Published:Updated:

எழுவர் விடுதலை: தொடரும் சதுரங்க விளையாட்டு... யாரிடம்தான் உள்ளது அதிகாரம்?

எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளுநர் முடிவெடுக்காமலே இருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

எழுவர் விடுதலை: தொடரும் சதுரங்க விளையாட்டு... யாரிடம்தான் உள்ளது அதிகாரம்?

எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளுநர் முடிவெடுக்காமலே இருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Published:Updated:
எழுவர் விடுதலை

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், தற்போது வரை ஒரு தெளிவான நிலை எட்டப்படவில்லை. கருணை அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் பற்றியும், அதனை அரசுகள் கையாண்ட பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றியும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72, குடியரசுத் தலைவருக்கும், பிரிவு 161 ஆளுநருக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது, ரத்துசெய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்குகின்றன. இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரிலே செயல்படுவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் அற்புதம்மாள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் அற்புதம்மாள்

இதுபோக, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) 432, 433-ன் கீழும் மாநில அரசுகள் குற்றவாளிகளை விடுவிக்கலாம். சி.ஆர்.பி.சி பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய வேண்டுமானால், ஆயுள் தண்டனைக் கைதிகள் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மாநில அரசு, அரசியலமைப்பின் பிரிவு 161-ஐ பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கைதிகளை விடுவிக்கலாம்.

கருணை அடிப்படையில் விடுதலை என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது. எழுவர் விடுதலையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் தற்போது வரை தெளிவு கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு தேசியக்கட்சிகளுமே, எழுவர் விடுதலையை தொடர்ந்து எதிர்த்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் காங்கிரஸ், பா.ஜ.க-வின் பாரபட்சமான அணுகுமுறையைக் கையாள்வதாக சுட்டிக்காட்டுகிறார், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன். இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்...

``காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார். அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகியோர் 16 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமென அக்டோபர் 13, 1964-ல் விடுவிக்கப்பட்டனர். அப்போது, பிரதமர் நேரு மறைந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன. நேரு உயிருடன் இருந்தவரை காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை சாத்தியப்படவில்லை.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

இப்போதைய பா.ஜ.க அரசு, காலிஸ்தான் கோரி ஆயுதமேந்திப் போராடியதற்காக ஆயுள் தண்டனை பெற்ற எட்டு சீக்கியர்களை குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தையொட்டி விடுதலை செய்தது. மேலும், சில சீக்கியர்களுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்க பரிசீலித்துவருகிறது. இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் என மூவருமே ஆதரவாக உள்ளனர். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டதை கேள்வி கேட்கவில்லை. இதே அணுகுமுறையை எழுவர் விடுதலையிலும் பின்பற்றுவதற்கு மத்திய பா.ஜ.க அரசு மறுப்பதும், காங்கிரஸ் அதைத்தொடர்ந்து எதிர்ப்பதும் சரியல்ல” என்றார்.

விடுதலையில் பாரபட்சம் காட்டுவதில் தேசியக் கட்சிகள் மட்டுமில்லை; திராவிடக் கட்சிகளும் சளைத்தவை அல்ல. தமிழகத்தில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.தி.மு.க-வினரை தமிழக அரசு முன்கூட்டியே விடுவித்தது. அதற்குப் பிறகு மேலவளவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அதே பாணியில் தமிழக அரசு விடுதலை செய்தது. இரண்டுமே பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின. மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில், கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். அப்போது, இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும், எழுவர் விடுதலைக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க - அ.தி.மு.க
தி.மு.க - அ.தி.மு.க

அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுகளையொட்டி சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். அதில், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பல முஸ்லிம் கைதிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் நான்கு பேர் விடுதலைக்கான உத்தரவும் பெற்றனர். ஆனால், தமிழக அரசு அவர்களை விடுவிக்காமல், மேல்முறையீட்டுக்குச் சென்று அவர்களின் விடுதலையைத் தடுத்து நிறுத்தியது. இதேபோல், விடுதலைக்குத் தகுதியுடைய 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் கைதிகள் அரசால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் அ.தி.மு.க அரசின்மீது உள்ளது.

