Published:Updated:

`வெற்றிக்கு 102 போதும்... மற்ற வாக்குகள் பிளான் பி!' - என்.ஆர்.இளங்கோ மூலம் கபடி ஆடும் ஸ்டாலின்?

`நமக்குக் கிடைக்கப் போகும் ஒரு ராஜ்ய சபா இடத்தை ஏன் இழக்க வேண்டும்'? என்பது பிரதான காரணமாக இருந்தாலும் ஸ்டாலின் முடிவில் வேறு சில நோக்கங்களும் இருக்கின்றன.

வைகோ
வைகோ

ராஜ்யசபா தேர்தலில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. `தி.மு.க சார்பாக என்.ஆர்.இளங்கோவை வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்ததில் முக்கியமான அரசியல் நடவடிக்கையும் உள்ளது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

வைகோ
வைகோ

தமிழகத்தில் வரும் ஜூலை 18 அன்று ராஜ்யசபா தேர்தல் நடக்கவிருக்கிறது. அ.தி.மு.க சார்பாக மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரும் வேலூரைச் சேர்ந்த முஹம்மது ஜானும் போட்டியிடுகின்றனர். தேர்தல் கால கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். நேற்று இவர்கள் மூவரும் சட்டசபைச் செயலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதேநேரம், தி.மு.க சார்பாக தொ.மு.ச பேரவையின் சண்முகமும் மூத்த வழக்கறிஞர் வில்சனும் போட்டியிடுவதாக அறிவித்தார் ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது உறுதியளித்தபடி, வைகோவுக்கு ஓர் இடத்தை உறுதி செய்தது தி.மு.க. ஆனால், கடந்த 5-ம் தேதி வெளியான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பில் வைகோ-வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, `வைகோ போட்டியிடுவதில் சிக்கல் இருக்குமா?' என்ற கேள்வி எழுந்தது. ` ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லை' எனச் சட்ட நிபுணர்கள் கூறியபோதும், தி.மு.க சார்பாக நான்காவது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. தி.மு.க-வின் இந்த நடவடிக்கை, அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தின.

ஸ்டாலின்
ஸ்டாலின்

` நான் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே சீட் ஒதுக்குவதாக ஸ்டாலின் கூறினார். மற்றபடி வேறெந்த நோக்கமும் கிடையாது' எனத் தெளிவுபடுத்தினார் வைகோ. இந்த நிலையில், இன்று காலை வைகோவின் மனு ஏற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ` அ.தி.மு.க தரப்பில் வைகோவின் மனுவுக்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. வழக்கைக் காரணம் காட்டி நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்கப்பட்டது' எனத் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை வரவேற்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, `நான் போட்டியிடுவதால் ம.தி.மு.க-வில் எந்த அதிருப்தியும் இல்லை. ம.தி.மு.க-வில் இருந்துகொண்டு பதவியைப் பெற்றவர்கள்தான் கட்சியை விட்டுச் சென்றனர். என்னைத் தேடி இரண்டு முறை மத்திய அமைச்சர் பதவி வந்தபோதும் அதை ஏற்க மறுத்தேன். என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வர மாட்டார்கள், தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்' என உருக்கமாகப் பேசினார்.

நான்காவது வேட்பாளரை ஸ்டாலின் முன்னிறுத்தியது ஏன்?

`` தி.மு.க தலைவராகப் பதவியேற்ற நாள்களில் இருந்தே எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு, சபாநாயகருக்கு எதிரான வழக்கு என நீதிமன்றங்களுக்கு நடையாய் நடக்கின்றனர் தி.மு.க வழக்கறிஞர்கள். கருணாநிதி இருந்தபோதுகூட இத்தனை வழக்குகளைத் தொடுத்ததில்லை. இதனால் வழக்கறிஞர்களுக்கான செலவு மட்டும் 12 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்ற கணக்கையும் சொல்கிறார்கள். வைகோ வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தால், மீண்டும் நீதிமன்றம் சென்று நியாயத்தைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அப்படிச் செய்யாமல் அரசியல்ரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொண்டார் ஸ்டாலின்" என விவரிக்கும் தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத முஹம்மது ஜானை வேட்பாளராக்கிய எடப்பாடி!

