Published:Updated:

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது யார்? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்று ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக காரசாக விவாதம் நடைபெற்றது!

Stalin
Stalin ( Vikatan )

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய விவாதம் சூடுபிடித்திருக்கிறது.

TRB Raja  MLA
TRB Raja MLA

நிலத்தடியில் இருக்கும் கனிம வளங்களைப் பற்றி பேசத் தொடங்கிய தி.மு.க மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, "ஒரே உரிமம் மூலம் நிலத்துக்கு அடியில் உள்ள எந்த எரிபொருளையும் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹெல்ப் என்ற பாலிஸி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பூமிக்கு அடியில் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்குத் துளையிட்டு, வேதியியல் சேர்மங்கள் உள்ளே செலுத்தப்பட்டு, எரிவாயு வெளியே கொண்டுவரப்படும். இதனால் நிலத்தடி நீரும், விவசாய நிலமும் பாதிக்கப்படும். மத்திய அரசு இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தை காவிரி ஆற்றுப்படுகையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது. ஹைட்ராக்சில் கார்பன் திட்டத்தை நிறுத்த, சிறப்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்" என்றார்.

இதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், "ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்கான உரிமை பற்றி அரசு 2016-ம் ஆண்டு புதிய கொள்கையை வெளியிட்டது. ஒற்றை உரிமம் அடிப்படையில் பூமிக்கடியில் உள்ள எரிபொருள்களை எடுத்துக்கொள்ள முடியும். தமிழகத்தில் இரண்டு நிறுவனங்கள், இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஒன்று வேதாந்தா, மற்றொன்று ஓ.என்.ஜி.சி. தமிழகத்தில் எந்த கனிம வளத்தையும் இயற்கை வாயுவையும் எடுக்க, எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டுள்ளது. இதுவரை அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை" என்று கூறினார்.

C V Shanmugam
C V Shanmugam

மேலும், "தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், ஒரேயொரு நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது" என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

இதற்கு, "ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தி.மு.க ஆட்சியில் உரிமம் வழங்கவில்லை. ஆய்வுக்கு மட்டுமே அனுமதி வழங்கினோம்" என்று டி.ஆர்.பி. ராஜா பதிலளித்தார்.

stalin
stalin

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "தி கிரேட் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு தி.மு.க ஆட்சியின்போது ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு செய்வதற்கான அனுமதி அளித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது" என்றார்.

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தையே இப்போது எதிர்க்கும் நீங்கள், உங்கள் ஆட்சியின்போது ஆய்வுக்கு அனுமதித்தது ஏன்?" என்று அமைச்சர் சண்முகம் கேள்வி எழுப்பினார். 

hydrocarbon
hydrocarbon

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், "தமிழக அரசின் அனுமதியை மீறி, மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது" என்றார்.