இவ்வாறு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதில் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில்தான் இருக்கின்றன. சமீபத்தில், உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செனேகர் மீதான பாலியல் குற்ற வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ``குல்தீப் செனேகர் 14 ஆண்டுகள் கழித்தும் விடுதலை செய்யக்கூடாது. சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசுகள் கைதிகளை பாரபட்சமாக விடுதலை செய்வதைச் சாடும் தீர்ப்பாகவே இது பார்க்கப்பட்டது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதாவின் அரசியல்:

எழுவர் விடுதலையில், ஜெயலலிதாவின் அரசியல் பற்றி அரிபரந்தாமன் குறிப்பிடுகையில், ``சி.ஆர்.பி.சி விதிகளின் கீழ் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதுவே மாநில அரசு, அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்தால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எழுவரை அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் விடுவிக்காமல் சி.ஆர்.பி.சி விதிகளின் கீழ் விடுவிப்பதாக அறிவித்தார்.

இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்றது, விடுதலை தடைபட்டது. அரசியலமைப்பின் பிரிவு 161-ன் கீழ் எழுவரை விடுவிக்க தமிழக அரசு அப்போது முடிவெடுத்திருந்தால், இத்தகைய சிக்கல்கள் எழுந்திருக்காது. இந்த சட்ட நுணுக்கம் ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் இருந்திருக்காது. அந்தச் சமயத்தில் எழுவர் விடுதலையைக் காட்டிலும் காங்கிரசைக் குறிவைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.

தற்போது, ஜெயலலிதா செய்யாததை எடப்பாடி அரசு செய்திருக்கிறது. பிரிவு 161-ன் கீழ் எழுவர் விடுதலைக்கு பரிந்துரைத்துத் தீர்மானம் அனுப்பியிருக்கிறது. ஆளுநரே அதில் முடிவெடுக்கலாம், மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றமும் தெரிவித்துவிட்டது. தமிழக அரசின் தீர்மானம் இதுநாள் வரை பரிசீலிக்கப்படாமலே உள்ளது. தீர்மானம் தொடர்பாக மேலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று தமிழக அரசு சொல்கிறது. தீர்மானம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆளுநரிடம் கேட்டறியுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என நீதிமன்றத்தை அணுகுவதற்கான முகாந்திரம் கூட உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. எழுவர் விடுதலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய தேவையே இல்லை என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இறையாண்மை உள்ள மாநில அரசுதான் அதன் தீர்மானத்துக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைக்கு வழிவகை செய்ய வேண்டும். கைதிகள் விடுதலை செய்யப்படுவதில் பாரபட்சமற்ற பொதுவான வழிமுறைகள் வகுக்கப்பட்டாலே, இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்றார்.

எழுவர் விடுதலையில் எடப்பாடி அரசு நல்ல முயற்சி எடுத்ததாகவே ஈழ ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்த தவற்றையும்கூட எடப்பாடி அரசு திருத்தம் செய்திருப்பதாகவும் பாராட்டுகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் அரசின் தீர்மானத்தை ஏற்று எழுவரையும் விடுதலை செய்வதற்கான முடிவை ஆளுநர் எடுக்காமலிருப்பதற்கு எடப்பாடி அரசிடமிருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்பது பல தரப்பிலும் நெருடலை ஏற்படுத்துகிறது.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கு இறுதித் தீர்வு கிடைப்பதற்கான அழுத்தத்தை ஆளுநருக்குத் தராமல் இருப்பதற்கு, மத்திய அரசின் மறைமுக உத்தரவு காரணமாக இருக்குமோ என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

எடப்பாடி
எடப்பாடி

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பதற்கு எந்த காலக்கெடுவும் தரப்படாத நிலையில், தேர்தல் அறிவிப்பு வரும்வரை இந்த விவகாரத்தை ஆறப்போட்டு, அந்த நேரத்தில் விடுதலைசெய்து, அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

தற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில், இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலும் எழுப்பாவிட்டாலும், எழுவர் விடுதலை குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை முதல்வர் எடப்பாடி தர வேண்டுமென்பதே இதற்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.