Published:Updated:

”69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது!”- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு தரவரிசை பட்டியல் இன்னும் வெளியிடாமல் இருப்பதில் சதி இருக்கிறது. சமூக நீதியை நீர்த்து போகச் செய்யும் வகையிலான இடஒதிக்கீட்டை விரைவில் எதிர்காலத்தில் மத்திய அரசு கொண்டுவரப் பார்க்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், சட்டமன்றத்தில் நீட் மற்றும் பொருளாதார இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்த அவர், “நீட் தேர்வு தரவரிசை பட்டியல் இன்னும் வெளியிடாமல் இருப்பதில் சதி இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமூக நீதியை நீர்த்துபோகச் செய்யும் வகையிலான இடஒதுக்கீட்டை விரைவில் எதிர்காலத்தில் மத்திய அரசு கொண்டுவரப் பார்க்கிறது. பத்து சதவிகித இடஒதுக்கீடு குறித்த அ.தி.மு.க நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக்கூடாது. நீட் மற்றும் பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்” என்று அவர் பேசினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒருபோதும் கைவிடமாட்டோம். மருத்துவப் படிப்பில் பத்து சதவிகித  இட ஒதுக்கீட்டில் தமிழகம், கர்நாடகம் மட்டுமே இதுவரை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது. மத்திய அரசு நமக்கு எழுதிய கடிதத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், மருத்துவக் கல்வியில் 25 சதவிகித இடங்கள் கூடுதலாக வழங்கப்படும் எனச் சொன்னது. ஆனால், தமிழகம் இன்னும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்டபிறகே முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.