அரசியல்
அலசல்
Published:Updated:

களமிறங்கும் கமிஷன்... கண்சிமிட்டும் டெல்லி... ‘பீஸ்ட்’ மோடு ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்குமாறு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடம் ஸ்பெஷல் அசைன்மென்ட் தரப்பட்டிருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெடித்த வார்த்தைகளை யாரும் மறந்துவிட முடியாது. “கடந்த பத்தாண்டுகளில் மக்கள் பணம், அரசாங்கப் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்று மேடைக்கு மேடை சூளுரைத்தார் ஸ்டாலின். இப்போது தி.மு.க ஆட்சியும் அமைந்துவிட்டது. ‘என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்?’ என்பதுதான் முன்னாள் மாண்புமிகுக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் கேள்வி. முன்னாள் அமைச்சர்கள்மீது விசாரணை கமிஷன்கள் அமைப்பு, அவற்றை மேற்பார்வையிட ஒரு கமிட்டி, பினாமிகள் சுற்றிவளைப்பு, இதற்கெல்லாம் டெல்லியிலிருந்து கிடைத்த கிரீன் சிக்னல் என ஸ்டாலின் ‘பீஸ்ட்’ மோடு வேகத்தில் களமிறங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். `வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அரசியலில் பட்டாசுகள் வெடிக்கும்’ என்கிறது கோட்டை வட்டாரம்.

கந்தசாமிக்கு அசைன்மென்ட்!

அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்துபோனதாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஆளுநரை இரண்டு முறை நேரில் சந்தித்து, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள் புகார் அளித்தனர். 2020, டிசம்பர் 22-ல் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் எழுப்பியிருந்தார் ஸ்டாலின். 97 பக்கங்கள்கொண்ட அந்தப் புகார்ப் பட்டியலை அடிப்படையாகவைத்து, ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். 2021, பிப்ரவரி 19-ம் தேதி, இரண்டாம் கட்ட ஊழல் புகாரை ஆளுநரிடம் சமர்ப்பித்தது தி.மு.க. ஆளுங்கட்சியாக வந்தமர்ந்துவிட்ட பிறகு, அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கையை வேகப்படுத்தியிருக்கிறாராம் ஸ்டாலின்.

தி.மு.க-வின் இந்த ஆக்‌ஷன் பிளான் குறித்து, மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “1996-ல் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையெல்லாம் விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது. சட்ட நுணுக்கம் தெரிந்த விவரமான அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. வருமானத்தை மீறி அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, சரியான ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக அந்த அதிகாரிகள் பின்னிய வலைதான், பின்னாளில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையே கேள்விக்குறியாக்கியது. இப்போது, அது போன்ற ஒரு வலைப்பின்னலைத் தான் ஸ்டாலின் கையிலெடுத்திருக்கிறார். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்குமாறு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடம் ஸ்பெஷல் அசைன்மென்ட் தரப்பட்டிருக்கிறது.

களமிறங்கும் கமிஷன்!

ஊழல் தடுப்புச் சட்டம் 2018-ல் சில குளறுபடிகள் உள்ளன. அரசிடமிருந்து சம்பளம் பெறுகிற பொது ஊழியர் யாராக இருந்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ஆனால், ஊழல் ஒழிப்புச் சட்டம் 17 (ஏ) உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் திருத்தங்கள் செய்த மத்திய அரசு, ’அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், அவர்களைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் படைத்த மேலதிகாரியிடம் முன் அனுமதி பெற்றே விசாரிக்க வேண்டும்’ என்று சட்டம் போட்டது. இது முதல்வர், அமைச்சர்களுக்கும் பொருந்தும். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டால், அது குறித்து விசாரிக்க வேண்டியது ஆளுநர்தான். ஆனால், புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டிய பொறுப்பை, இந்தச் சட்டத் திருத்தத்தின்படி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு வழங்கியிருக்கிறார்கள். இது போன்ற குளறுபடிகளை நாங்கள் தூள் தூளாக்குவோம்’ என்றார். இப்போது, அதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.

