மகிந்த ராஜபக்சே ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றிய ஆதாரங்களுடன் ‘நாஸ்திகார சன்வர்தேனய சஹ துஷானா’ (தேவையற்ற வளர்ச்சியும் ஊழலும்) என்ற நூலை எழுதியவர் லசந்தா விஜேரத்னா. சிங்கள எழுத்தாளர். இலங்கை தேர்தலுக்கு மூன்று நாள்கள் முன்னதாக இவர் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்தது. துப்பாக்கி முனையில் வீட்டை அடித்து நொறுக்கிய அந்தக் கும்பல், ‘‘ராஜபக்சே ஆட்சியைப் பற்றி எழுதுவதற்கு எந்த நல்ல விஷயமும் உன் கண்ணில் படவில்லையா?’’ என்று கேட்டது. அவரை கத்தியால் குத்தியவர்கள், ‘‘நாங்கள் ஜெயித்தாலும் தோற்றாலும் உன்னைக் கொல்வது நிச்சயம். இனிமேல் புத்தகம் எழுத நீ உயிருடன் இருக்க மாட்டாய்’’ என எச்சரித்துவிட்டுப் போனார்கள். இப்போது மருத்துவமனையில் இருக்கிறார் விஜேரத்னா.

இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஹில்மி அகமது. செப்டம்பர் மாதத்திலிருந்தே அவருக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன. ‘‘கோத்தபய ராஜபக்சேவை ஆதரிக்காவிட்டால் உன் வீட்டை எரித்துவிடுவோம். உன் மனைவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவோம். உன் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவோம்’’ என்று மிரட்டினார்கள். அவரது வியாபார நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. மிரண்டுபோன ஹில்மி அகமது வெளிநாடு சென்றுவிட்டார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த அவர், தேர்தல் முடிவுகளைப் பார்த்து அரண்டுபோயிருக்கிறார். ‘‘சிங்களப் பேரினவாதம் பேசும் அத்தனை அமைப்புகளும் கோத்தபய ராஜபக்சே ஜெயிக்க வேண்டும் என வேலைபார்த்தன. அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள்மீது தாக்குதல் நிகழ்த்தி அகதிகளாகத் துரத்தப்பட்டது போன்ற நிலைமை இலங்கையிலும் நிகழக்கூடும். நிறையபேர் நாட்டைவிட்டே வெளியேறுவது பற்றி யோசிக்கிறார்கள்’’ என்கிறார் ஹில்மி அகமது.

இலங்கை இனி எந்தத் திசையை நோக்கி நகரும் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்களே உதாரணம். ‘‘வெறுப்புப் பிரசாரமும் பொய்ச் செய்திகளைப் பரப்புவதும் இந்தத் தேர்தலில் நிகழ்ந்த அளவுக்கு எப்போதும் நடக்கவில்லை’’ என இலங்கை தேர்தல் ஆணையமே வருத்தப்படும் அளவுக்கு இனவெறிப் பிரசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ‘சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு அலையைப் பரப்பிவிட்டு, பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் எளிதாக வென்றுவிட முடியும்’ என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமாக கோத்தபய ராஜபக்சே ஆகியிருக்கிறார். தமிழர்களும் முஸ்லிம்களும் முற்றிலுமாக நிராகரித்த அவரை, சிங்கள மக்கள் தாங்கிப் பிடித்து 52.25 சதவிகித வாக்குகளுடன் அதிபர் ஆக்கியிருக்கிறார்கள். தலைநகரம் கொழும்புவைத் தவிர்த்து, பௌத்தர்கள் புனிதமாகக் கருதும் அனுராதபுரத்தில் பதவியேற்றதன் மூலம், ‘நான் பெரும்பான்மை சிங்களவர்களின் காவலன்’ என மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் அவர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், கோத்தபயவின் வெற்றியைச் சுலபமாக்கிவிட்டன. ஐ.எஸ் தீவிரவாதிகளின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட அந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம், இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வெறுப்பு உணர்வைப் பற்றவைத்தது. அந்த நெருப்பை அணையாமல் பார்த்துக்கொண்டது ராஜபக்சே குடும்பம். அதற்கு நன்றிக்கடனாக தன் அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்குவதாக அறிவித்திருக்கிறார் கோத்தபய.