`` தேசத் துரோக வழக்கில் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் வைகோவுக்கு விதிக்கப்பட்டது. அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால், `நமக்குக் கிடைக்கப் போகும் ஒரு ராஜ்ய சபா இடத்தை ஏன் இழக்க வேண்டும்'? என்பது பிரதான காரணமாக இருந்தாலும் ஸ்டாலின் முடிவில் வேறு சில நோக்கங்களும் இருக்கின்றன. அ.தி.மு.க-வில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் உட்பட பலரும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் மேட்டூர் நகரச் செயலாளர் ஒருவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சீட்டைக் கொடுத்துவிட்டனர். வேலூர் மக்களவைத் தேர்தலை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு முஹம்மத் ஜானுக்கு சீட்டை ஒதுக்கியதில் பலருக்கும் உடன்பாடில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள் சிலர், தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குத் தூபம் போடும் வேலைகளைச் செய்துவருகின்றனர்.

மனுத்தாக்கல்
மனுத்தாக்கல்

ராஜ்ய சபா தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கு 102 வாக்குகள் போதுமானது. இந்த வாக்குகளின் அடிப்படையில் வைகோ உள்ளிட்ட மற்ற இருவரும் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார்கள். இதுபோக, மீதம் 6 வாக்குகள் உள்ளன. அ.தி.மு.க தரப்பில் கருணாஸ், தமிமுன் அன்சாரி உட்பட எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எம்.எல்.ஏ-க்கள் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒருவர் தோற்றுப் போவதற்கும் வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலேயே அ.தி.மு.க பக்கம் இருந்து 10 எம்.எல்.ஏ-க்களை தி.மு.க பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்தன. இதற்கான பணிகளில் சீனியர் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர்.

`10 எம்.எல்.ஏ-க்கள் நம்பக்கம் இருக்கின்றனர். அவர்களுக்கு வரக் கூடிய தேர்தலில் சீட்டை மட்டும் ஒதுக்கினால் போதும். வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை' என்ற சிக்னலும் கொடுக்கப்பட்டது. இந்த அதிருப்திகள் ஒன்று சேர்ந்தால் அ.தி.மு.க பக்கம் ஒரு வேட்பாளர் தோற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத்தான் `பிளான் பி' எனச் சொல்கின்றனர். தி.மு.க சார்பில் நான்காவதாக வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்.ஆர்.இளங்கோ. நாளை அவர் தன்னுடைய மனுவை வாபஸ் வாங்கிவிட்டால், எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கல் இல்லை. வாபஸ் வாங்காவிட்டால், அ.தி.மு.க-வின் ஒரு வேட்பாளருக்குத் தி.மு.க சிக்கலை ஏற்படுத்தும்" என்கின்றனர் இயல்பாக.

அன்புமணி மனுத்தாக்கல்
அன்புமணி மனுத்தாக்கல்

`` ராஜ்யசபா தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். தினகரன் பக்கம் இருந்ததால் தகுதிநீக்க வழக்கை எதிர்கொண்ட எம்.எல்.ஏ-க்களின் கதிதான் தங்களுக்கும் ஏற்படும் என்பதை ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் உணர்ந்து வைத்துள்ளனர். கடைசிவரையில் சசிகலாவோடு சேர்ந்துகொண்டு முரண்டுபிடித்த அறந்தாங்கி ரத்தினசபாபதியும் விருத்தாசலம் கலைச்செல்வனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவைத் தெரிவித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி பிரபுவின் நிலைதான் தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை பலம் இருக்கிறது. ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க-வின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். தி.மு.க எடுக்கப் போகும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும்" என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில்.