Published:Updated:

`மு.க ஸ்டாலின் ஆகிய நான்... 100 நாளில் தீர்வு!’ - புதிய கோணத்தில் தி.மு.க பிரசாரம்

செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின்
செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின்

கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் புதிய முறையில், புதிய கோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறோம். அது குறித்துப் பேசவே இந்தச் செய்தியாளர் சந்திப்பு” என்றார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் களத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராமசபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, மாவட்டம்தோறும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டுவருகிறார்.

கோபாலபுரம் இல்லம்
கோபாலபுரம் இல்லம்

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர், ``சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் புதிய முறையில், புதிய கோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறோம். அது குறித்துப் பேசவே இந்தச் செய்தியாளர் சந்திப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``அ.தி.மு.க ஆட்சியில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய முதலீடுகளை தமிழக அரசால் ஏற்க முடியவில்லை. `மு.க ஸ்டாலின் ஆகிய நான், தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதே எனது முதல் பணி” என்றார். தொடர்ந்து அடுத்தகட்ட பிரசாரத் திட்டம் குறித்துப் பேசினார் ஸ்டாலின்.

தி.மு.க கிராமசபை - ஸ்டாலின்
தி.மு.க கிராமசபை - ஸ்டாலின்

``வரும் 29-ம் தேதி முதல் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய பரப்புரையை திருவண்ணாமலையில் தொடங்குகிறோம். மக்களிடம் நோட்டீஸ் வழங்கப்படும். மக்கள் குறிப்பிடும் பிரச்னைகள் முதலில் தீர்க்கப்படும். தி.மு.க ஆட்சி அமைந்ததும், மக்கள் பிரச்னைகள் போர்க்கால அடிப்படையில் 100 நாள்களில் தீர்க்கப்படும். இதை எப்படிச் செய்வோம் என்ற சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். தேர்தல் அறிக்கை வேறு, இந்த 100 நாள் திட்டம் என்பது வேறு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு