Published:Updated:

`இயற்கை மட்டுமல்ல; அரசியல் சதியாலும் காவிரி வறண்டுவிட்டது!' - ஸ்டாலின்

கே.குணசீலன்

தஞ்சாவூரில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

m.k.stalin
m.k.stalin

நிலம் இருந்தால் தானே விவசாயம் செய்வார்கள். நிலத்தை சிதைத்து விட்டால் என்ன செய்வார்கள் என மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ரசாயனத் தாக்குதலை தமிழகத்தில் பி.ஜே.பி அரசு நடத்துகிறது. அத்துடன் இந்தி, சம்ஸ்கிருதத்தை திணிப்பதன் மூலம் கலாசாரத் தாக்குதலையும் நடத்துகிறது. ராசயனத் தாக்குதலையும், கலாசாரத் தாக்குதலையும் சந்திக்கக்கூடிய வல்லமை தி.மு.க.,விற்கு உண்டு என்பதை வரும் காலத்தில் நிரூபிப்போம் எனத் தஞ்சாவூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தஞ்சாவூரில் தி.மு.க., சார்பில் காவிரிக் கரையில் டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் என்ற தலைப்பில் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற கருத்தரங்கில் அதன் தலைவர் ஸ்டாலின், பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின்,``100 அரசியல் கருத்தரங்கத்திற்கு நிகரான ஒரு கருத்தரங்கம் இந்த விவசாயிகள் கருத்தரங்கம். அரசியல் என்பது மனிதனின் உடல் என்றால், விவசாயம் மனிதனின் உயிர் போன்றது. அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் இன்றைக்கு தமிழர்களின் உடலையும், உயிரையும் சேதப்படுத்துகின்றன. அந்த ஆபத்தை உணர்ந்து வருகிறோம். நாட்டின் எதிர்காலமும், வருங்கால தலைமுறையினரின் நிலையும் என்னவாகும் என உள்ளத்தில் ஒரு வித அச்சம் உருவாகியுள்ளது.

இந்த அச்சத்திற்குக் காரணம் வேளாண்மை குறித்து இதுவரை நல்ல செய்திகள் காதில் விழவில்லை என்பதுதான். காவிரியில் தண்ணீர் தர கர்நாடக மறுக்கிறது. டெல்டா மாவட்டங்கள் வறண்டு விட்டன. குறுவை சாகுபடி இல்லை. பருவமழை பொய்த்து விட்டது. மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படவில்லை. விவசாயம் நலிவடைந்து விட்டது. விவசாயிகளின் தற்கொலைகள் பெருகிவிட்டன. விவசாயிகள் வேறு மாநிலத்திற்குப் புலம்பெயர்ந்து வேறு வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, விவசாய பூமியை பழிவாங்க வேண்டும் என்றே மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதையும் தாண்டி விவசாயிகளின் நிலங்களை பலவந்தமாக அபகரித்து எட்டு வழிச் சாலை போடப்படுகிற சூழல் உருவாகியுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தப் பிரச்னைகளை உடனே தீர்க்கப்படவில்லை என்றால் தமிழகம் மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும். இது தஞ்சை பிரச்னை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னையாக நாம் பார்க்க வேண்டும். காவிரி நீரை நம்பி 12 மாவட்ட விவசாயிகளும், குடிநீர் தேவைக்காக 19 மாவட்ட மக்களும் உள்ளனர். இதுபோன்ற கருத்தரங்கை தஞ்சாவூரில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். தஞ்சைக்கு ஆபத்து என்றால், தமிழகத்திற்கும் ஆபத்து. இயற்கையின் சதியால் மட்டும் அல்ல, அரசியல் சதியாலும் காவிரி வறண்டு போய்விட்டது.

தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது. காவிரியில் தண்ணீரைக் கேட்பது தமிழகத்தின் உரிமை. அதை வழங்குவது கர்நாடகாவின் கடமை. ஆனால் கர்நாடக அரசு அந்தக் கடமையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கர்நாடக அரசு அதன் உரிமையைத் தவறியபோது குரல் கொடுத்தது தி.மு.க,தான். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் மூலம் உரிமையைப் பெற்று வந்தோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பி.ஜே.பி.,அரசு மறுத்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள மேலாண்மை ஆணையம் முறையாகச் செயல்படவில்லை.

 கரிகாலன், நம்மாழ்வார் படம்
கரிகாலன், நம்மாழ்வார் படம்

காவிரி விவகாரத்தில் கர்நாடகவிற்குத்தான் பி.ஜே.பி., பக்க பலமாக உள்ளது. தமிழத்தைப் பற்றி அவர்களுக்கு துளிகூட அக்கறை இல்லை. இதைப்பற்றி விமர்சனம் செய்வோ, தட்டிக்கேட்கவோ முதுகெலும்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடக காவிரி விவகாரத்தில் அவர்கள் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், அந்த உணர்வு தமிழக அரசிற்கு இல்லை. கொள்ளையடிப்பதில்தான் கவனமாக உள்ளனர். ஆனால், தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது.

இந்நிலையில் தமிழக மக்கள் பி.ஜே.பி.,க்கு வாக்கு அளிக்கவில்லை என்பதால், வாக்களிக்காத மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மீத்தேன், ஹைட்ரேகார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்து விவசாய நிலங்களை நாசப்படுத்த துடிக்கிறது. நிலம் இருந்தால்தானே விவசாயம் செய்வார்கள் நிலத்தைச் சிதைத்து விட்டால் என்ன செய்வார்கள் என மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, போன்ற ரசாயனத் தாக்குதலை நடத்துகிறது. அத்துடன் இந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு மூலம் கலாசாரத் தாக்குதலை மறுபுறம் நடத்துகிறது. ரசாயனத் தாக்குதலையும், கலாசாரத் தாக்குதலையும் சந்திக்கக்கூடிய வல்லமை தி.மு.க.,விற்கு உண்டு என்பதை வரும் காலத்தில் நிரூபிப்போம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தி.மு.க., எதிர்க்கும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத திட்டங்களை கொண்டு வந்தால், தி.மு.க. நிச்சயம் அதை வரவேற்கத் தயாராக உள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் விவசாயமும், உணவு உற்பத்தியும் பாதிக்கும். எனவே தி.மு.க., வளர்ச்சிக்கான எதிரிகள் அல்ல. இந்தியா வளர வேண்டும் ஆனால் மக்களை சிதைத்து வளர வேண்டுமா?

சர்வதேச சூரிய சக்தி மாநாட்டில் கலந்து கொண்ட மோடி மண்ணுக்குள் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மண்ணுக்கு மேலே சூரிய சக்தி மூலம் இதை நிறைவேற்ற வேண்டும் எனத் தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அதையேதான் நாங்கள் கூறி வருகிறோம். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்கிறது. ஆனால் அ.தி.மு.க அரசு இதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்பது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டுமே இப்பகுதியைப் பாதுகாக்க முடியும். தண்ணீர் இல்லாத காலத்தில் தூர்வாரி இருக்க வேண்டும். அதை தமிழக அரசு செய்யத் தவறி விட்டது. மேக்கேதாட்டூ அணை விவகாரத்தையும் தடுக்க தமிழக அரசிற்கு முடியவில்லை. ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசு பெறும் உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியில் நாட்டில் உள்ள அனைத்து விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.