Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரி: `அதிமுக ஜெயித்தால், அது பாஜக ஜெயித்தது என்றே அர்த்தம்' - ஸ்டாலின் தாக்கு!

ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

`மதவெறியைத் தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க மோடியும், அமித் ஷாவும் நினைக்கிறார்கள். இது திராவிட மண், தமிழகத்தில் அவர்கள் நுழைய முடியாது' என கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஸ்டாலின் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``குமரி மாவட்டத்தில் எப்போதுமே தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெற்றிருக்கிறது என்பது வரலாறு. வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வரலாறு இந்த மாவட்டத்துக்கு உண்டு. அந்த வரலாறு தொடர வேண்டும். கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோது குமரிக்கு எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறார். நான் தேர்தலுக்கு மட்டும் வந்து போகிறேன் என நினைத்துவிடக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் மக்களோடு நாங்கள் இருக்கிறோம். இப்போது 10 வருடங்களாக அதிமுக ஆட்சி இருக்கிறது. நான்கு ஆண்டுகளாக பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். பல்லி, பாம்பு போன்று ஊர்ந்து வந்தவர் அவர். படிப்படியாக வளர்ந்தது நான்தான். அவர் சசிகலாவுக்கும் துரோகம் செய்துவிட்டார்.

இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுக் கேட்ட நானும் ஒரு வேட்பாளர்தான். நான் முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றிபெற்றால்தான் நான் முதலமைச்சர் ஆக முடியும். ஆட்சி நடத்தும் பழனிசாமி பத்து வருடங்களாக நாம் ஆட்சியில இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார். பத்து வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகித்தீர்களே... என்ன செய்தீர்கள் என நம்மிடம் கேட்கிறார். நான் கேட்கிறேன்... பத்து வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்.

தக்கலையில் ஸ்டாலின் பிரசார கூட்டம்
தக்கலையில் ஸ்டாலின் பிரசார கூட்டம்

முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத்துறையில் 4,000 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு போட்டார். இதை சி.பி.ஐ-தான் விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தெம்பிருந்தால், துணிவிருந்தால், திராணி இருந்தால் அந்த வழக்கை சந்தித்திருக்க வேண்டும். அப்படிச் சந்தித்திருந்தால் இப்போது சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். முதல்வராக இருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றிருக்கின்றனர்.

ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. வந்த பிறகு ஜெயிலுக்குள்ளே இருக்கப்போகிறார் எடப்பாடி பழனிசாமி. சம்பந்திக்கு டெண்டர் கொடுத்தாரா இல்லையா என்பதற்கு ஊர் ஊராகப் போய்ப் பேசும் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். ராமலிங்கம் வீட்டில் ரெய்டு நடத்திய பிறகுதான் மோடி அரசின் பாதம் தாங்கிய பழனிச்சாமியாக மாறிவிட்டார். பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக அ.தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நமக்கென்று இருக்கும் உரிமைகள் மோடியிடத்தில் அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா மறைவு குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் கடந்த நான்கு ஆண்டுகளாக பெயருக்கு விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த உண்மையும் வெளிவரவில்லை. கொள்கையில், லட்சியத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நமக்கும் அவர்தான் முதலமைச்சர். தேர்தல் அறிக்கை திட்டங்களை நிறைவேற்றுவது ஒருபுறம் இருந்தாலும். ஜெயலலிதா மரணம் குறித்துக் கண்டுபிடித்து அடையாளம் காட்டுவோம்.

மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள்
மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள்

ஒரு அ.தி.மு.க எம்.பி ஜெயித்தாலும் அது பி.ஜே.பி எம்.பி-தான். எனவே அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் ஜெயிக்கக் கூடாது. கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தி.மு.க இந்தத் திட்டத்தை வர விடாது. நெய்யாறு இடதுகரை கால்வாய் தூர்வாரப்படும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

இது காமராஜர் பிறந்த மண். மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

தமிழகத்தை டெல்லியில் உள்ளவர்கள்தான் ஆண்டுகொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடவில்லை. மதவெறியைத் தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க மோடியும், அமித் ஷாவும் நினைக்கிறார்கள். இது திராவிட மண், தமிழகத்தில் அவர்கள் நுழைய முடியாது. குமரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரது இடத்தை நிரப்ப அவரது மகன் விஜயகுமார் வந்திருக்கிறார். அவருக்குக் கைச்சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு