Published:Updated:

`களத்தில் நிலவும் உண்மையை முதல்வர் புரிந்துகொண்டார்!’- மறைமுகத் தேர்தல் விவகாரத்தில் ஸ்டாலின்

அமைச்சர் வேலுமணியும் அவரை பேணிப் பாதுகாத்து வரும் முதல்வர் பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆகவே, உள்ளாட்சி ஜனநாயகத்தை திட்டமிட்டு பட்டப்பகலில் படுகொலை செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலின், பழனிசாமி
ஸ்டாலின், பழனிசாமி

தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் டிசம்பர் மாதம் 2-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் அமலில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மேயர், உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் என்னும் சட்டத்தை மறைமுகத் தேர்தலாக மாற்ற முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஆனால், இது தொடர்பாக அமைச்சர்கள் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் இணைந்து மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதில், ``மேயர் உள்ளிட்ட தலைவர் பொறுப்புகளில் இருப்பவர் ஒரு கட்சியாகவும் கவுன்சிலர்கள் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழல் ஏற்பட்டால் நிர்வாகம் பாதிக்கும். சில சமயங்கள் மாநகர, நகர மன்றக் கூட்டங்கள் கூடுவதே சிக்கலான விஷயமாக இருக்கிறது. இதுவே மறைமுகத் தேர்தல் என்றால், நிலையான அமைப்பு உருவாகும்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Photo: P.Saravanakumar

அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பும் அதிகமாகும். அதிகப்படியான கவுன்சிலர்களைக் கொண்ட சென்னை மதுரை போன்ற இடங்களில் இந்த முறையால், சிறப்பாகச் செயலாற்ற முடியும். மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து மறைமுகத் தேர்தலே நிலையான நிர்வாகத்தை அளிக்கும் எனப் பரிந்துரைகள் கிடைத்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பே முதல்வர் படுதோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதைத்தான் இந்த மறைமுதத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் எதிரொலிக்கிறது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், `அ.தி.மு.க-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அ.தி.மு.க அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்!’ எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் கூறுகையில், ``அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவரது உறவினர்களுக்கு கான்ட்ராக்ட் வழங்கும் நிழல் மன்றங்களாக உள்ளாட்சி அமைப்புகள் தரம் தாழ்த்தப்பட்டு விட்டன.

வரலாறு காணாத ஊழல் சகதியில் சிக்கியிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு நேரடி தேர்தல் வைத்தால் தி.மு.க அமோக வெற்றி பெற்று விடும் என்றும் உள்ளாட்சித்துறை ஊழல்கள் ஒவ்வொன்றாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்து ஊரே நாறிவிடும் என்றும் அமைச்சர் வேலுமணியும் அவரை பேணிப் பாதுகாத்து வரும் முதல்வர் பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆகவே, உள்ளாட்சி ஜனநாயகத்தை திட்டமிட்டு பட்டப்பகலில் படுகொலை செய்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

பணம் கொடுத்து பரவலாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இரு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியால் அ.தி.மு.க வுக்கு மக்கள் செல்வாக்கு பெருகிவிட்டது எனக் கற்பனையான ஒரு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் இப்போது களத்தில் நிலவும் உண்மையைப் புரிந்துகொண்டு விட்டார்.

தேர்தலுக்கு முன்பே முதல்வர் படுதோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதைத்தான் இந்த மறைமுதத் தேர்தலுக்கான அவசர சட்டம் எதிரொலிக்கிறது. 2018 -ல் நேரடி தேர்தல் எனச் சட்டம் கொண்டு வந்தபோது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தேவையான முடிவை சுலபமாக எடுக்கமுடியாது என இதே அ.தி.மு.க அரசு சொன்னது. இன்று மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இருந்தால்தான், மன்றத்தில் முடிவுகளை எடுக்க முடியும் என அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளது.

தி.மு.க வை பொறுத்தவரையில் மக்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிக்கு மறைமுதத் தேர்தலோ அல்லது நேரடி தேர்தலோ எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. மக்களின் பேராதரவுடன் வெற்றி வாகை சூடி, அ.தி.மு.க அரசின் ஊழல் துர்நாற்றத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் கைப்பற்றி காப்பாற்றி தமிழக மக்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் கிடைக்காத அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவோம்” என்று கூறியுள்ளார்.