Published:Updated:

ஸ்டாலின், பினராயி விஜயன் கடிதங்கள்... மோடியை நெருக்கும் முதல்வர்கள்!

பினராயி விஜயன், ஸ்டாலின்
பினராயி விஜயன், ஸ்டாலின்

சர்வதேச பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் விமர்சனங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க அல்லாத முதல்வர்களை அணிதிரட்டும் பினராயி விஜயனின் முயற்சி மோடி அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடந்த ஆண்டு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, தடுப்பூசி விவகாரம் தொடர்பாக 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியிருப்பது மோடி அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, மத்திய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்புமிக்க போராட்டங்கள் நடைபெற்றன. கேரளா, மேற்கு வங்கம் உள்பட 12 பல மாநில அரசுகள் சி.ஏ.ஏ-வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சி.ஏ.ஏ-வை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கடிதம் எழுதினார்.

“நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டிருந்தார். மேலும், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விளைவுகள் குறித்து நம் சமூகத்தில் பெரும்பாலான பிரிவினரிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க விரும்பும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது” என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தியிருந்தார்.

மோடி
மோடி

மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக மாநில முதல்வரைத் திரட்டும் பினராயி விஜயனின் முயற்சி குறித்து தேசிய அளவில் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் தொடரும் நிலையில், பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சிபுரிகிற 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை இந்தியாவில் ஏற்படுத்திவரும் நிலையில், தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றமும் மத்திய பா.ஜ.க அரசிடம் கடுமை காட்டியிருக்கிறது.

இந்த நிலையில், பினராயி விஜயனின் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. மே 29-ம் தேதி அவர் எழுதிய கடிதத்தில், “கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களே வாங்கிக்கொள்ள வேண்டுமென்கிற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருக்கிறது. தடுப்பூசியை அதிகமானோருக்கு செலுத்துவதன் மூலம்தான் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்கிற நிலையில், தடுப்பூசியின் தேவையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தடுப்பூசி சப்ளை செய்யப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 3.1 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் சூழலைப் பயன்படுத்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மக்களைச் சுரண்டப்பார்க்கின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநிலங்களின் தடுப்பூசித் தேவை குறித்து கணக்கீடு செய்து, அனைத்து மாநிலங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உலக அளவிலான டெண்டர் மூலம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனறு பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன். பொதுநலன் கருதி தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாகவே செலுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவரும் சூழலில், மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் தன் கடமையிலிருந்து மத்திய அரசு நழுவும் போக்கு வருந்தத்தக்கது.

மூன்றாவது அலை வரப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துவருகிறார்கள். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில், தடுப்பூசி வாங்கும் பொறுப்பை முழுமையாகவோ, அல்லது கணிசமாகவோ, மாநிலங்களின் தலையில் சுமத்தினால் மாநிலங்களின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்படும். தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கு மாநிலங்களுடன் உடன்பாடு மேற்கொள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த நேரத்தில், தேவையான அளவுக்கு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையில் மாநிலங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என்று பினராயி விஜயன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரும்பாலான மக்களுக்கு அச்சம் இருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் தினந்தோறும் சராசரியாக 4,000 பேர் மரணமடைந்துவரும் நிலையில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

``பா.ரஞ்சித் மீதான தனிப்பட்ட விமர்சனம் தவறு” - நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டும் எதிர்வினைகளும்

ஆகையால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். நீண்ட வரிசையில் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி மிகக் குறைவான அளவுக்கே இருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, முகாம்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்ட தமிழக அரசு, மூன்று நாள்களுக்கு தடுப்பூசி இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக தடுப்பூசி வழங்கிவிட்டு, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு குறைவாக தடுப்பூசி வழங்கியதாக மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிப்படையாகவே மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

கோவையில் தடுப்பூசி இல்லை என்று கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக அரசை குற்றம்சாட்டினார். அதற்கு, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகமாக தடுப்பூசி பெற்றுத்தாருங்கள் என்று வானதி சீனிவாசனுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மேலும், செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.பி.எல் எனப்படும் மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை இயக்க வைப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுத்துவருகிறார். ரூ.594 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த நிறுவனம், தடுப்பூசி உற்பத்திக்குத் தயாராக இருந்தும் பல ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படுத்தாமல் வைத்துள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதால், அந்த நிறுவனத்தை குத்தகை அடிப்படையில் தமிழக அரசுக்குத் தாருங்கள் என்று மோடி அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திவருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த நிறுவனத்தை செயல்படாமல் வைத்திருக்கும் மோடி அரசுக்கு, ஸ்டாலின் கொடுத்துவரும் அழுத்தம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு