Published:Updated:

``2009-ல் தேனியில் என்ன நடந்தது எனத் தெரியுமா... கோபத்தைத் தவிருங்கள் முதல்வரே..!”- ஸ்டாலின்

``தன்னுடைய அரசாங்கத்தின் அலட்சியமும் அக்கறையின்மையும் வெளிச்சத்துக்கு வந்து விட்டதே என்ற ஆத்திரத்தில், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், ஏதேதோ முதலமைச்சர் பேசியிருக்கிறார்.''

ஸ்டாலின்
ஸ்டாலின்

திருச்சி மணப்பாறை அருகே குழந்தை சுஜித் ஆழ்துளைக் குழாயில் சிக்கி, 4 நாள் போராட்டத்துக்குப் பின்னர் உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு, நான்கு நாள்களாகக் குழந்தையின் முகம் காண காத்திருந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. அதைத்தொடர்ந்து பலர், குழந்தை சுஜித் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

சுஜித்
சுஜித்

முன்னதாக சுஜித் வீட்டில் ஆறுதல் சொல்லி நிதியுதவி வழங்கிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம், ``மீட்புப் பணிக்கு ராணுவத்தை அழைக்காதது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ``2009-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் அப்போது ராணுவத்தை ஸ்டாலின் வரவழைத்தாரா? ஸ்டாலின் விஞ்ஞானிபோல் பேசுகிறார் எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், 2009-ம் ஆண்டு தேனி ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தை மீட்புப் பணி தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை முதல்வருக்குப் பதிலாக வழங்கியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இது தொடர்பாக ஸ்டாலின், ``ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாள்கள் கழித்தும் உயிரோடு மீட்கப்படாத நிலையில், நாட்டையே சோகத்திலும் குற்ற உணர்விலும் தள்ளிவிட்டுச் சென்றுள்ளான் சுஜித் வில்சன். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும், 'சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப்போல நாமும் துடிக்கிறோம், அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டேன்.

எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

ஒருநாள் கடந்து, இரண்டாவது நாள் ஆனதும், 'நாம் அங்கே போய்ப் பார்த்து அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லலாம்' என்று நினைத்தேன். ஆனால், இந்த நேரத்தில் சென்றால் அரசியல்ரீதியானதாக ஆகிவிடும், தேவையற்ற கவனச் சிதறல் ஏற்படலாம் என்பதால், சென்னையில் இருந்தபடியே அனைத்தையும் இடையறாது கவனித்து வந்தேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் பேட்டிகள் கொடுத்தார்களே தவிர, சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவைப்படும் நகர்வுகள் இல்லை. இறுதியாக உயிரற்ற சடலமாகத்தான் சுஜித் மீட்கப்பட்டான்.

`மனசாட்சியை  தொட்டுப்பார்த்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்!’ -சுஜித் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் சொல்லிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியுதவியும் செய்துவிட்டு, புறப்பட்ட நேரத்தில் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டார்கள்.

`அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை. ராணுவ உதவியை விரைந்து பெற்று இருக்க வேண்டும்' என்று எனது கருத்தைச் சொன்னேன். எனது ஆதங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; தாங்கிக்கொள்ளவும் இயலவில்லை. ``அனைத்துத் தோல்விக்குப் பிறகே எங்களை அழைத்தார்கள்” - என்று தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ராஜன் பாலு கூறியிருக்கிறாரே! அதற்கு என்ன பொருள்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

சிறுவனை மீட்பதற்கான செயல்முறையை சரியாகத் திட்டமிடவில்லை; காலம் கடந்தே ஒவ்வொன்றாகச் சிந்தித்திருக்கிறார்கள் என்பதுதானே அதன் பொருள்? உண்மையை இப்படிச் சொன்னதற்காக, ராஜன் பாலு மீது முதல்வர் எரிந்து விழுந்தாலும் விழுவார்.

