Published:Updated:

``அடுத்தவர் சாதனையை அறிவாலயக் கணக்கில் வரவுவைக்கும் பழக்கம் மாறவில்லை”- ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை

ஸ்டாலின் - அண்ணாமலை

டி.ஆர். பாலு புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை விமர்சித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `முதல்வர் அர்த்தமில்லாத பேச்சு பேசுகிறார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``அடுத்தவர் சாதனையை அறிவாலயக் கணக்கில் வரவுவைக்கும் பழக்கம் மாறவில்லை”- ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை

டி.ஆர். பாலு புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை விமர்சித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `முதல்வர் அர்த்தமில்லாத பேச்சு பேசுகிறார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் “பாதை மாறா பயணம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "முதல்வர் ஸ்டாலின் டி.ஆர்.பாலுவின் 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிடும்போது, தங்க நாற்கர சாலையை அமைத்துத் தந்தவர் டி.ஆர்.பாலு அவர்கள் என்று குறிப்பிட்டார். அடுத்தவர்கள் சாதனை எல்லாம், அறிவாலயத்தின் கணக்கிலே வரவுவைத்துக்கொள்ளும், அவருடைய பழக்கம் இன்னும் மாறவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழாவில்
பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழாவில்
ட்விட்டர்

உலகத்துக்கே தெரியும் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டம். இந்தத் திட்டத்தைத் தொடங்கிய நாள் 6.1.1999. அதேபோல், தமிழகத்தில் தங்க நாற்கர நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கிவைத்தவர் பி.சி.கந்தூரி. இவர் 7.11.2000 முதல் 22.05.2004 வரை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். சென்னை-மும்பைக்கிடையே 1,290 கிமீ இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் 31.08.2011. சென்னை கொல்கத்தாவுக்கிடையே 1,684 கிமீ இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் 31.05.2013. ஆனால், டி.ஆர் பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவிவகித்த காலம் 22.05.2004 முதல் 22.05.2009 வரை. ஜூலை மாதம் 2013-ல் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறியது. தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாமல் இடையில் அமைச்சராக இருந்தவர், எப்படி, இந்தத் திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாகக் கூற முடியும்?

டி.ஆர்.பாலு செய்த மிகப் பெரிய சாதனை இந்த தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் காண்ட்ராக்டர்களிடம் கணிசமான அளவு கட்டாய வசூல் செய்ததுதான். முதல்வர் பேசுகின்றபோது திடீரென்று, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறியிருந்தால், தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் என்று ஒரு சிரிப்பு வெடியை தூக்கிப் போட்டார். சேது சமுத்திரத் திட்டத்தை டி.ஆர்.பாலு-தான் முன்னெடுத்தார் என்றும் அதை பா.ஜ.க தடுத்து நிறுத்தியது என்றும் முதல்வர் குறை பேசினார்.

சேது சமுத்திரத்  திட்டம்
சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி பொதுமக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பெரும் கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு மணல் திட்டுகள் அதிகமுள்ள ஆழ்கடல் பகுதியிலிருந்து மண்ணை அள்ளி, அதே கடலுக்குள் மிக ஆழமான பகுதியில் வீச வேண்டும். கடலுக்குள்ளிருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால்... எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் தன்னையும், தன் கழகத்தையும் வளப்படுத்திக்கொள்ள டி.ஆர்.பாலு முயன்றது உண்மைதான்.

இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, மணல் அள்ளும் காண்ட்ராக்ட் எடுப்பதற்கு கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், டி.ஆர்.பாலுவுக்குமிடையே பெரும் போட்டி நடைபெற்றது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால்கூட, ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டும்தான் இதன் வழியே செல்ல முடியும். மு.க. ஸ்டாலின் சென்னை நகர மேயராக இருந்தபோது, கோடிக்கணக்கில் செலவுசெய்து கட்டியிருக்கும், ஒன்றுக்கும் பயன்படாத ஒரு வழிப்பாதை பாலங்களைப்போல, இந்த சேது சமுத்திரத் திட்டத்திலும் ஒரு வழிப்பாதையாக மட்டும்தான் கப்பல்கள் செல்ல முடியும்.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்தப் பகுதியில் கடல் மண்ணரிப்புத் தன்மையை பொறுத்தவரையில், கப்பல் கடந்து சென்ற பிறகு மணல் மூடிவிடும். ஆகவே, ஒவ்வொரு கப்பல் சென்ற பிறகும், ஒவ்வொரு முறையும் மணல் அள்ள வேண்டும். மணல் அள்ள ஏராளமான கோடிகள் செலவாகும். ஒருவேளை இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் எத்தனையோ பயன்களை டி.ஆர்.பாலுவும், தி.மு.க-வும் அடைந்திருக்கும் அருமையான வாய்ப்பு உருவாகிருக்கும். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அங்கே ஒரு துறைமுகம் உருவாகி கடல் வாணிபம் நடந்திருக்கும் என்று, இல்லாத துறைமுகத்தின் இன்றைய வளர்ச்சியைக் கனவு நிலையில் கணக்கிடும் முதல்வர் ஸ்டாலின் அர்த்தமில்லாத பேச்சைப் பேசுகிறார்.

ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தை வணிக ரீதியாக சிறப்பாக எப்படி நடத்துவது என்ற அடிப்படைச் சிந்தனைகூட இந்த அரசுக்கு இல்லை. ஆனால், இல்லாத துறைமுகத்தைப் பற்றிக் கவலைகொள்கிறார்கள். இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீர் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட அந்தத் திட்டம், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம்தான் கப்பலேறி இருக்கும். தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலுவின் சுயசரிதையான, 'பாதை மாறா பயணம்' தி.மு.க-வின் கமிஷன், கலெக்ஷன், கரெக்ஷன் என்ற பாதை மாறா பயணத்தை உறுதிசெய்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.