Published:Updated:

பொம்மை முதல்வர் ஸ்டாலின்! - பொய் பழனிசாமி! - சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!

சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!
பிரீமியம் ஸ்டோரி
சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!

உள்ளாட்சி தொடர்புடைய ‘மைக்ரோ லெவல்’ பிரச்னைகளையும் இருவருமே தொடவில்லை.

பொம்மை முதல்வர் ஸ்டாலின்! - பொய் பழனிசாமி! - சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!

உள்ளாட்சி தொடர்புடைய ‘மைக்ரோ லெவல்’ பிரச்னைகளையும் இருவருமே தொடவில்லை.

Published:Updated:
சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!
பிரீமியம் ஸ்டோரி
சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!

சில மேடைப் பேச்சுகளைக் கேட்கும்போது விசித்திரமாக மட்டுமல்ல... சலிப்பாகவும் இருக்கும். உசிலம்பட்டியில் மேடையைப் போட்டு, “ஏய்ய்... ஏகாதிபத்திய அமெரிக்காவே... உன்னை வன்மையாகக் கண்டிக்கிறேன்!” என்று முழக்கமிடுவார்கள். இந்த முழக்கத்தால் உசிலம்பட்டிக்கு ஒரு பலனும் இல்லை. அமெரிக்காவுக்கு..? சொல்லவே தேவையில்லை! அப்படித் தான் இருக்கிறது இப்போதைய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சித் தலைவர்களின் பிரசாரம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்புடைய மக்களின் அடிப்படைப் பிரச்னைகளான குடிநீர், கழிவுநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டிய பிரசாரத்தில் மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு விலக்கு, மேக்கேதாட்டூ அணை என்று தேசியப் பிரச்னைகளையெல்லாம் பேசி, உள்ளூர் பிரச்னைகளை நீர்த்துப்போகச் செய்கிறார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அரசியல் தொடர்புடைய விவாதங்களுக்கும், சட்டமன்றத் தேர்தலில் மாநில அரசியல் தொடர்புடைய விவாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதுபோல, உள்ளாட்சித் தேர்தலில் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி, நீர்நிலைகள் மேம்பாடு, உள்ளூர் கல்வி, மருத்துவம் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பிப்ரவரி 17-ம் தேதி மாலை வரை நடந்து முடிந்த பிரசாரத்தில் மத்திய, மாநில அரசியலை பிரதானப்படுத்தியே தலைவர்கள் பேசிய விஷயங்களால் எங்களுக்கு என்ன பலன் என்று அங்கலாய்க்கிறார்கள் மக்கள்.

ஆயிரம் உள்ளூர் பிரச்னைகள் இருக்க... முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து ‘பொம்மை முதல்வர்’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பதிலுக்கு, ‘பொய் பழனிசாமி’ என்கிறார் ஸ்டாலின். இப்படித் தாக்குதல் பிரசாரம் மட்டுமல்ல... உள்ளாட்சி தொடர்புடைய ‘மைக்ரோ லெவல்’ பிரச்னைகளையும் இருவருமே தொடவில்லை. உதாரணத்துக்கு, “மாநில சுயாட்சி, மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வந்துசேரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, இந்தித் திணிப்பு, புதிய கல்விக்கொள்கை, முல்லைப்பெரியாறு, காவிரி உரிமை, மேக்கேதாட்டூ அணை என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடியது தி.மு.க-தான். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது நான்தான். ஆனால், போராடிய இளைஞர்கள்மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசவைத்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம்” என்று பேசுகிறார் ஸ்டாலின். மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், சென்னை மாநகராட்சியில் தீர்க்கப்படாத சாலை, வடிகால், வெள்ளப் பிரச்னைகளுக்கும் - இந்தித் திணிப்பு மற்றும் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல... “முதல்வர் ஸ்டாலின் ஈ.சி.ஆரில் சைக்கிள் ஓட்டுகிறார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். டீக்கடையில் டீ குடிக்கிறார்...” என்று பேசும் எடப்பாடி, “இன்னும் 27 அமாவாசை வரைதான் தி.மு.க ஆட்சியில் இருக்கும். மேற்கு வங்கத்தைப்போல தமிழக சட்டமன்றமும் முடக்கப்படும்” ஒரு ஜோதிடராகவே மாறி ‘குறி’ சொல்கிறார். சரி, இவர்கள்தான் இப்படியென்றால்... காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமோ, “270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிசாமியால் இனி முதல்வராக முடியாது” என்கிறார்! இப்படியாக, மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் வழக்கமான திசை திருப்பும் அரசியலே பிரசார களத்தில் பிரதானமாக இருந்தது!

பொம்மை முதல்வர் ஸ்டாலின்! - பொய் பழனிசாமி! - சொல்ல மறந்த உள்ளாட்சிப் பிரச்னைகள்!

“பெரிய கட்சிகள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு மாநில அரசியலையும், தேசிய அரசியலையும் உள்ளாட்சித் தேர்தலில் பேசி திசைதிருப்புகிறார்கள்” என்று விமர்சிக்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ். “உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் குடிநீர், கழிவுநீர் போன்ற அடிப்படைப் பிரச்னைகளை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்று பேச வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல்களைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேச வேண்டும். கிராமசபைகளைப்போல, நகர்ப்புறங்களில் ஏரியா சபை, வார்டு சபைகளை உருவாக்க வேண்டும் என்று 2010-ல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, குப்பையை மறுசுழற்சி செய்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் குப்பையைக் கொட்டுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று விவாதிக்க வேண்டும். ஆனால், முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் மாறி மாறி வசைபாடிக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு மிகவும் வருந்தத்தக்கது” என்றார் அவர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ நம்மிடம், “குடிநீர், கழிவுநீர், குப்பை, தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதாரம், கல்வி ஆகிய ஏழு அம்சங்கள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதானமாகப் பேசவேண்டியவை. இது பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை. இருப்பதிலேயே அதிகமான ஊழல்கள் உள்ளாட்சித்துறையில்தான் நடக்கும். இந்தத் துறையில்தான் அதிக அளவு டெண்டர்கள் விடப்படுகின்றன. சென்னை மாநகராட்சியிலேயே சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருக்கின்றன. பிற நகராட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்... இது பற்றியெல்லாம் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பெரிய கட்சிகள் பேசாதது வேதனைக்குரியது” என்றார்.

மக்கள் பிரச்னைகளைப் பேசுவதும், பிரச்னைகளைச் சரிசெய்வதும் ஆளும் அரசின் கடமை என்றால், அதிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, திட்டங்களை மேம்படுத்தச் செய்வது எதிர்க்கட்சியின் கடமை. கடமைகளை மறந்த கட்சிகளால் துன்பப்படுவது என்னவோ மக்கள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism