Published:Updated:

நீட், துணைவேந்தர்கள் நியமனம்... மத்திய அரசுடன் மோதும் ஸ்டாலின் அரசு... அடுத்து என்ன?!

ஸ்டாலின், மோடி
News
ஸ்டாலின், மோடி

மோடி அரசுடன் சமரசப் போக்கை தி.மு.க அரசு கடைப்பிடிக்கிறது என்று சிலர் விமர்சித்துவந்த நிலையில், நீட் மசோதா மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் கடுமையான நிலைப்பாடுகளை ஸ்டாலின் அரசு எடுத்துள்ளது. இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் விழாவுக்கு பிரதமர் வருகிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து தி.மு.க-வுக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கின. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோதெல்லாம், `கோ பேக் மோடி’ என்ற `ஹேஷ்டேக்’ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்யப்பட்டது. பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கை தி.மு.க கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது என்ற விமர்சனம் சமீபத்தில் எழத் தொடங்கியது. இந்த நிலையில், தி.மு.க நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக ஆளுநருக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறார்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை அமைச்சகத்தின் வழியாக சட்ட அமைச்சகம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அது சட்டமாக வேண்டும். ஆனால், ஆளுநர் இன்னும் அதை டெல்லிக்கு அனுப்பவில்லை.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து நீட் தேர்வு மசோதா குறித்து வலியுறுத்தினார். அதன் பிறகு, கடந்த பத்து நாள்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை உள்துறை அமைச்சர் சந்திக்கவில்லை. இந்த நிலையில்தான், ``அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக வந்த தமிழக ஆளுநர், அரசியல் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்திருக்கிறார். அரசியல் சட்டப்படி செயல்படாத ஆளுநர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட வேண்டும்” என்று ஆவேசப்பட்டார் டி.ஆர்.பாலு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதற்கு மறுநாள் (ஜன. 6), பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதையடுத்து, மத்திய அரசுடன் தி.மு.க அரசு மோதுகிறது என்ற பேச்சு எழுந்துள்ளது.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க-வின் முக்கியமான வாக்கு வங்கியாக இருக்கின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருங்குகிறது என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவதற்கு நாம் தமிழர் போன்ற கட்சிகள் முயல்கின்றன.

ஆனால், பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டில் கருணாநிதியைவிட ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். பா.ஜ.க-வை ஆதரித்தால் அந்த வாக்குவங்கி நம் கையைவிட்டுப் போய்விடும் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். அதேபோல, காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ம.தி.மு.க., முஸ்லிம் லீக் என்பது தி.மு.க-வுக்கு ஒரு வலுவான கூட்டணியாக இருக்கிறது. இந்தக் கூட்டணி சிதைந்துவிடக் கூடாது என்பதிலும் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார்.

ப்ரியன்
ப்ரியன்

விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் பாடம் கற்பித்துவிட்டோம்... இந்தியாவின் மற்ற பகுதிகளில் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தி.மு.க எம்.பி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். இந்த மாதிரி எல்லாவற்றிலும் பா.ஜ.க எதிர்ப்பு நிலையை எடுத்தால்தான், அது தமிழ்நாட்டு அரசியலில் எடுபடும் என்பதுதான் யதார்த்தம்.

காங்கிரஸைக் கழற்றிவிட்டு பா.ஜ.க-வுடன் தி.மு.க போய்விடும் என்று சிலர் பேசுகிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது இருக்கும் கூட்டணியில் இருந்தால்தான் தி.மு.க-வுக்கு மரியாதை. இது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். அதனால், பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் அவர் உறுதியாக இருக்கிறார். அதன் மூலம், தன் வாக்குவங்கியை இன்னும் பலப்படுத்திக்கொள்வார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் என்று சொல்வதெல்லாம் அதனால்தான்” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி... டெல்லியைப் பகைத்துக்கொண்டு மாநிலங்கள் எதுவும் செய்ய முடியாது” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பான தமது கருத்துகளை அவர் விரிவாக நம்மிடம் எடுத்துவைத்தார்.

``1957-ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தமிழர்களை `நான்சென்ஸ்’ என்று சொல்லிவிட்டார். அதை எதிர்த்து பெரிய போராட்டம் நடந்தது. அண்ணா கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. நேரு மறைந்து, இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, அண்ணா சொன்ன ஒரு கருத்து முக்கியமானது. `முன்பு நாங்கள் சண்டை போட்டோம். கையில் வெறும் கரண்டி இருந்தது. இப்போது, சாதக் கரண்டி இருக்கிறது. ஆட்டி ஆட்டி சண்டை போட முடியாது. சாதம் கீழே விழுந்துவிடும்’ என்று அண்ணா சொன்னார்.

ஆட்சியில் இருக்கும்போது அடக்கித்தான் வாசிக்க வேண்டும். தற்போது, தி.மு.க அடக்கித்தான் வாசிக்கிறது. அதேநேரத்தில், பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்கிற பயம் தி.மு.க-விடம் இருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க-விடம் இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையோடுதான் தி.மு.க காய்களை நகர்த்துகிறது.

ஷ்யாம்
ஷ்யாம்

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை மத்திய அரசுக்கு இன்னும் அனுப்பவில்லை என்பதற்காக, ஆளுநர் பதவி விலக முடியாது. ஆனாலும் ஏன் அத்தகைய நிலைப்பாட்டை டி.ஆர்.பாலு எடுக்கிறார் என்றால், பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருங்குகிறது என்று வந்தால், தி.மு.க-வின் வாக்குகளை அது பாதிக்கும்.

இவ்வளவு கடுமையாகப் பேசும் டி.ஆர்.பாலுதான், அவர்களிடமே போய் மனு கொடுக்கிறார். நீட் என்பது ஒரு கௌரவப் பிரச்னை மாதிரி ஆகிவிட்டது. ஆனால், நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு ஏராளமான சட்ட விதிமுறைகள் உள்ளன. மசோதாவை ஆளுநர் அனுப்பாத வரையில், மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுத்து இவர்களைச் சந்திக்கத் தயாராக இல்லை.

நீட் தேர்வை தமிழகத்தில் ஒழிக்க வேண்டுமென்றால், இங்கு ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்றத்தைப்போல தன்னெழுச்சிப் போராட்டம் எழ வேண்டும். அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை.

நீட் எதிர்ப்பு போராட்டம்
நீட் எதிர்ப்பு போராட்டம்

வடக்கோடு வாள் சுழற்ற முடியாது. வடக்கோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் மாநிலங்களின் நிலைமை” என்றார் தராசு ஷ்யாம்.