை வாஞ்சையோடு வரவேற்றது. ஆங்காங்கே போர்ச்சுவடுகளைக் காண முடிந்தது. இடிபட்டுக் கிடக்கும் பெரிய கட்டடங்கள், குண்டு போட்டு தகர்க்கப்பட்ட சிமென்ட் ஆலை எனப் பெரும்பாலான இடங்களில் போர்த்தடங்கள் அழியாமல் இருந்தன. யாழ்ப்பாணத்தில் நாம் கண்ட மக்களில், சிலருக்குக் கைகள் இல்லை, சிலருக்குக் கால்கள் இல்லை, பலரிடமும் போரின்போது ஏற்பட்ட காயங்கள் மறையாமல் இருந்தன.

யாழ்ப்பாண நகரமே ஒரு சிறிய கிராமம்போலக் காட்சியளித்தது. போருக்குப் பின்னர் அந்நகரம் எந்தவொரு வளர்ச்சியையும் சந்திக்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. 24 மணி நேரமும் யாழ்ப்பாணம் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில், துப்பாக்கி ஏந்திய சிங்கள ராணுவத்தினர் உலவிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையே சதா ஒரு அச்சுறுத்தலாக குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருக்கும் ராணுவத்தின்மீது தமிழ் மக்களுக்குக் கடும் வெறுப்பிருக்கிறது. இங்கு அவதானிக்க முடிந்த மற்றொரு விஷயம், கொழும் பிலிருந்ததுபோல யாழ்ப்பாணத்தில், பெட்ரோல், மண்ணெண்ணெய் என எந்தப் பொருளை வாங்கவும் மக்கள் வரிசையில் நிற்கவில்லை. காரணத்தை அவர்களிடமே கேட்டோம்.

“நாங்கள் ஏன் போராட வேண்டும்?” - இலங்கை தமிழ்ப் பகுதிகளின் நிலவரம் என்ன?

போர் தந்த அனுபவம்!

``ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் இங்கே வரிசையில நின்னுதான் எல்லாத்தையும் வாங்கினோம். ஆனா, கொழும்புல இருக்குற மாதிரி பெரிய வரிசையெல்லாம் கிடையாது. எல்லாப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பிச்சதுமே, அதுக்கான மாற்று ஏற்பாடுகளை செஞ்சு வெச்சுட்டோம். காஸ் தட்டுப்பாடு இருக்கிறதால, முடிஞ்ச அளவுக்கு விறகு அடுப்புல சமையல் பண்ணிக்குறோம். கொரோனா காலத்துல வீட்டிலேயே போட்ட தோட்டத்திலிருந்து காய்கறி கிடைக்குது. இங்கேயே விளைஞ்ச அரிசியும் கிடைக்குது. எல்லாப் பொருள்களோட விலையும் அதிகரிச்சிருக்குறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, போர் சமயத்துல இதைவிடப் பெரிய பிரச்னைகளையெல்லாம் பார்த்ததால, இந்த நெருக்கடியையும் சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். யாழ்ப்பாணம் மாதிரியே கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழ்ப் பகுதிகள்லயும் இதேநிலைதான்’’ என்றனர் அப்பகுதி மக்கள்.

“நாங்கள் ஏன் போராட வேண்டும்?” - இலங்கை தமிழ்ப் பகுதிகளின் நிலவரம் என்ன?

பிரபாகரனின் தற்சார்பு பொருளாதாரம்!

மூத்த பத்திரிகையாளரும், ‘தினக்குரல்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான பாரதி ராஜநாயகத்திடம் பேசினோம். ``இங்கேயும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இங்கிருக்கும் மக்களைத் தற்சார்பு பொருளாதாரத்துக்குப் பழக்கப்படுத்தியிருந்தார் பிரபாகரன். அதன் காரணமாகத்தான் இங்கு பெரும் பாதிப்புகள் இதுவரை ஏற்படவில்லை’’ என்றவரிடம், `புலிகள்மீது இன்றளவும் பயம் இருப்பதால்தான் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ஆங்காங்கே நிற்கிறார்களா?’ என்று கேட்டோம்.

``சக்திவாய்ந்த உளவு அமைப்புகள் வைத்திருப்பதால், புலிகள் மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற பயமெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. `இங்கிருக்கும் மக்கள் சிங்களர்களின் அடிமைதான்’ என்று காட்டுவதற்காகவும், `எங்களை மீறி தமிழ் மக்களால் ஒன்றும் செய்துவிட முடியாது’ என்பதை உணர்த்துவதற்காகவும்தான் ராணுவ வீரர்களைத் துப்பாக்கியுடன் நிறுத்தியிருக்கிறது அரசு’’ என்றார். இது குறித்து நம்மிடம் பேசிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதே கருத்தை முன்வைத்து, ``தமிழ் மக்கள்மீது உளவியல்ரீதியாகத் தாக்குதல் நடத்தவே துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரை மக்கள் வசிக்கும் பகுதியில் நிறுத்தியிருக்கிறது இலங்கை அரசு’’ என்றார்.

பாரதி ராஜநாயகம்
பாரதி ராஜநாயகம்

கஷ்டத்தில் விவசாயிகள்!

யாழ்ப்பாணத்திலுள்ள குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்ன லிங்கத்திடம் பேசினோம். ``இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படுறதுக்கு முன்னாடி கிடைச்ச விளைச்சல்ல, மூணுல ஒரு பங்கு விளைச்சல்தான் இப்போ கிடைக்குது. 2019-ல ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததும் அதிரடியா செயற்கை உரங்களைத் தடை செஞ்சுட்டாரு. அதுவும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக அமைஞ்சிருச்சு. இங்கே பயிரிடும் பெரும்பாலான விதைகள் கலப்பின விதைகள்தான். அப்படியான விதைகளுக்கு, இயற்கை உரம் சரிவராது. கால அவகாசம் கொடுத்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். உடனடியா இயற்கை உரங்கள் பயன்படுத்தியதும், இங்கிருக்கும் மண் அதை ஏத்துக்கலை. அதனால மகசூல் பார்க்க முடியாம இங்கே இருக்குற விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருக்காங்க’’ என்றார் கவலையோடு.

அன்ன லிங்கம்
அன்ன லிங்கம்

பெருந்துயரத்தில் மீனவர்கள்!

மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நம்மிடையே பேசிய, மயிலட்டி கடல் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் லோகநாதன், ``பெட்ரோல், டீசல் விலை ஏறிட்டதால படகுக்கு எரிபொருள் நிரப்ப முடியலை. அப்படியே நிரப்பணும்னு நெனைச்சாலும் எரிபொருள் கிடைக்கலை. அப்படியே கிடைச்சாலும், அதிக விலை கொடுத்து டீசல் போட்டுக்கிட்டு கடலுக்குப் போனா, நல்ல மீன்கள் கிடைக்கிறதில்லை. நல்ல மீன்கள் கிடைச்சாலும், வாங்க மக்கள்கிட்ட பணமில்லை. இந்தக் காரணங்களால நாங்க யாருமே ஒரு மாசத்துக்கு மேல கடலுக்கே போகாம இருக்கோம். வீட்டுல இருக்குற நகையை அடகுவெச்சுத்தான் ஒரு மாசமா பிள்ளைங்களுக்குச் சாப்பாடு போடுறோம். கையில இருக்குற காசு தீர்ந்துட்டா, தமிழ்நாட்டுக்கு அகதியா போயிடலாம்னு இருக்கோம்’’ என்றார். பக்கத்திலிருந்த இன்னொரு மீனவர், ``இந்த நிலைமை இப்படியே நீடிச்சா சாகுறதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று பொங்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டே சொன்னார்.

டைனமோ லைட்... சாம்பலே சோப்பு!

சமூகப் பொருளாதார ஆலோசகர் செல்வின், ``போருக்கு முன்னர், 10 ஆண்டுகளாக இங்கிருக்கும் மக்கள் இதைவிடப் பல மடங்கு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். அதை ஒப்பிடும்போது, இந்த நெருக்கடியெல்லாம் ஒன்றுமேயில்லை. மின்சாரமே இல்லாமல், சைக்கிளிலுள்ள டைனமோ லைட்டைவைத்துச் சமாளித்திருக்கிறார்கள். பங்கர்களில் பல நாள்கள் வாழ்ந்திருக்கிறார்கள். போர் சமயத்தில், இப்போது இருப்பதுபோலவே எல்லாப் பொருள்களோட விலையும் இந்தப் பகுதிகளில் அதிகமாகத்தான் இருந்தன. அதனால், பெரும்பாலான பொருள்களுக்கு ஒரு மாற்றுப்பொருள் கண்டுபிடித்து, அதைத்தான் பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு, இங்கு போர் சமயத்தில் 15 ரூபாய் மதிப்புள்ள துணி துவைக்கும் சோப்பு, 85 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எனவே, அதற்கு மாற்றாகச் சாம்பலில் ஊறவைத்து, துணிகளைத் துவைக்கப் பழகிக்கொண்டார்கள்’’ என்றார்.

லோகநாதன்
லோகநாதன்
செல்வின்
செல்வின்

``நாங்களா வாக்களித்தோம்?’’

`இந்த நெருக்கடிச் சூழலில், ராஜபக்சே அரசை எதிர்த்து ஏன் போராடவில்லை?’ என்ற கேள்வியைத் தமிழ் இளைஞர்களிடம் முன்வைத்தோம். ``ஆரம்பத்திலிருந்தே ராஜபக்சேவுக்கு வாக்களிக்க வேண்டாம்; நாடு நாசமாகிவிடும் என்பதை நாங்கள் வலியுறுத்திக் கொண்டேயிருந்தோம். அவர்களுக்கு வாக்களித்தவர்கள்தான் அவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். நாங்கள் ஏன் போராட வேண்டும்?’’ என்கின்றனர் தெளிவாக. ஒரு சிலர், “இங்கும் நிலைமை கைமீறும்போது, போராடுவதைத் தவிர வேறு என்ன இருக்கிறது எங்கள் கையில்?” என்றார்கள் விரக்தியாக.

எத்தனை நாள்களுக்கு?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தப் பொருளாதார நெருக்கடியைக் கண்டு தமிழ்ப் பகுதியிலிருக்கும் மக்களிடம் பெரிய பதற்றமில்லை. மீன்பிடித் தொழில் உள்ளிட்ட சில தொழில்களில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. போர்ச் சமயத்தில் கிடைத்த கொடூரமான அனுபவங்களையே எதிர்கொண்டவர்கள், இதுவும் கடந்துபோகும் என்கிற மனநிலையிலேயே இந்த நெருக்கடியைத் தற்போதுவரை சமாளித்துவருகிறார்கள். ஆனால், இதுவும் எத்தனை நாள்களுக்கு என்பதுதான் தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism