Published:Updated:

பொங்கிய ஸ்டாலின்... பம்மிய பொன்முடி!

தட்டிவிடப்பட்ட செல்போன்... பசியில் கலைந்து சென்ற பெண்கள்...

பிரீமியம் ஸ்டோரி

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு செல்லுமிடமெல்லாம் தலைவலி தீராதுபோல... வரிசையாக மேடைகளில் சொதப்பல்கள் அரங்கேறுகின்றன. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியிலும் சொதப்பல்கள் தொடரவே, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடிமீது ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்!

பொங்கிய ஸ்டாலின்... பம்மிய பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி பிப்ரவரி 12-ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக காணை ஒன்றியம் அருகே காலியிடம் தேர்வுசெய்யப்பட்டபோதே பிரச்னையும் தொடங்கியது. ‘ஊருக்கு வெளியே இவ்வளவு தொலைவிலுள்ள இடத்தை ஏன் தேர்வுசெய்ய வேண்டும்?’ என்று முணுமுணுத்தார்கள் சில மாவட்ட நிர்வாகிகள். பிறகு, ‘செலவு செய்பவர் முடிவு செய்யும்போது நம்மால் என்ன சொல்ல முடியும்?’ என்று பொன்முடியை மனதில் நினைத்து அமைதியாகிவிட்டார்கள். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் வசூல் நடக்கவே நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 11-ம் தேதி இரவே விழுப்புரம் வந்து கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தங்கிவிட்டார் ஸ்டாலின். ‘12-ம் தேதி காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கும்’ என்று ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. காலை 8 மணியிலிருந்தே கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துவந்தனர் கட்சி நிர்வாகிகள். ஆனால், 10 மணியைத் தாண்டியும் பந்தல் நிரம்பவில்லை.

இதையடுத்து, ஸ்டாலினைத் தொடர்புகொண்ட பொன்முடி, “நீங்கள் அங்கேயே இருங்கள். நான் வந்து கூட்டிச் செல்கிறேன்’’ என்று மட்டும் தகவல் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நடந்ததை தி.மு.க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் விவரித்தார்கள்... ‘‘விழுப்புரத்தில் தங்கியிருந்த ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதற்காக தி.மு.க-வினரும், கூட்டணிக் கட்சியினரும் வந்தபடி இருந்தனர். காலை 10:30 மணியைத் தாண்டியும் கூட்டத்துக்கான அழைப்பு வராததால் ஏகக் கடுப்பிலிருந்த ஸ்டாலின், அங்கிருந்த நிர்வாகிகளிடம் டென்ஷனைக் காட்ட ஆரம்பித்தார். இது தெரியாமல், ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு கூட்டணிக் கட்சியினர் அலைமோதிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பாவியாக உள்ளே புகுந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி அமீர் அப்பாஸ், மிகுந்த ஆர்வத்துடன் தனது செல்போனில் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். டென்ஷனிலிருந்த ஸ்டாலின் கூட்டணிக் கட்சிப் பிரமுகர் என்றும் பார்க்காமல், அமீர் அப்பாஸின் செல்போனைத் தட்டிவிட, மனிதர் பதறிவிட்டார்.

பொங்கிய ஸ்டாலின்... பம்மிய பொன்முடி!

இந்தக் களேபரத்தைப் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து அமைதியாக அறையைவிட்டு வெளியேறிவிட்டார்கள். உடனே, தன் உதவியாளர் தினேஷைச் சத்தமாகக் கூப்பிட்ட ஸ்டாலின், ‘பொன்முடிகிட்ட சொல்லிடு... நாம இங்கிருந்து கிளம்புவோம்’ என்றபடி வெளியே வந்து வேனில் ஏறிவிட்டார். பொன்முடியிடம் உடனடியாக இந்தத் தகவல் சொல்லப்பட... அவர் பதறியபடி காரை எடுத்துக்கொண்டு தன் மகன் கௌதம சிகாமணியுடன் விழுப்புரம் நோக்கி வந்திருக்கிறார். நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு சில கிலோமீட்டருக்கு முன்பாக ஸ்டாலின் வந்த வேனை நிறுத்திய பொன்முடி, ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி அதில் ஏறிக்கொண்டிருக்கிறார். கூடவே, கௌதம சிகாமணி, மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோரும் அதே வேனில் ஏறிக்கொண்டார்கள். வழியில் பொன்முடியிடம் மொத்த டென்ஷனையும் கொட்டித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள். இந்தக் களேபரங்களால் காலை 10 மணிக்கு வர வேண்டிய இடத்துக்கு 11:30-க்கு வந்து சேர்ந்தார் ஸ்டாலின். அப்போதும் கோபம் தணியாமல் நிர்வாகிகளிடம் கடுகடுத்துக்கொண்டே மேடைக்குச் சென்றார்.

பொங்கிய ஸ்டாலின்... பம்மிய பொன்முடி!

இந்தக் கூட்டத்திலும் ஏகப்பட்ட சொதப்பல்கள்... உணவுக்கான பொறுப்பு கெளதம சிகாமணியிடம் வழங்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு அதிகாலையே பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் கிளம்பியதால், காலை உணவைப் பலரும் சாப்பிடவில்லை. இதனால், அவர்கள் கடும்பசியில் இருந்தார்கள். கூட்டம் தொடங்கி 12 மணிக்கு மேலாகியும் உணவு எதுவும் விநியோகிக்கப்படவில்லை. பசி வயிற்றைக் கிள்ள... வேறு வழியில்லாமல் கூட்டத்திலிருந்த பெண்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

இதுமட்டுமல்ல... மாநில நிர்வாகியான ஏ.ஜி.சம்பத் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். திடீரென அவரை எழுப்பி, பின்னால் போகச் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் ஸ்டாலின் கையால் விருது வாங்க வந்தவரை அமரவைத்தார் மாவட்டச் செயலாளர் புகழேந்தி. இதில் சம்பத் கடும் அப்செட்டாகிவிட்டார். அதேசமயம், கௌதம சிகாமணிக்கு மட்டும் மேடைக்கு நேராகத் தனி இருக்கை போட்டு அமரவைத்தார்கள். இதுவும் நிர்வாகிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் செஞ்சி மஸ்தானுக்கும் பொன்முடிக்கும் ஏழாம் பொருத்தம். இதனால், மஸ்தானின் எதிர் கோஷ்டியினருக்கு முன்வரிசையில் இடம் கொடுத்து, அரசியல் பழிவாங்கலை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பொன்முடி. இவையெல்லாம் விழுப்புரத்தில் ஏற்கெனவே இருக்கும் கோஷ்டிப்பூசலை இன்னும் அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்கள் ஆதங்கத்துடன்.

தலைவனுக்குத் தானாக சேர வேண்டும் கூட்டம். இல்லையென்றால், இது போன்ற சொதப்பல்களைத் தவிர்க்க முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு