Published:Updated:

`டாஸ்மாக் திறப்பு ஏன்..?; கட்டுப்பாடுகள் மீறப்பட்டால்..!’ - எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

`காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும். முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்’ - ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்றுப் பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாட்டங்களிலும் கடந்த ஊரடங்கைக்காட்டிலும் சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தொற்று பாதிக்குக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேநீர் கடை
தேநீர் கடை

இதற்கிடையே டீக்கடைகள், இனிப்பு - கார தின்பண்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வந்தன. அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் அந்தக் கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளார். இன்று காலை முதல் இந்தத் தளர்வுகள் அமலுக்கு வந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் தேவைகளுக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறு அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று நிகழ்த்திய காணொலி உரையில், ``தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 36,000-ஆக இருந்தது. இது வரும் காலத்தில் 50,000-ஆக உயரும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். எனினும், அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் இல்லை என்ற நிலை இப்போது இல்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கொரோனா வார் ரூம் என்கிற அழைப்பு மையத்துக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கையும் இப்போது பெருமளவில் குறைந்திருக்கிறது. அரசு எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக இரண்டே வாரங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியை முதலில் உடைக்க வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கை அறிவித்தோம். ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாகப் பின்பற்றியதால்தான் தொற்றுப் பரலவல் குறைந்துள்ளது. அதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்கள் பின்பற்றினால்தான் வெற்றி கிடைக்கும். கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது என்றுதான் சொன்னேன். முற்றுப்புள்ளி வைக்கவில்லை. முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் ஆதரவு முக்கியம். மக்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கத்தான் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

டாஸ்மாக் விவகாரம்: 'எதிர்க்கட்சியாக எதிர்ப்பு... ஆளும்கட்சியாக திறப்பு! -   ஸ்டாலினின் மூவ் சரியா?'

தொடர்ந்து பேசியவர், ``பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையாகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும். கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்” என டாஸ்மாக் திறப்பு குறித்து தெரிவித்தார்.

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

மேலும், ``காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும். முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். மக்கள் அதன்படி நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. பொதுப்போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்றுப் பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு