Published:Updated:

சர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்... சறுக்குகிறாரா ஸ்டாலின்?

- அலட்சியத்தால் அரசு இழந்த 88 கோடி!

ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்தைக் கடந்திருக்கிறது ஸ்டாலின் அரசு. ‘கொரோனா பேரிடரைச் சரியாகக் கையாளவில்லை’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொறுப்பேற்ற சில நாள்களிலேயே அதை ஓரளவுக்குத் திறம்படக் கையாண்டிருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான சிலவற்றை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது, கொரோனா நிவாரண நிதி வழங்கத் தொடங்கியது, ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்குவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தது, செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் தடுப்பூசித் தயாரிப்பு மையத்தை தமிழ்நாடு அரசுக்குக் குத்தகைக்கு வழங்குமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியது, முக்கிய நகரங்களுக்கு நேரில் விசிட் செய்து கொரோனா சிகிச்சை மையங்களைத் திறந்தது... என கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சமீபத்தில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக, பேராசிரியர் ஜெயரஞ்சனையும், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனையும் அரசு நியமித்தது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிக்க முடியவில்லையென்றாலும், தட்டிவிட்டு ரன் எடுக்கவாவது செய்தார் ஸ்டாலின். ஆனால், அதிகாரிகள் நியமனத்தில்தான் பந்து ஸ்டம்ப்பைப் பதம் பார்த்துவிட்டது.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வாடிக்கைதான். ஆனால் சமீபத்தில் செய்யப்பட்ட பணியிட மாற்றங்களால் எழுந்திருக்கும் சலசலப்புகள், கோட்டையில் ஏகப்பட்ட குழப்பங்களை உருவாக்கி யிருக்கின்றன. முதல்வரைச் சுற்றியிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கப்பட்டதாக தி.மு.க சார்பு அதிகாரிகளேகூட கொதித்துப் பேசுகிறார்கள். இந்தக் கோட்டை அதிகாரிகளின் குழப்பங்களுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, தி.மு.க-வின் முதல் பெரிய திட்டமான ‘கொரோனா நிவாரணப் பொருட்கள்’ வழங்கும் திட்டத்தில், அரசுக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கிடைத்திருக்கும் செய்தி, ஆட்சிச் சக்கரத்தின் அச்சாணியைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து விவரமறிய தலைமைச் செயலகத்தை வலம்வந்தோம்.

சர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்... சறுக்குகிறாரா ஸ்டாலின்?

முதல்வரைக் குழப்பும் இருவர் அணி

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “முதல்வரின் முதல் சாய்ஸாக தலைமைப் பொறுப்புகளை ஏற்ற இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால்தான் பணியிட மாற்றங்களில் இவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டியின் பரிந்துரையால் முதல்வரை நெருங்கிய அந்த இருவரும், இன்று கோட்டையையே தங்கள் சுண்டுவிரல் அசைவில் வைத்திருக்கிறார்கள். முதல்வருக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கி, குழப்புவதும் அவர்கள்தான். எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தயானந்த் கட்டாரியா வழக்கமாக வைத்திருந்தார். அந்த அளவுக்கு நெருக்கம். அவர் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக, ‘போக்குவரத்துத்துறை 37,000 கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. அந்தத் துறையை மீட்க கட்டாரியாதான் பொருத்தமான ஆள்’ என ஸ்டாலினிடம் கூறி, அவரைப் போக்குவரத்துத் துறைச் செயலாளராக நியமிக்க வைத்துவிட்டனர். அவ்வளவு பெரிய நிதிச்சுமையிலிருந்து துறையை மீட்பது இயலாத காரியம். ‘அதிகாரப் போட்டியில் என்னைப் பலிகடா ஆக்கிவிட்டார்களே...’ என கட்டாரியா ஏக அப்செட்டில் இருக்கிறார்.

முதல்வருக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் ககன்தீப் சிங் பேடி. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பொறுப்பு கிடைக்குமென அவர் எதிர்பார்த்தார். அவரைக் கார்னர் செய்வதற்காக, ‘கொரோனா நேரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக பேடி இருப்பதுதான் சாலச் சிறந்தது’ என அந்த இருவரணி முதல்வரைக் குழப்பிவிட்டது. செயலாளர் அந்தஸ்திலான சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியை முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி, ககன்தீப் சிங் பேடியை அங்கு நியமித்தனர். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழல விரும்பிய பேடியை, இப்போது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் முடக்கிவிட்டது இருவரணி.

இவர்கள் புத்திசாலிகளா?

அதேபோல, முதல்வரின் குட்புக்கில் ராஜேஷ் லக்கானி இடம்பிடித்திருந்தார். அவரையும் போட்டியாளராகக் கருதிய இருவரணி, ‘மின்சார வாரியத்தை லாபகரமாக நடத்துவதற்கு லக்கானிதான் சரியான நபர்’ என்று முதல்வருக்கு ஆலோசனையளித்து, வாரியத்தின் சேர்மனாக லக்கானியை நியமிக்கவைத்துவிட்டது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ‘இது நல்ல பதவிதானே...’ என்று தோன்றும். உண்மையில் நடந்திருப்பது வேறு. மின்சார வாரியம் தனி அதிகாரங்களுடன் செயல்படும் ஓர் அமைப்பு. மற்ற துறைகளுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதுபோல, வாரியத்துக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. அலுவலகமும் கோட்டையில் இல்லை என்பதால், முதல்வரை அவ்வப்போது சந்தித்துப் பேசவும் வாய்ப்பு இருக்காது. இப்படி முதல்வருக்கு நெருக்கமாக அறியப்பட்டவர்களை, உயர்ந்த பதவியில் அமர்த்துவதாகக் கூறி கச்சிதமாக வெட்டிவிட்டிருக்கிறது இருவரணி.

பதவிக்கு வராதபோதே ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவராகக் கருதப்பட்டவர் ஹன்ஸ்ராஜ் வர்மா. அவரையும் ஓரங்கட்டிவிட்டனர். இருவரணிக்கு நெருக்கமான சிவதாஸ் மீனா, சுப்ரியா சாஹு ஆகியோருக்கு நல்ல பொறுப்புகள் அளிக்கப்பட்டிருப்பது மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பொருமலை அதிகரித்திருக்கிறது. மேலிடத்து மாப்பிள்ளை ஒருபக்கம் முதல்வருக்குத் தன் ஆட்களை நியமிக்கச் சொல்லி அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த இருவரணியின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது. முதல்வரின் அப்பாயின்ட்மென்ட்டுகளைக் கவனிப்பதற்கென செயலாளர் அனு ஜார்ஜ் இருக்கிறார். ஆனால், யார் முதல்வரைச் சந்திக்கவும் தங்கள் மூலமாகத்தான் அனுமதி பெற வேண்டுமென இருவரணி கெடுபிடி காட்டுகிறது. ‘ஊழலற்ற, புத்திசாலித்தனமான அதிகாரிகளே நமக்குத் தேவை’ என்று முதல்வரிடம் சொல்லியே, அதிகாரிகள் நியமனத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர் களாகப் பார்த்து நியமித்துக்கொண்டனர். அந்த புத்திசாலித்தனத்தோடு இவர்கள் செயல்பட்டார்களா என்பதை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விசாரித்துப் பாருங்கள். அந்த இருவரணி செய்த குளறுபடியால், கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கியதில் அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று குண்டை வீசினார்கள்.

ககன்தீப் சிங் பேடி, ராஜேஷ் லக்கானி
ககன்தீப் சிங் பேடி, ராஜேஷ் லக்கானி

ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் குளறுபடி

எதையோ விசாரிக்கப்போய், செய்தி எங்கோ செல்கிறதே என நாமும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விசாரித்தோம். பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய கழகத்தின் மூத்த அதிகாரிகள் சிலர், “14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய ‘கொரோனா நிவாரணப் பொருள்கள்’ வழங்கும் திட்டத்தை, ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காகச் சுமார் 800 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. 13 மளிகைப் பொருள்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் சென்னையைச் சேர்ந்த அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. டீத்தூளை மட்டும் குன்னூரிலிருக்கும் ‘இன்கோசர்வ்’ கூட்டுறவு சொசைட்டியிலிருந்து கொள்முதல் செய்துள்ளனர். 13 வகையான மளிகைப் பொருள்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் டெண்டரில்தான் இப்போது குழப்பம் நிகழ்ந்திருக்கிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைகளின்படி, கோதுமை மாவு, உப்பு, ரவை, புளி, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. சர்க்கரை, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றுக்கு ஐந்து சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி உண்டு. குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகளுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்தப் பொருள்களை சப்ளை செய்வதற்கு, ஒரு பைக்கு 405 ரூபாய் வீதம் அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது. பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகிதத்தில் இருப்பதால், அவற்றைத் தனித்தனியாகக் கொள்முதல் செய்து, தனித்தனி பில் போட்டிருந்தால், ஒரு பைக்கு சுமார் 20 ரூபாய் வரியோடு முடிந்திருக்கும். ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றிய புரிதல் இல்லாமல், எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். இதனால், அரசுக்கு சுமார் 88 கோடி ரூபாய் இழப்பு” என்றவர்கள், அதை விவரித்தனர்.

சிவதாஸ் மீனா, சுப்ரியா சாஹு
சிவதாஸ் மீனா, சுப்ரியா சாஹு

தமிழகத்துக்கு என்ன லாபம்?

“பல பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கொள்முதல் செய்வதற்கு ‘காம்போசிட் சப்ளை’ என்று பெயர். இப்படிக் கொள்முதல் செய்யும்போது, எந்தப் பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி அதிகமாக இருக்கிறதோ, அதுவே எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். இதன்படி, தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கும் 13 மளிகைப் பொருள்களில், சோப்புக்குத்தான் அதிகபட்சமாக 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி உள்ளது. இந்த வரி மற்ற 12 பொருள்களுக்கும் பொருந்துவதால், எல்லாவற்றுக்கும் சேர்த்து 18 சதவிகிதம் வரி போட்டுள்ளனர். இதனால், ஒரு பைக்கு 62 ரூபாய் ஜி.எஸ்.டி வரி போகிறது. மீதமுள்ள 343 ரூபாயில்தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் பொருள்களைக் கொள்முதல் செய்து, தமிழக அரசின் குடோன்களுக்கு சப்ளையும் செய்ய வேண்டும். நிறுவனத்தின் நிகர லாபம் உட்பட, போக்குவரத்துச் செலவும் இந்த 343 ரூபாய்க்குள் அடக்கம். இதில் என்ன தரத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?

தனித்தனியாக பில் போட்டிருந்தால் சுமார் 20 ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரியை, தவறான அணுகுமுறையால் 62 ரூபாய்க்குக் கொண்டுவந்துவிட்டனர். இதனால், ஒரு பைக்கு 42 ரூபாய் அதிகமாக ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியதிருக்கிறது. இந்தச் சுமை தமிழக அரசின் தலையில்தான் இறங்கி நிற்கிறது. இதன்படி, 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பைகளுக்குக் கணக்கிட்டால், மொத்தம் 88.62 கோடி ரூபாயைக் கூடுதலாக ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்துகிறது தமிழக அரசு” என்றவர்களிடம், “ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அரசுக்கு லாபம்தானே... மீண்டும் அந்தத் தொகை அரசு கஜானாவுக்குத்தானே வரும்?” என்றோம்.

“தமிழக அரசுக்கு என்ன லாபம் என்பதைப் பார்க்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்பின்படி, 50 சதவிகிதத்தை மத்திய அரசும், மீதியை மாநில அரசுகளும் பிரித்துக்கொள்கின்றன. தற்போது மிகுதியாகச் செலுத்தப்பட்டிருக்கும் 88.62 கோடி ரூபாயில், தமிழக அரசின் பங்கு பாதிதான். இந்தத் தொகையையும் மத்திய அரசிடமிருந்து வாங்குவதற்குள் திக்கித் திணற வேண்டியிருக்கும். ஏற்கெனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி மற்றும் இதர வரி வருவாயாக 12,000 கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். அரசு 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. இந்தச் சூழலில், அரசு சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு பொற்காசுக்குச் சமம்தான். ஆனால், அதிகாரிகள் சிலர் எந்தப் புரிதலும் இல்லாமல் ஒப்பந்தங்களில் முடிவெடுப்பதாலும், முதல்வருக்குத் தவறான ஆலோசனை அளிப்பதாலும் அரசு சறுக்கியிருக்கிறது” என்றனர் விலாவாரியாக.

அனு ஜார்ஜ்
அனு ஜார்ஜ்

‘தரமான பொருள்களை எடை குறையாமல் தர வேண்டும், ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தரும்போது யாருக்கும் ஒரு பொருள்கூட விடுபடாமல் கிடைக்க வேண்டும்’ என்ற நல்லெண்ணத்தில்தான் இப்படித் திட்டமிட்டார்கள். ஆனால், இதைச் சரியாகச் செயல்படுத்தாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கு, முதல்வருக்கு நெருக்கமான இரண்டு அதிகாரிகள்தான் காரணம் என்று கைகாட்டுகிறார்கள்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் குளறுபடியால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ராஜாராமனிடம் பேசினோம். “இது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்குக் கேட்டிருக்கிறோம். மேற்கொண்டு எதுவும் பேச இயலாது” என்று தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள், ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்று சொல்கிறது. ஸ்டாலினும் அதன்படிதான் நடக்க முயல்கிறார். ஆனால், அவர் நம்பிய சில அதிகாரிகள், அலட்சியமாகச் செயல்பட்டு ஆட்சிக்கு அவப்பெயரைத் தேடிக்கொடுக்கிறார்கள். தவறுகளை, தான் நம்பியவர்கள் செய்திருந்தாலும், சறுக்கியவர்கள் தனது தலைமையின் கீழ் பணிபுரிகிறவர்களாக இருந்தாலும், அந்தத் தவற்றுக்கும் சறுக்கலுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர் முதல்வரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு