Published:Updated:

`பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கலாமா?'- நிதிநிலை அறிக்கை குறித்து எஸ்.எஸ் பழனிமாணிக்கம் ஆதங்கம்

முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்
முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்

இதனால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் பா.ஜ.க அரசுக்குக் கவலை இல்லை. அதானி, அம்பானி நலன்கள்தான் முக்கியம் என நினைக்கிறார்கள் என ஆதங்கப்பட்டார் பழனிமாணிக்கம்

தஞ்சாவூரில் ஜனநாயக மேடை என்ற அமைப்பின் ஏற்பாட்டில் `மத்திய மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையும் இந்திய மக்களின் இன்றைய தேவையும்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ``மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது.

சாமான்ய மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து கொஞ்சமும் கண்டுகொள்வதே இல்லை. இதனால்தான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், எல்.ஐ.சி என்ற பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என ஆதங்கப்பட்டார்.

`பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கலாமா?'- நிதிநிலை  அறிக்கை குறித்து எஸ்.எஸ் பழனிமாணிக்கம் ஆதங்கம்

இதுகுறித்து காட்டமாகப் பேசிய பழனிமாணிக்கம், ``நம் நாட்டில், ஒன்பது நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் எல்.ஐ.சி-யும் ஒன்று. லாபகரமாக இயங்குவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்காக சேவையாற்றுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உருவாக்க, எல்.ஐ.சி கடன் கொடுத்து வந்தது. நான் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, எல்.ஐ.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை என்னால் இயன்ற வரை தடுத்து வந்தேன். நம் நாட்டிற்கு மிகப்பெரும் வருமானத்தைக் கொடுக்கக்கூடிய நிறுவனம் இது. இதனால்தான் இதைப் பொன் முட்டையிடும் வாத்து என்கிறோம். இதை ஒரேயடியாக அறுக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இதனால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இதைப்பற்றியெல்லாம் பா.ஜ.க அரசுக்குக் கவலை இல்லை. அதானி, அம்பானி நலன்கள்தான் முக்கியம் என நினைக்கிறார்கள். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்பந்தங்களுக்கு அடிப்பணிந்து மத்திய அரசு பல தவறான முடிவுகளை எடுக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி,எஸ்.டி, அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது எனத் தொடர்ச்சியாகத் தவறுக்கு மேல் தவறு இழைத்து வருகிறார்கள். ஒரு தவற்றைச் சரி செய்கிறேன் என அடுத்தடுத்து பெரிய பெரிய தவறுகளை செய்கிறார்கள்” என ஆதங்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு