Published:Updated:

`சின்னவரைச் சந்தித்து மரியாதை செய்யவும்!' - மா.செ-க்களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின் குடும்பம்

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

பல மாவட்ட நிர்வாகிகளுக்கு இது புதிய அனுபவமாக இருக்கிறது. `உதயநிதிதான் இனி எல்லாம்' என ஸ்டாலின் குடும்பம் சுட்டிக் காட்டுவதாகவே உணர்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் மாவட்ட செயலாளர்கள். `கட்சிக்குள் உதயநிதி அணி என்ற பெயரில் தனி அமைப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. இது எங்கே போய் முடியுமோ எனத் தெரியவில்லை' என ஆதங்கப்படுகின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணிச் செயலாளராகக் கடந்த 4-ம் தேதி பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். பதவியேற்புக்குப் பிறகு நடந்த கூட்டத்தில் பேசியவர், `என்னைச் சின்னவர் என்று அழைத்தார்கள். உங்களையெல்லாம் பெரியவர்கள் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நான் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இனி அறிவாலயத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' எனப் பேசினார். அவரது பேச்சுக்கு இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு கிளம்பியது. இதையடுத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் அன்பகத்தில் இருந்தபடியே கட்சிப் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில், அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் ஒன்று சென்று சேர்ந்துள்ளது. `ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சின்னவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளவும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் அன்பகத்துக்கு நேரடியாக வந்து உதயநிதிக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் காட்சிகளைக் கவனித்த நிர்வாகிகள் சிலர், "இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டபோது, எந்த மாவட்டத்தில் இருந்தும் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக நிர்வாகிகள் வரவில்லை. அதேபோல், கட்சிக்குப் புதிதாக அணித் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டபோதும் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறவில்லை. பல மாவட்ட நிர்வாகிகளுக்கு இது புதிய அனுபவமாக இருக்கிறது. `உதயநிதிதான் இனி எல்லாம்' என ஸ்டாலின் குடும்பம் சுட்டிக் காட்டுவதாகவே உணர்கின்றனர்" என விவரித்தவர்கள்,

உதயநிதி
உதயநிதி

"இளைஞரணிக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி. மாநிலச் செயலாளர்களாக இருக்கும் நிர்வாகிகளில் தனக்கு சரிவரக் கூடியவர்களை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு, மற்றவர்களையெல்லாம் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யும் வேலைகளைச் செய்யவிருக்கிறார். அந்த வரிசையில் சட்டத் திருத்த தீர்மானக் குழுவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் சுபா சந்திரசேகர். இந்த வரிசையில் மேலும் சில மாற்றங்கள் நடக்கவிருக்கிறது. கழகத்தைப் பொறுத்தவரையில் உதயநிதி டீம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இது கழகத்தின் வளர்ச்சிக்கு நன்மை அளிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்" என்கின்றனர் ஆதங்கத்துடன்.

இளைஞரணிப் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட நேரத்தில் உதயநிதிக்குச் சீனியர்கள் சிலர் வாழ்த்துச் சொல்லாததையும் சுட்டிக் காட்டுகின்றனர் தி.மு.க-வினர். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "கஜா புயல் நிவாரணத்தின்போது உதயநிதியை டெல்டா பகுதிகளுக்குச் செல்ல உத்தரவிட்ட அறிவாலயம், கனிமொழிக்கு அந்த வாய்ப்பை நிராகரித்தது. ஆனாலும், தன்னுடைய சொந்த செலவில் தஞ்சை மாவட்டங்களுக்கு ஏராளமான நிவாரண உதவிகளைச் செய்தார் கனிமொழி. தற்போது உதயநிதி வருகையால் அவர் பக்கம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்பதை அறிந்த ஸ்டாலின் குடும்பத்தினர், நேரடியாக அவரது வீட்டுக்கே உதயநிதியை அனுப்பி வாழ்த்துகளைப் பெறச் செய்தனர். உதயநிதிக்குப் பதவி அறிவிக்கப்பட்டபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டார் கனிமொழி.

உதயநிதி
உதயநிதி

அதேநேரம், முக்கிய அரசியல் நிகழ்வுகளை ட்விட்டரில் பதிவிடும் கனிமொழி, உதயநிதி பதவியேற்பு குறித்து எந்தப் பதிவையும் போடவில்லை. மதுரையில் அழகிரி மகன் தரப்பிலும் கொதிப்பில் இருக்கிறார்கள். தற்போது வரையில் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார் தயாநிதி அழகிரி. அவரது தந்தையைத்தான் கட்சியை விட்டு ஓரம்கட்டியிருக்கிறார்கள்.

``நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்!

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் போராடியவர் தயாநிதி. இதையெல்லாம் சாதாரணத் தொண்டர்கள் அறிவார்கள். எங்கிருந்தெல்லாம் எதிர்ப்பு வரும் என்பதை அறிந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி உதயநிதியைப் பதவிக்குக் கொண்டு வந்துவிட்டனர்" எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு