Published:Updated:

பெண் அர்ச்சகர்கள்... ஸ்டாலின் அரசின் முயற்சி ஒரு புரட்சியா?

சேகர் பாபு
சேகர் பாபு

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாள்களில் செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அர்ச்சகராக ஆக விரும்பும் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்ற அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதற்காக அரசாணை ஒன்று அப்போது வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், போன்றவற்றை ஆராய்ந்து பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

அர்ச்சகர்
அர்ச்சகர்

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும், பழநி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டன. நேர்காணல் அடிப்படையில், 240 பேர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 207 பேர் முழுமையாகப் பயிற்சியை முடித்தனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இந்து அமைப்புகள் உட்பட சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத் தடை காரணமாக, அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

பயிற்சி முடித்த அந்த அர்ச்சகர்கள், பணி நியமனத்துக்காக 12 ஆண்டுகள் காத்திருந்த சூழலில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு பொறுப்பேற்றார். அவர், பயிற்சிபெற்ற அர்ச்சகர்களுக்கு 100 நாள்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பல்வேறு தரப்பினரின் வரவேற்பை அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்பு பெற்றது. மேலும், இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை தமிழக அரசு உறுதிசெய்யும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார் அமைச்சர் சேகர் பாபு.

சேகர் பாபு
சேகர் பாபு

அந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அர்ச்சகர் ஆவதற்கு விரும்பும் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பையும் அதிரடியாக வெளியிட்டார் அமைச்சர் சேகர் பாபு. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப்போல, பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அறிவிப்புக்கு எதிர்ப்பு எழவில்லை என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, பா.ஜ.க மற்றும் வலதுசாரி தரப்பினரிடமிருந்தே இது போன்ற திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பும். ஆனால், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி தொடர்பான அறிவிப்பை வரவேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரம், கடந்த காலத்தில் நமது பண்டைய கலாசாரத்தில் அனைத்துச் சாதியினரும் (பெண்கள் உட்பட) நமது கோயில்களில் அர்ச்சகர்களாக இருந்துள்ளனர் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆகம விதிகளைப் பின்பற்றி மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் பூஜை செய்துவருகின்றனர். அதாவது, தமிழ்நாட்டில் ஏற்கெனவே அனைத்துச் சாதியினரும் பெண்களும் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு அந்தந்தக் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து சரியான அறிவும் புரிந்துணர்வும் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்று எல்.முருகன் கூறியிருக்கிறார்.

பெண் அர்ச்சகர்கள்... ஸ்டாலின் அரசின் முயற்சி ஒரு புரட்சியா?

பா.ஜ.க எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷ்வ ஹிந்து பரிஷத், பல ஆண்டுகளாக அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முழுமையாக இப்பணியில் துணை நிற்கிறது. தீண்டாமை ஒழிப்பை வெற்று முழக்கமல்லாது வாழ்க்கை முறையாகக் கொண்டது சங்க குடும்பம் (Sangh Pariwar). பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர், “காரைக்கால் அம்மையார் பெயரில் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும். கோயில் நிர்வாகம், பக்தர்கள் ஒத்துழைப்பு, முறையான பயிற்சி என ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும். பெண்கள் அர்ச்சகராக மேல்மருவத்தூர் உட்பட பல கோயில்களில் சேவையாற்றிவருகின்றனர். கோவை பேரூர் ஆதீனம் போன்ற பழைமையான ஆதீனங்கள் பெண்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்து கோயில் நிகழ்வுகளை நடத்த ஊக்கமளிக்கிறார்கள். ஹிந்து மரபில் பெண்களுக்கான ஆன்மிக தளம் பெருமளவு அனுசரணைகொண்டது” என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோயில்களில் பெண்கள் அர்ச்சகர் ஆவதன் மூலமாக பெண் சமூகத்துக்குப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது என்கிற பார்வை பெண்ணியவாதிகளிடம் இருந்தாலும், இத்தகைய முயற்சியை அவர்கள் வரவேற்கிறார்கள்.

உ.பி-யில் அதிருப்தி அலை... கர்நாடகாவில் ‘உள்ளடி’ வேலை... ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க வியூகங்கள்!

பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் என்கிற கேள்வியை பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியாவிடம் முன்வைத்தோம்.

“ஆன்மிகத்தின் மீது அன்பு என்கிற போர்வை போர்த்தப்பட்டிருக்கிறது என்றாலும், ஆன்மிகம் என்பது ஓர் அதிகாரம். அனைத்து அதிகாரங்களையும் பெண்கள் கைப்பற்ற வேண்டும். எனவே, ஆன்மிகம் என்கிற அதிகாரத்துக்கும் பெண்கள் வர வேண்டும். கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்வது என்ற விவகாரம் வருகிறபோது, மாதவிடாய் குறித்துச் சிலர் பேசுகிறார்கள். மாதவிடாய் என்பது தீட்டு, அசிங்கம் என்கிற கருத்தாக்கம் முந்தைய தலைமுறைவரை பெண்களில் பலருக்கும் இருந்தது. என் உடல் கரைபடக்கூடியதாக இருக்கிறது என்றும், தான் ஒரு தீண்டத்தகாதவள் என்றும் பெண் நினைத்தாள்.

ஆதி மனிதன் ரத்தத்தைப் பார்த்து பயந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு நாகரிக சமுதாயத்தில் அத்தகைய மனநிலையுடன் இருப்பதுதான் மிகவும் அசிங்கமானது. எப்படி ரத்தம் வருகிறது என்று தெரியாது. கர்பப்ப்பை என்றால் என்னவென்று தெரியாது என்பது போன்ற காலகட்டத்தில் பெண்ணின் உடலிலிருந்து வெளியாகும் ரத்தத்தைப் பார்த்து ஆதிமனிதன் பயந்ததற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த பயத்தில் பெண்ணை விலக்கிவைத்திருக்கலாம். இன்றைக்கு, மாதவிடாய் என்பது என்னவென்பது அறிவியல்ரீதியாக எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனவே, பழைய கருத்தாக்கத்திலிருந்து எல்லோரும் வெளியே வந்துவிட்டனர்.

ஓவியா
ஓவியா

மாதவிடாய் நேரத்தில் மிகவும் கடினமான வேலைகளைச் செய்யக்கூடிய நிலைக்குப் பெண்கள் வந்துவிட்டனர். அப்படியிருக்கும்போது, கோயிலுக்குள் பூஜை செய்வது பெண்களுக்குச் சிரமமான ஒன்று அல்ல. சாமியை நாங்கள் பூஜை செய்யக் கூடாதா, சபரிமலைக்கு நாங்கள் செல்லக் கூடாதா என்று பெண்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு, அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார் ஓவியா.

“ஆன்மிகத்தின் பெயரால் ஒரு பாலினத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்போது, இன்னொரு பாலினம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. பெண்களை ஒடுக்குவதற்கு சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை உடைப்பதற்கான முயற்சிகளைப் பெண்களே முன்னெடுக்கிறார்கள்... முன்னேறுகிறார்கள்” என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு