Published:Updated:

கடலூர்: `பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்கிறார் முதல்வர்’ - ஸ்டாலின் காட்டம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

`தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி தனது பேத்திக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். செய்தியில் அதைப் பார்த்து நான் உருகிப்போனேன்’ - ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபையில் பங்கேற்று அ.தி.மு.க-வை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து பேசிய அவர், ``கிராமசபைக் கூட்டம் வருடத்துக்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழக அ.தி.மு.க ஆட்சியில் கிராமசபை நடத்தப்படவில்லை. எனவே, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க சார்பில் கிராமசபையை நடத்திவருகிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எங்களின் கிராமசபைக்கு வரும் மக்கள் ‌கூட்டத்தைப் பார்த்த அ.தி.மு.க அரசு அதிர்ச்சியடைந்து, கிராமசபைக்குத் தடை விதித்தனர். எனவே, தி.மு.க மக்கள் கிராமசபையாக நடத்திவருகிறோம். இந்தச் சபைகளில் அ.தி.மு.க அரசின் கொள்ளைகளை மக்களின் மனதில் பதிய வைத்துவருகிறோம். கைதுசெய்தாலும் கவலையில்லை என்று தி.மு.க தடையை மீறி கிராமசபையை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கிறார்கள். தலைவர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை ‌நிறைவேற்றினார். 2015-ல் ஜெயலலிதா அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட முதலீடு கொண்டுவருவதாகக் கூறினார். அதேபோல் எடப்பாடியும் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தார், அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். ஆனால் அவர்கள் கூறிய அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கவில்லை. முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது.

நேற்று தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி தனது பேத்திக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். செய்தியில் அதைப் பார்த்து நான் உருகிப்போனேன். டெல்லியில் விவசாயிகள் 39 நாள்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டங்களுக்கு எதிராகப் பல்வேறு முதல்வர்களும் தீர்மானங்களை இயற்றிவருகின்றனர். ஆனால், எடப்பாடி அதை ஆதரித்துப் பேசியிருக்கிறார். பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்கிறார் பழனிசாமி. தி.மு.க ஆட்சியில் உங்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்’’ என்றார்.

கடலூர்: சேற்றில் நெளிந்த மக்கள்! -  தி.மு.க-வின் மக்கள் கிராமசபைக் கூட்டக் குளறுபடி
அடுத்த கட்டுரைக்கு