Published:Updated:

`முதன்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக திருவாரூர் வந்துள்ளேன்!’ - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்

திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில்  மு.க.ஸ்டாலின்
திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

`தி.மு.க தலைவர் கருணாநிதி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989-ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக ஆனபோது, இதே திருவாரூரில் அவருக்கு வெற்றிவிழா நடத்தினீர்கள்...’ - ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை, தனது பூர்வீக மாவட்டமான திருவாரூரில் தொடங்கினார். தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய மு.க.ஸ்டாலின், ``நான் திருவாரூருக்குப் பல முறை வந்துள்ளேன். ஆனால், இப்போது முதன்முறையாக முதலைச்சர் வேட்பாளராக திருவாரூர் வந்திருக்கிறேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள்’’ என உருக்கமாகப் பேசினார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திருவாரூர் தெற்கு ராஜ வீதியில், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், ``நான் ஒரு குழந்தையாக திருவாரூர் வந்திருக்கிறேன். பள்ளி மாணவனாக இங்கு வந்திருக்கிறேன். கல்லூரி மாணவனாக, தி.மு.க இளைஞரணிச் செயலாளராக, சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, தி.மு.க பொருளாளராக, கட்சியின் செயல் தலைவராகவும் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், தி.மு.க தலைவராகவும்கூட திருவாரூர் வந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது என் வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நாள்.

ஆம், முதன்முறையாக, ஒரு முதலைச்சர் வேட்பாளராக திருவாரூர் வந்திருக்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, இதே திருவாரூரிலிருந்துதான் தொடங்கினேன். 39-க்கு 38 இடங்கள் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. இப்போதும் இதே திருவாரூரில்தான், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். 234-க்கு 234 இடங்கள், தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என உறுதியாக நம்புகிறேன். அ.தி.மு.க கூட்டணி கண்டிப்பாக வாஷ் அவுட் ஆகிவிடும்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989-ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக ஆனபோது, இதே திருவாரூரில் அவருக்கு வெற்றிவிழா நடத்தினீர்கள். அதேபோல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்று, இதே திருவாரூருக்கு என்னையும் வர வைப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டார்கள். இதற்குக் கண்டிப்பாக முடிவுகட்ட வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நாக்கில் நரம்பில்லாமல் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு, கருணாநிதியும் ஸ்டாலினும்தான் காரணம் என்கிறார். இப்படி ஒரு பொய்யை, நா கூசாமல் சொல்ல பழனிசாமிக்கு எப்படி மனம் வந்தது... 2016-க்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிதானே இங்கு முதலமைச்சர்... ஜெயலலிதாவின் மரணத்ததுக்கு நான்தான் காரணம் என்றால், ஏன் என் மீது வழக்கு தொடரவில்லை?

`முதன்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக திருவாரூர் வந்துள்ளேன்!’ - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்

ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மத்தை ஏன் பழனிசாமி இன்னும் கண்டுபிடிக்கவில்லை... நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தைக் கண்டிப்பாகக் கண்டுபிடிப்போம். அதற்குக் காரணமானவர்களை நாங்கள் சும்மா விட மாட்டோம். இந்த ஆட்சியில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. கொரோனா நேரத்தில் துடைப்பம் வாங்கியதில் ஊழல். பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல். நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. இந்த ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டால், பிறகு ஊழல் செய்தவர்கள் எவரும் தப்பிக்க முடியாது ’’என்றார்.

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி,ஆர்.பி.ராஜா, நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் வேதரத்தினம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்த மு.க.ஸ்டாலின், இவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பிரசாரம் மேற்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு