Published:Updated:

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... தொடர்ந்து திமுக முயல்வதும், அதிமுக எதிர்ப்பதும் ஏன்?

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

தமிழ்நாட்டில் சட்ட மேலவை அமைக்க தி.மு.க முயன்றபோதெல்லாம் அ.தி.மு.க அதை எதிர்த்திருக்கிறது. சட்ட மேலவையால் என்ன நன்மை ஏற்படும், அதை அமைக்க கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தீவிரம் காட்டுவதன் பின்னணி என்ன?

`தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்’ என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டிலிருந்த சட்ட மேலவை என்ற அமைப்பை 1986-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலைத்து உத்தரவிட்டார். அதன் பிறகு சட்டப்பேரவையில் மேலவையை மீண்டும் கொண்டுவர கருணாநிதி தொடர்ந்து போராடினாலும் அது நிறைவேறாமல் போனது. `மேலவையும் பேரவையும் கப் அண்ட் சாசர் போன்றவை. கப்பில் காபி சூடாக இருந்தால், அதை சாசரில் ஆற்றிச் சூட்டைக் குறைத்துக்கொள்வதைப்போல மேலவை பயன்படுகிறது’ என அண்ணா குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி ``கப் அண்ட் சாசர் தமிழ்நாட்டுக்கு அவசியம் வேண்டும். அதற்கான அனுமதியை விரைவில் பெறுவோம்’’ என 2010-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பேசினார். ஆனால், அப்போதும் அது கைகூடாமல் போனது.

தற்போது ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க அரசு சட்டமன்ற மேலவையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க தரப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க தி.மு.க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கும் என்று கூறிவருகின்றனர்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்
கருணாநிதி, எம்.ஜி.ஆர்

சட்டமேலவை அமைக்க தொடர்ந்து தி.மு.க முயல்வதும் அதை அ.தி.மு.க எதிர்ப்பதுமாக இருப்பதன் வரலாறு என்ன? அது குறித்து ஒரு பார்வை...

சட்டமேலவை... அண்ணாவின் கப் அண்ட் சாசர் கனவு... நிறைவேற்றத் துடிக்கும் ஸ்டாலின்!

சட்ட மேலவை வரலாறு...

சட்ட மேலவையின் நன்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு முன் அது அமைக்கப்பட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் 1909-ம் ஆண்டிலேயே சட்ட மேலவை அமைக்கப்பட்டது. ஆங்கிலேய ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட இந்தச் சட்ட மேலவையில் ஜமீன்தார்களும் நிலச் சுவான்தார்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அதன் பிறகு 127 உறுப்பினர்களைக்கொண்ட பெரிய அவையாக மாறியதும் சட்ட மேலவைக்கு என 1920-ல் தனியாகத் தேர்தலும் நடத்தப்பட்டது. 127 உறுப்பினர்களில் 98 பேர் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை புறக்கணித்ததால் நீதிக்கட்சியைச் சேர்ந்த 63 உறுப்பினர்கள் வெற்றிபெற்று பனகல் ராஜா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அண்ணா
அண்ணா

1937-ல் சட்டப்பேரவை கீழவை அமைக்கப்பட்டதும், அதிகாரம் முழுவதும் அதற்கு மாற்றப்பட்டதோடு மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 57-ஆகக் குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 1986-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் மேலவை திடீரென கலைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக `சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானமும் எதிர்க்கட்சித் தலைவராக மு.கருணாநிதியும் இருந்தனர். 1989-ல் மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்த தி.மு.க மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியது. தி.மு.க-வின் முயற்சியை நிறைவேற்ற அப்போதைய பிரதமர் வி.பி.சிங் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பின்னர் 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி - சந்திரசேகர் கூட்டணியால் தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. ராஜீவ் - ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்ற அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க கொண்டுவந்த மேலவையை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை உடனடியாக ரத்துசெய்தது. அதன் பிறகு தி.மு.க ஆட்சி அமைந்தபோதெல்லாம் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், அதன் பிறகு அமையும் அ.தி.மு.க அரசு அந்தத் தீர்மானத்தை ரத்து செய்யும் என்பது தொடர்கதையாகிவந்தது.

கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

இந்தியாவில் இப்போது உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை இருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முயன்றுவருகிறார். இதற்கான தீர்மானம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சட்ட மேலவை அமைவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என அரசியல் விமர்சகர் ஆழி.செந்தில்நாதனிடம் பேசினோம். ``சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டுமென்றால், புதிய சட்டங்கள், இருக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் நிச்சயம் இந்த சட்ட மேலவை கொண்டுவரப்பட வேண்டும். சட்ட மேலவை மூலம் அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கலைஞர் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருப்பவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். தமிழறிஞர்கள் உட்பட நிறைய சமூகச் செயற்பாட்டாளர்கள் மேலவை மூலம் தொண்டாற்றியதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அரசியலில் களப்பணி செய்து கட்சி சார்புடன் இருப்பவர்கள் மற்றும் ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என சட்டப்பேரவையில் இரண்டு தரப்பினரும் இருப்பது மிக மிக அவசியமானது. தி.மு.க ஆட்சியிலிருந்தபோது மா.பொ.சி-தான் மேலவையின் தலைவராக இருந்தார். அவர் திராவிட சித்தாந்தத்தைச் சார்ந்தவர் இல்லை. எனவே, பல்வேறு தரப்பினருக்கும் இந்த மேலவை பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அண்ணாவே சட்ட மேலவை மூலமாகத்தான் முதல்வரானார். இவர்கள் அரசுக்கு அறிவுரை சொல்லக் கூடியவர்களாகத்தான் இருந்தார்கள்.

ஆழி.செந்தில்நாதன்
ஆழி.செந்தில்நாதன்

அரசு அமைக்கும் குழுக்கள், ஆணையத்திலிருக்கும் உறுப்பினர்கள் தலைவர்களைவிட மேலவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் உள்ளே சென்று கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இதனால் ஒரு சட்டமோ, திட்டமோ நிறைவேற்றப்படும்போது வரும் எதிர்ப்புகள் குறையும்” என்றவர்...

``சட்ட மேலவையில் இருக்கும் உறுப்பினர் கட்சி சார்பற்றவர்கள் என்பதால் எந்த விருப்பு வெறுப்பும் இன்றி அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும், சட்டங்கள் குறித்தும் விவாதித்து அதன் சாதக பாதகங்களைச் செயல்படுத்தும் முன்னரே சுட்டிக்காட்டுவார்கள். எனவே, மேலவை அமைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படும் எந்தச் சட்டமும் பெரும்பாலும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும். தனிப்பட்ட கட்சியின் விருப்பு வெறுப்புகளுக்கு அதில் இடமிருக்காது. மேலவை உறுப்பினர்கள் நியமனத்திலும் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். 78 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையை அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த 78 பேரில் மூன்றில் ஒரு பகுதி உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12-இல் ஒரு பகுதி பட்டதாரிகள், ஆசிரியர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகர்கள் எனப் பல்வேறு துறைகளிலிருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் மிக முக்கியமான அமைப்பாக இருந்த மேலவையை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ரத்து செய்தார். அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியும் ஏனென்றே தெரியாமல் அதைத் தொடர்ந்து செயல்படுத்திவந்தன. அதன் தேவையை உணர்ந்ததால்தான் தி.மு.க தொடர்ந்து மேலவையைக் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறது. இந்த முறை அது நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்” என மேலவையால் உருவாகும் நன்மைகள், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து அதிமுக மேலவையை எதிர்க்க என்ன காரணம் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வனிடம் கேட்டோம். ``மக்கள் சபை என அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் செயல்படுவதைத்தான் அதிமுக-வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைத்தான் ஜெயலலிதா செயல்படுத்தினார். சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் அதையே ஆதரித்து சட்ட மேல் சபையைக் கொண்டு வராமல் ஆட்சி நடத்தினார்கள். தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்கள் தலைவர்களின் நோக்கத்தின்படி தொடர்ந்து சட்ட மேலவை அமைய எதிர்ப்பு தெரிவித்துவருகிறோம்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

இந்தியாவில் ஆறு மாநிலங்களில்தான் சட்ட மேலவை இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் இல்லாத ஒன்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு குழுவினரை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று புரியவில்லை. மேலவை என்பது அறிஞர்கள் சபை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த அறிஞர்கள் ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பதுதான் அதிமுக அதை எதிர்ப்பதற்கான முக்கியக் காரணம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களுக்கானவர்களை வைத்து மேலவையை கட்டமைத்திருக்க முடியும். ஆனால், நாங்கள் மக்களின் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அதுபோலச் செய்யவில்லை. தி.மு.க., தங்கள் கட்சிக்காகப் பரிந்து பேசுபவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் மேலவையைக் கொண்டு வர முயல்கிறது. எங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றாலும், மக்கள் முடிவுக்கு எதிரான ஒன்றை எங்கள் தலைவர்களும் ஆதரிக்க மாட்டார்கள், எங்கள் இயக்கமும் அதை அனுமதிக்காது. எனவே, மேலவை வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதோடு அதைத் தொடர்ந்து எதிர்த்தும் வருகிறோம்" என மேலவை வேண்டாம் என அ.தி.மு.க எதிர்ப்பதற்கான காரணத்தை விளக்கினார்.

அடுத்த கட்டுரைக்கு