Published:Updated:

ஊரடங்கெல்லாம் ஆளுங்கட்சிக்கு இல்லையா?! -வீடியோ கான்பரன்சிங்கில் கொதித்த ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

" 'தமிழகத்தில் கொரோனாவை வீழ்த்தியவர் எடப்பாடி' என்று பெயர் எடுக்க நினைக்கிறார். தேர்தல் நேரம் நெருங்குவதால், தி.மு.க-வுக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஆளும் அ.தி.மு.க அரசு. அதனால் திட்டமிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்குத் தடை விதித்திருக்கிறார்கள்.''

கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெற்றது.

திமுக தலைவர்
திமுக தலைவர்

இக்கூட்டத்தில், தி.மு.க-வின் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன், ம.ஜ.க. தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் குறித்து நீண்ட நேர விவாதங்கள் நடந்தன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். கொரோனா பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வீடியோ கான்பிரஸ்ங் வாயிலாகப் பேசிய ஸ்டாலின்
வீடியோ கான்பிரஸ்ங் வாயிலாகப் பேசிய ஸ்டாலின்

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புதிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாகப் பேசும்போது, `எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா' என்று விசாரிப்போடு ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். பின்னர், “அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்குத் தடை விதித்தனர். எனினும், இதை நாங்கள் அரசியல் ரீதியாகப் பார்க்காமல், மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடத்தியுள்ளோம்” என்று கூறியவர், ``ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா?

சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே அறையில் அமர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதல்வர்தான். அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40-க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர வைத்து அமைச்சரவைக் கூட்டத்தையே முதல்வர் நடத்தியிருக்கிறார். அப்போது தெரியவில்லையா ஊரடங்கு உத்தரவு. அதைத் தொடர்ந்து, துணை முதல்வர் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல், அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

11 பேர் கூடும் ஒரு கூட்டத்திற்குத் தடை விதித்தவர்கள், துணை முதல்வரும், அமைச்சர் நடத்திய கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை. இத்தனை கூட்டங்களையும் நடத்தியபோது, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? தி.மு.க-வினர் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மட்டும் தடைவிதிக்க என்ன காரணம்? அரசியல் நோக்கத்தோடு அரசு செயல்பட்டுவருகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. 'தமிழகத்தில் கொரோனாவை வீழ்த்தியவர் எடப்பாடி' என்று அவர் மட்டும் பெயர் எடுக்க நினைக்கிறார். தேர்தல் நேரம் நெருங்குவதால், தி.மு.க-வினரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதனால்தான் திட்டமிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்குத் தடை விதித்திருக்கிறார்கள். அவர் எதில் வேண்டுமானாலும் பெயர் எடுத்துக்கொள்ளட்டும். நமக்குத் தேவையில்லை. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் களம் இறங்குவோம். தங்களது கட்சித்தொண்டர்களை முடுக்கிவிடுங்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார். தங்களுடைய கோரிக்கைகளை முடிந்த அளவு செயல்படுத்த வேண்டுமெனவும், அலட்சியப்படுத்தினால் மீண்டும் ஒரு முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு