Election bannerElection banner
Published:Updated:

திமுக வேட்பாளர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை... விவாதிக்கப்பட்டது என்ன?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தம் கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்தும், அதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது குறித்தும் தி.மு.க வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

சட்டப்பேரவை வாக்குப்பதிவு முடிந்த நாளின் மாலையிலிருந்து ஐபேக் அலுவலகம் சென்று தேர்தல் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது, வாக்குப்பதிவுக்குப் பின்னான கள நிலவரத்தைத் தெரிந்துகொள்வது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தொகுதிப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்ட பணம் வெளியில் வரவில்லை என்றும், வேலுமணியிடம் சில தி.மு.க-வினர் விலைபோனதால், வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து வேலைபார்க்கும் நிலை தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஏற்பட்டது என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அது மட்டுமல்ல, அமைச்சராகும் வாய்ப்புள்ள வேட்பாளர்களை அந்தந்த மாவட்டத்தின் முக்கியப்புள்ளிகளே தேர்தலில் காலிசெய்யும் வேலையில் ஈடுபட்டார்கள் என்ற தகவலும் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு மற்றும் கள நிலவர முடிவுகள் உள்ளிட்டவை குறித்து ஏக குஷியில் இருந்த ஸ்டாலின் இந்தப் புகார்களால் கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார். இதனால், தி.மு.க வேட்பாளர்கள் அனைவரையும் அறிவாலயம் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ஐபேக் - தி.மு.க
ஐபேக் - தி.மு.க

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தம் கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்தும், அதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது குறித்தும் தி.மு.க வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம்...

``உங்கள் தொகுதியில் தேர்தல் எப்படி நடந்தது... வாக்குப்பதிவுக்குப் பிறகு வரும் கள நிலவரங்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்துப் பேச வேண்டும் என்றுதான் அறிவாலயத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே அனைத்து வேட்பாளர்களும் சென்னை கிளம்பி வந்தோம். ‘உங்கள் தொகுதியில் தேர்தல் எப்படி நடந்து முடிந்தது?’ என்று வாக்குப்பதிவு குறைவாகப் பதிவான தொகுதி வேட்பாளர்களிடம் `வாக்குப்பதிவு சதவிகிதம் ஏன் இந்த அளவுக்கு இருக்கிறது? நமது முயற்சிக்கு இன்னும் கூடுதலாக வாக்குப்பதிவாகியிருக்க வேண்டுமே... கூடுதல் உதவி தேவை என்றால் கழகத்தில் கேட்டுப் பெற்றிருக்கலாமே...’ என்று தொடர்ந்து அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்துவிட்டார்.

ஒரு மாவட்டத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளிலும் சராசரியாக வாக்குப்பதிவாகியிருந்தால் அவர்களிடம் பெரிதாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மேலும், தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் யார் யார் என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டார். பலரும் சொல்லத் தயங்கினாலும், சிலர் வெளிப்படையாகவே தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்களை தலைமையிடம் போட்டுக்கொடுத்தார்கள்.

அறிவாலயம் - கூட்டம்
அறிவாலயம் - கூட்டம்

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தலைவர் `தேர்தல் கருத்துக்கணிப்புகள், கள நிலவரங்களெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பது மகிழ்ச்சிதான். ஆனால், இன்னும் நாம் வெற்றி என்ற அறிவிப்பு வரவில்லை. நிச்சயம் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றாலும், அது வெளியாகும் வரை நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அதுவரை எந்தப் பிரச்னையிலும் யாரும் தலையிடக் கூடாது. தேவையில்லாமல் எதுவும் பேசிவிடக் கூடாது’ என்று பொதுவான சில அறிவுரைகளையும் கூறினார்” என்றனர்.

``கடந்தகால முடிவுகளால்தான், தேர்தல் கள நிலவரங்கள் தமக்குச் சாதகமாகவே இருந்தாலும், முடிவுகள் வெளியாகும் வரை கவனமாக இருக்க வேண்டும் என்று தலைவர் நினைக்கிறார்போல” என அறிவாலயம் அருகே உடன்பிறப்புகள் சிலர் பேசிக்கொண்டனராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு