Published:Updated:

`பள்ளிப் படிப்பு முதல் மெரினா வரை போராட்டம்தான்!’ - கருணாநிதி சிலைத்திறப்பு விழாவில் உருகிய ஸ்டாலின்

`கலைஞர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அவர் மறைந்த காலத்துக்குப் பிறகும் மெரினா கடற்கரையில் அண்ணாவுக்குப் பக்கத்தில் ஆறு அடி நிலத்தைக்கூட போராடித்தான் பெற்றார்' - ஸ்டாலின்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திறக்கப்பட்ட கலைஞர் சிலை
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திறக்கப்பட்ட கலைஞர் சிலை ( ரமேஷ் கந்தசாமி )

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, சென்னை அறிவாலயத்துக்கு அடுத்து ஈரோட்டில்தான் முதல் சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலையை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு அருகே அமைக்க வேண்டுமென தி.மு.க-வினர் விரும்பினர். ஆனால், அரசின் அனுமதி கிடைக்காததால் ஈரோடு முனிசிபல் காலனியில், தி.மு.க-வுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த ஜனவரி மாதம் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. ஸ்டாலின்தான் அந்தச் சிலையைத் திறந்து வைத்தார். இருந்தாலும் பெரியார், அண்ணா பக்கத்தில் சிலையை அமைக்க வேண்டுமென அனுமதி கேட்டு தி.மு.க தரப்பில் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பாகவே, ஆச்சர்யப்படும் வகையில் தமிழக அரசே கருணாநிதி சிலையை அமைக்க அனுமதி கொடுத்தது. அனுமதி கிடைத்த உடனே சிலையை அமைத்து, அதைச் சென்னையிலிருந்து ஸ்டாலினே வந்து அவசர அவசராமாகத் திறந்துவிட்டுச் சென்றார்.

கலைஞர் சிலையைத் திறக்கும் ஸ்டாலின்
கலைஞர் சிலையைத் திறக்கும் ஸ்டாலின்

கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``கலைஞரின் மறைவுக்குப் பிறகு முதலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிலை வைத்தோம். அதற்கடுத்ததாக, அவருடைய குருகுலமான ஈரோடு முனிசிபல் காலனியில் கலைஞருக்கு சிலை அமைத்தோம். இன்றைக்கு அதே ஈரோட்டில் கலைஞருடைய இரண்டாவது திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பெரும் போராட்டத்துக்கு இடையே கலைஞரின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறோம். கலைஞரின் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

மாணவப் பருவத்தில் கருணாநிதி திருவாரூரில் உள்ள பள்ளியில் சேரச் சென்றபோது, `நீ சீர்திருத்தக் கொள்கை, சுயமரியாதைக் கொள்கை போன்றவற்றைச் சொல்லி, மற்ற மாணவர்களைக் கெடுத்துவிடுவாய். உனக்கு பள்ளியில் படிக்க சீட் இல்லை’ எனப் பள்ளியின் தாளாளர் அனுப்பிவிட்டார். கலைஞர் அந்தப் பள்ளியின் எதிரே உள்ள கமலாலயம் குளத்தில் நின்றுகொண்டு, ‘பள்ளியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்வேன்’ எனப் போராட்டம் செய்தார்.

கலைஞர் சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின்
கலைஞர் சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின்

பள்ளி நிர்வாகத்தினர் பயந்துபோய் அவரைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். இப்படி, பள்ளியில் சேர்வதற்கே போராட்டம் நடத்தியவர் அவர். திருமண நாளன்று மாலையும் கழுத்துமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குச் சென்று வந்து தாலி கட்டியது, கல்லக்குடி போராட்டம், நெருக்கடி நிலையின்போது ஆட்சியை இழந்தது எனக் கலைஞருடைய வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அவர் மறைந்த காலதுக்குப் பிறகும் மெரினா கடற்கரையில் அண்ணாவுக்குப் பக்கத்தில் ஆறு அடி நிலத்தைக்கூட போராடித்தான் பெற்றார்.

` 3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!' - நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

ஐந்து முறை முதல்வராக இருந்து, தமிழினத்துக்குப் பாடுபட்ட கருணாநிதிக்கு ஓய்வெடுக்க ஆறு அடி நிலம் தர மறுத்த ஆட்சி இது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, வள்ளுவருக்குச் சிலை, வள்ளுவர் கோட்டம் எனத் தியாகிகளுக்கு, தமிழறிஞர்களுக்கு பெருமை சேர்த்த கருணாநிதிக்கு, இந்த அரசு ஆறு அடி நிலம் தர மறுத்தபோது, நீதிமன்றம் சென்று வழக்குப்போட்டு வெற்றி பெற்று அதன்பின்தான் அண்ணாவுக்குப் பிறகு, இப்போது கருணாநிதி ஓய்வெடுக்கிறார்.

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசும் ஸ்டாலின்
கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசும் ஸ்டாலின்

அதற்குப் பிறகு தற்போது ஈரோட்டில் திறக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கும் நீதிமன்றத்துக்குச் சென்று போராடி, அதில் வெற்றி பெற்று சிலையைத் திறந்துள்ளோம். ஈரோட்டில் இன்று கருணாநிதிக்கு இரண்டாவது சிலை அமைக்கப்பட்டதுபோல், தமிழகம் முழுவதும் அரசின் அனுமதியோடு கலைஞரின் சிலை திறக்கப்படும்” என்றார்.