எல்லாவற்றிலும் நாங்கள் சரியாகத்தான் செயல்பட்டோம் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர், 'அரசு செயல்பாட்டில் தொய்வு இருந்ததாகத் தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அவர் என்ன விஞ்ஞானியா? அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார், மனசாட்சியுடன் பேச வேண்டும்' என்று சோகமான நிகழ்வில், சவால் விட்டுக் கொக்கரித்திருக்கிறார். '2009-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் இதுபோல் ஒரு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது அன்றைய அமைச்சர் ஸ்டாலின், ராணுவத்தை வரவழைத்தாரா?' என்றும் எதிர்க் கேள்வி கேட்டுள்ளார். எதையாவது சொல்வதற்கு முன்னால், அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

22.2.2009-ம் நாளன்று தேனி மாவட்டம் தோப்புப்பட்டியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவனான மாயி இருளன் 550 அடி உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். உடனடியாகத் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்தார்கள். மதுரையில் இருந்து மணிகண்டன் குழுவினர் வரவழைக்கப்பட்டார்கள். 80 அடி ஆழத்தில் சிறுவன் இருக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாகத் துணை ராணுவப் படையினருக்குச் சொல்லப்பட்டது. திருச்சியிலிருந்து ஒரு துணை ராணுவப் படையும் பெங்களூருவிலிருந்து இன்னொரு துணை ராணுவப் படையும் வரவழைக்கப்பட்டன.

திருச்சியிலிருந்து வந்த துணை ராணுவப் படைக்கு பி.டி.தாமஸ் தலைவராக இருந்தார். அவரோடு வந்த நான்கு வீரர்கள்தாம் அந்தச் சிறுவனை மீட்டார்கள். சரியாக 30 மணி நேரத்தில் அச்சிறுவன் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அச்சிறுவன் இறந்துபோனான். அன்று தி.மு.க ஆட்சியின் வேண்டுகோளை ஏற்றுதான் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தெரியாமல் ஒரு முதலமைச்சர், 'அன்றைக்கு ராணுவத்தை வரவழைத்தாரா ஸ்டாலின்?' என்று கேட்கிறார் என்றால், குழந்தையை இழந்த சோகத்தைவிட, என் மீதான குரோதம்தான் அவரது பேச்சில் மேலோங்கி வெளிப்படுகிறது.

``2009-ல் தேனியில் என்ன நடந்தது எனத் தெரியுமா... கோபத்தைத் தவிருங்கள் முதல்வரே..!”-  ஸ்டாலின்

தன்னுடைய அரசாங்கத்தின் அலட்சியமும் அக்கறையின்மையும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், ஏதேதோ முதலமைச்சர் பேசியிருக்கிறார். கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சினத்துடன் பாய்ந்திருக்கிறார். 'நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கலாமே?' என்று ஒரு நிருபர் கேட்கிறார்; ‘என்ன தொழில்நுட்பம் இருக்கிறது, நீங்களே சொல்லுங்கள்' என்று கோபமாக நிருபர்களைக் கேட்கிறார். 'நிருபர்கள் தெளிவா பேசணும்' என்று அறிவுரை சொல்கிறார். 'நாங்க என்ன பண்ணணும்?' என்று எரிச்சல் அடைகிறார். 'நான் சொல்வதைக் கேளுங்கள்' என்று எச்சரிக்கை செய்கிறார். இதுதான் ஒரு முதலமைச்சர் நடந்துகொள்ளும் முறையா?

எதுவும் செய்யாத இயலாமையைக் கேள்வி கேட்டால் கோபப்படுவதா? பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்; ஒன்று பதில் சொல்ல வேண்டும் அல்லது அமைதி காக்க வேண்டும். அதைவிடுத்து, நிருபர்களிடம் கோபத்தைக் காட்டியது போலத்தான் என்னிடமும் காட்டியிருக்கிறார். சுஜித் மரணத்திலிருந்து எந்தப் பாடத்தையும் எடப்பாடி பழனிசாமி கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவரது பேட்டி காட்டுகிறது.

சில நாள்களுக்கு முன்பு, சுபஶ்ரீ என்ற இளம்பெண்ணை கட்அவுட்டுக்குப் பலி கொடுத்தோம். அதன் பிறகும் நீதிமன்றத்துக்குப் போய் கட்அவுட் வைக்க அனுமதி வாங்கியவர் இந்த எடப்பாடி பழனிசாமி. இதுவரை நீட் தேர்வின் கொடுமை காரணமாக ஏழு உயிர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளன. அதன் பிறகும் நீட் தேர்வைத் தடுக்க முடியாதவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

சுஜித் தாய், மீட்புப்பணி
சுஜித் தாய், மீட்புப்பணி

13 மூன்று பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டும், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்த அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றாதவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையோ ஆர்வமோ இல்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்தப் பேட்டி.

இந்த ஆணவப் பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்று போனால், எதற்கும் பயன்படாது என்பதை உணர வேண்டும். இது அறிவுரை அல்ல; முதல்வருக்கு எனது அன்பு வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.