கடந்த முறை சிறிசேனா அதிபராக வெற்றி பெற்றதற்கு தமிழர் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு முக்கியமான காரணமாக இருந்தது. இந்த முறை அப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத குழப்பம் தமிழர்களுக்கு இருந்தது. தமிழ் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து 13 அம்ச கோரிக்கைகளை வெளியிட்டு, ‘இவற்றை ஏற்கும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்’ என அறிவித்தன. ஆனால், கோத்தபய, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா என இருவருமே இதைக் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி, ‘‘இரண்டு பேரையும் ஒப்பிடும்போது சுத்தமான கரங்களைக் கொண்டவர் சஜித் பிரேமதாசா. எனவே, அவரை ஆதரிக்கிறோம்’’ என தமிழர் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திரிகோணமலை என தமிழர்கள் வாழும் பகுதிகளில் சஜித்துக்குக் கிடைத்திருக்கும் பெருவாரியான வாக்குகள், கோத்தபய பற்றி தமிழர்களுக்கு இருக்கும் அச்சத்தை உறுதி செய்துள்ளன.

இலங்கை இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பவில்லை. சிறைவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், ராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை தமிழர்களுக்கே திரும்பத் தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் உள்ளன. போர்ச்சூழலில் காணாமல்போனவர்களின் நிலை பற்றித் தெரிவிக்குமாறு அவர்களின் குடும்பத்தினர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் நடந்த ஆட்சியிலேயே இதற்கெல்லாம் தீர்வு கிடைக்காதபோது, கோத்தபய வந்த பிறகு என்ன ஆகுமோ?

இலங்கை இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியபடி நடைபெறும் விசாரணையில் ஐந்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. ‘இந்த விசாரணையை நிறுத்திவிடுவோம்’ என வாக்குறுதி கொடுத்த கோத்தபய ஜெயித்துவிட்டார். போர்க்குற்றங்களைக் குறிப்பிடும் எல்லா விரல்களும் கோத்தபயவை நோக்கியே நீண்டன. ராஜபக்சே ஆட்சியில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தபோது போர்க்கால கொடூரங்களை நிகழ்த்தியவர் கோத்தபயதான். தன்னை குற்றவாளியாக ஆக்கும் ஒரு விசாரணையை அவர் எப்படி நடத்துவார்? ஆனால், கோத்தபயவின் இந்த நடவடிக்கையை ஐ.நா எப்படி எதிர்கொள்ளும் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

ராஜபக்சே குடும்பத்தில் கோத்தபயவை ‘டெர்மினேட்டர்’ என அழைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்கூட சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளர்கள்மீது கோபத்தைக் கொட்டினார். ராணுவத்தில் கர்னலாகப் பணிபுரிந்தவர் கோத்தபய. எதிரிகளை அழிப்பது ராணுவ இயல்பு. எதிரிகளுடன் விவாதமும் விமர்சனமும் செய்வது அரசியல் இயல்பு. அண்ணன் மகிந்த அரசியல்வாதியாக அதைச் செய்தார். தம்பி கோத்தபய, அண்ணனின் அரசியல் எதிரிகளை ராணுவ இயல்புடன் எதிர்கொண்டார். மகிந்த ராஜபக்சேவை எதிர்த்தவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். ‘வெள்ளை வேன் கடத்தல்’ பற்றி இலங்கை மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் இப்போதும் அச்சத்துடன் பேசுகிறார்கள். அதனால்தான் கோத்தபய ‘டெர்மினேட்டர்’ எனப்பட்டார்.

இறுதிப்போரில் சரணடைய வந்தவர்களைக் கொன்றது, தாக்குதல் நடத்த தடைவிதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குண்டுகளை வீசி 40,000 அப்பாவிகள் கொல்லப்பட காரணமாக இருந்தது, பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்க கொலை வழக்கு, அரசு நிதியில் கையாடல் செய்து தன் பெற்றோர்களுக்கு நினைவிடம் கட்டியது, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிறகு இலங்கை தேர்தலில் போட்டியிடுவது எனப் பல விஷயங்களில் அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிபரான பிறகு அவையெல்லாம் ஒன்றும் இல்லாமல்போகலாம்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா, ‘‘இனவாத தீயை எரியச் செய்துவிட்டு, ‘இந்த நெருப்பிலிருந்து உங்களைக் காப்பாற்ற என்னைவிட்டால் வேறு யாரும் இல்லை’ என்று சொல்பவர்களை நம்பாதீர்கள். மீறி நம்பினால், அவர்களிடமிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது’’ என இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், ஆடுகள் எப்போதும் ஓநாய்களைத்தானே மீட்பராக நம்புகின்றன!