Published:Updated:

`முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலமா?' - ராமதாஸ் கருத்தால் கொந்தளித்த ஸ்டாலின்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற ராமதாஸின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அசுரன்.’ `வெக்கை’ நாவலின் கதையை மையமாக வைத்து அதில் பல ஆண்டுக்கால சாதிய வரலாற்றையும் சமீபகால நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். பஞ்சமி நிலத்தை மீட்க தனுஷின் குடும்பம் எதிர்கொள்ளும் துயரங்களை அந்தக்கால சாயல் மாறாமல் கூறியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அசுரன்
அசுரன்

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்தார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றையும் பதிவிட்டார். அதில், ‘அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! இயக்குநருக்கும் நடிகருக்கும் பாராட்டுகள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரின் பதிவைக் குறிப்பிட்டு, `ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!' எனப் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்திருந்தார். இது தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராமதாஸின் கருத்துக்குப் பதில் கொடுக்கும்விதமாக ஸ்டாலின் மற்றொரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் முரசொலி அலுவலகத்தின் நிலச் சான்றிதழ் புகைப்படத்தை இணைத்து, ``தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார் ராமதாஸ். அது பஞ்சமி நிலமே அல்ல, வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா மனை. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்.

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்

அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

`சாதாரணமாக ஒரு படத்தைப் பார்த்துப் பாராட்டிய பதிவு தற்போது இரு தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் சண்டையாக வந்து நிற்கிறது' என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.