வேலுமணி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர்
வேலுமணி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர்

அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விசாரணையில், முதல்வருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க, சிறப்பு கமிட்டி ஒன்றை அமைக்கவும் ஏற்பாடாகி யிருக்கிறது. மாநில மனித உரிமை கமிஷனில் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுனில்குமாரை இந்த கமிஷனில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவர ஸ்டாலின் பரிசீலிக்கிறார். ஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி (ஓ.எஸ்.டி) என்கிற முறையில், முதல்வருக்கு ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை களைக் கண்காணித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்படலாம். இப்படி ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால், அ.தி.மு.க-வின் அஸ்திவாரத்தையே தகர்க்கும் வேலையில் இறங்கிவிட்டார் முதல்வர். முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து முன்னாள்களுக்குக் குறிவைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

டார்கெட் வேலுமணி... சிக்கலில் பன்னீர், எடப்பாடி!

ஸ்டாலினின் முதல் டார்கெட்டே வேலுமணி தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த ஆட்சியில், எல்.இ.டி விளக்குகள் பதிப்பதில் தொடங்கி, கொரோனா காலத்தில் கிருமிநாசினி தெளித்தது வரை உள்ளாட்சித்துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக முதல்வருக்கு ஆதாரபூர்வமாகச் சில கோப்புகள் கிடைத்திருக் கின்றனவாம். இதைவைத்தே வேலுமணியை ரவுண்ட் கட்ட ஆயத்தமாகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றும் நந்தகுமார் மீது, கொரோனா களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கியதில் ஊழல் உட்பட பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. சமீபத்தில் அடையாறு காந்தி நகரிலுள்ள நந்தகுமாரின் வீட்டுக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அங்குவைத்தே அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவருக்கும் வேலுமணிக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டது. வேலுமணிக்கு ஆல் இன் ஆலாகச் செயல்பட்ட வடவள்ளி சந்திரசேகரின் மூன்றெழுத்து நிறுவனம் ஒன்றுக்கு, மாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாகவும் விசாரித்துவருகிறோம். வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மூலமாகச் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பாக ஒரு தனி டீம் தோண்ட ஆரம்பித்திருக்கிறது” என்றவர், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் ஆளும்தரப்பின் வேகம் கூடியிருப்பதையும் பட்டியலிட்டார்.

“சி.எம்.டி.ஏ-வில் தலைமை வடிவமைப்பாளர் களாக இருந்த பெரியசாமி, ருத்திரமூர்த்தி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. நெமிலி அருகே பனப்பாக்கத்தில் ருத்திரமூர்த்தி தரப்புக்குச் சொந்தமாக 100 ஏக்கர் நிலம் இருப்பது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது எங்கள் டீம். இதெல்லாம் சி.எம்.டி.ஏ-வுக்குப் பொறுப்பு வகித்த பன்னீர்செல்வத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட கட்டட நிறுவனத்துக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு சட்டவிரோதமாகச் சில விஷயங்களைச் செய்து கொடுத்திருக்கிறது. அது குறித்தும் விசாரித்துவருகிறோம். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசமிருந்த நெடுஞ்சாலைத்துறையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களுக்கு மட்டுமே பல்வேறு டெண்டர்கள் கடந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த முக்கியத்துவம் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. எடப்பாடிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட கிரிதரனும் எங்கள் ரேடாரில் கொண்டு வரப்பட்டிருக்கிறார். 17-பி சார்ஜிலிருந்து விடுவிப்பதற்காக, கடலூரில் ஓர் அரசு ஊழியரிடம் 17 லட்சம் ரூபாய் கிரிதரன் பெற்றதாக வந்துள்ள புகாரைத் தீவிரமாக விசாரிக்கிறோம்.

விஜயபாஸ்கருக்கு செக்... தங்கமணிக்கு ஷாக்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொரோனாகால மருந்துக் கொள்முதல் முதல் குட்கா வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. அவரது உதவியாளராக இருந்த சரவணனை முதலில் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறோம். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குழுமியிருந்தபோது, விஜயபாஸ்கருக்குத் தங்கக்கட்டிகளை மாற்றிக் கொடுத்ததாக கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்தப் புகார்கள் எல்லாவற்றையும் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம். நிலக்கரி இறக்குமதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்குச் சாதகமாக, கடந்த ஆட்சியில் சில டீல்கள் முடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விவகாரமும் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏற்படும் மின்வெட்டுக்குக் காரணமே, அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிவிட அரசுத் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை முடிவுகள் தங்கமணிக்கு ‘ஷாக்’ தரலாம்” என்றனர்.

களமிறங்கும் கமிஷன்... கண்சிமிட்டும் டெல்லி...  ‘பீஸ்ட்’ மோடு ஸ்டாலின்!

கண்சிமிட்டும் டெல்லி... ‘பீஸ்ட்’ மோடு ஸ்டாலின்!

அ.தி.மு.க அமைச்சர்கள் மீது தி.மு.க அளித்திருந்த ஊழல் புகார்கள் ஏற்கெனவே மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டிருந்தன. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது, பிரதமர் அலுவலக அதிகாரிகள் சிலருடன் ஸ்டாலின் தரப்பில் சிலர் பேசியிருக்கிறார்கள். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதை ஸ்டாலின் தரப்பில் தீர்க்கமாகச் சொன்னார்களாம். அதை பிரதமரிடம் அதிகாரிகள் சொன்னபோது, அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் பரபரக்கின்றன. இதை உறுதிப்படுத்தி நம்மிடம் பேசிய பா.ஜ.க டெல்லி மேலிடத் தலைவர் ஒருவர், “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை தி.மு.க நெருக்குவது எங்களுக்கு ஒருவகையில் லாபம்தான். அவர்களை அடித்தால் பாதுகாப்பு தேடி எங்களிடம்தான் தஞ்சமடைய வேண்டும். அவர்களை பா.ஜ.க-வில் இணைத்துக்கொள்வதன் மூலமாக எங்களது கட்சியை வலுப்படுத்த முடியும். ஒருவகையில் எங்களுக்குப் பலன் தரக்கூடிய வேலையை தி.மு.க செய்யப்போகிறது. நாங்கள் ஏன் தடுக்கப் போகிறோம்?” என்று கண்சிமிட்டினார்.

கடந்த ஜூனியர் விகடன் இதழில், ‘கஜானா காலி - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை’ என்கிற தலைப்பில், தமிழ்நாட்டின் நிதிநிலை அதள பாதாளத்துக்குச் சென்றிருப்பதாக தி.மு.க தரப்பு கருதுவதையும், நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட முடிவெடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம். கஜானா காலியானதற்கு ஊழல் பெருச்சாளிகளின் கொட்டம்தான் காரணம் என ஆக்ரோஷத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின். பயிர்க்கடன் தள்ளுபடியில் பல கோடி மோசடி, அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியதால் நஷ்டம் என அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அடுத்தடுத்து கிளம்பும் புகார்களால் ‘பீஸ்ட் மோடு’ மனநிலைக்கு மாறியிருக்கிறாராம் ஸ்டாலின். சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தனக்கு நெருக்கமான வடமாவட்ட மூத்த அமைச்சர் ஒருவரிடம், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்த முடியாத மாதிரி கஜானாவைத் துடைச்சு வெச்சுருக்காங்களே... இவங்கள சும்மா விடக் கூடாது” என்று கூறியிருக்கிறார். வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அதற்குரிய காரணங்களைப் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துவைத்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம் அவர். முன்னாள் அமைச்சர்களை ஊழல் வழக்கில் கைதுசெய்வதன் மூலமாக, தன்னுடைய இமேஜ் உயர்வது மட்டுமல்லாமல், திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் போதிய அவகாசத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியுமெனக் கருதுகிறாராம். முதல்வரின் ஆக்‌ஷன் பிளான் வொர்க்அவுட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

களமிறங்கும் கமிஷன்... கண்சிமிட்டும் டெல்லி...  ‘பீஸ்ட்’ மோடு ஸ்டாலின்!

நல்லம நாயுடு நியமிக்கப்படலாம்!

1996-ம் வருடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு விசாரணை ஆரம்பித்த ஆறு மாதங்களிலேயே, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு. பிறகு, 1997-ல் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்பே பதவி நீட்டிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்கை கவனிப்பதற்காகவே, தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் அவருக்குப் பதவி நீட்டிப்பு தருவார்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது, நல்லம நாயுடுவைத் தூக்கிவிடுவார். பெங்களூரு, டெல்லி உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்றங்களில் நடந்த இந்த வழக்கு தொடர்பாக இருபது ஆண்டுகள் சட்டப் போராட்டமே நடத்தியிருக்கிறார் நல்லம நாயுடு. ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த வகையில் நல்லம நாயுடுவுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. தற்போது, அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதால், அரசுக்குத் தேவைப்படும் சட்ட ஆலோசனைகளை வழங்க நல்லம நாயுடு நியமிக்கப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.