Published:Updated:

தி.மலை: ``என்னையே திக்குமுக்காடவைத்துவிட்டார்; அவர் எதிலும் வல்லவர்" -எ.வ.வேலுவைப் புகழ்ந்த ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் ( எஸ்.தேவராஜன் )

"திருவண்ணாமலையையும் தீபத்தையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல தி.மு.க-வையும் திருவண்ணாமலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அண்ணா நுழைவு வாயில், கலைஞர் சிலை அமைக்க பொருத்தமான ஊர் திருவண்ணாமலை." - மு.க.ஸ்டாலின்.

தி.மலை: ``என்னையே திக்குமுக்காடவைத்துவிட்டார்; அவர் எதிலும் வல்லவர்" -எ.வ.வேலுவைப் புகழ்ந்த ஸ்டாலின்

"திருவண்ணாமலையையும் தீபத்தையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல தி.மு.க-வையும் திருவண்ணாமலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அண்ணா நுழைவு வாயில், கலைஞர் சிலை அமைக்க பொருத்தமான ஊர் திருவண்ணாமலை." - மு.க.ஸ்டாலின்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் ( எஸ்.தேவராஜன் )

திருவண்ணாமலைக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நேற்று (08.07.2022) காலை திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலினுக்கு, திண்டிவனம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. முக்கிய தி.மு.க நிர்வாகிகளால், பல கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த மக்களை, சாப்பாட்டுடன் சிறப்பாக கவனித்து அனுப்பியிருந்தார்கள் தி.மு க நிர்வாகிகள். திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்பென்னாத்தூர் எல்லை முதல், ஆராஞ்சி கிராமம் வரை சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்களின் வரவேற்பு அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இல்லம் தேடிக் கல்வி மையம், சிறுவனுக்கு உதவி
இல்லம் தேடிக் கல்வி மையம், சிறுவனுக்கு உதவி

ஆராஞ்சி என்னும் கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை தொடங்கிவைத்தார். அதற்கு முன்பாக, மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவனின் வீட்டுக்குச் சென்றவர், அந்தச் சிறுவனுக்கு உபகரணங்களை வழங்கியிருந்தார். அதன் பிறகு திருவண்ணாமலை நகரில் ஓய்வெடுத்துக்கொண்ட ஸ்டாலின், அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் பொருள்களை நேற்று மாலை வழங்கிவிட்டு, இரவு 8:15 மணியளவில் அண்ணா நுழைவாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர், கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்தார். கிரிவலப்பாதையில் இந்தச் சிலை அமைந்திருப்பதால், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, அருகில் அமைக்கப்பட்டிருந்த கட்சி பொதுக்கூட்ட மேடையில் பேசிய ஸ்டாலின், "திருவண்ணாமலைக்கு வருபவர்கள், கிரிவலப்பாதையைச் சுற்றி வருவார்கள். ஆனால், இன்று நான் திருவண்ணாமலையைச் சுற்றிவரக்கூடிய சூழ்நிலையை எ.வ.வேலு உருவாக்கிவைத்திருக்கிறார். திருவண்ணாமலை உச்சியில்தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால், இன்றைய தினம் திருவண்ணாமலை முழுவதும் ஒளிமயமாக இருக்கும் வகையில், தி.மு.க பொதுக்கூட்டம் மாநாடுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரம் திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் நான் மக்கள் கடலைப் பார்த்தேன். அதையும் தாண்டியிருக்கிறது இன்றைய திருவண்ணாமலைக் கூட்டம். இதைக் காணும்போது என்னையே திக்குமுக்காடவைத்திருக்கிறார் எ.வ.வேலு. அவரை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பணியாற்றுங்கள் என்று சொன்னாலும்... கழகத்திலுள்ள சிலைகள் துறை, மணிமண்டபங்கள் துறை, விழாக்கள்துறை என எத்தனையோ துறைகளைவைத்து அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். எ.வ.வேலு என்று சொன்னால் எதிலும் வல்லவர். அவருடைய இயல்பே அப்படிதான். அவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் எதையும் பற்றிக் கவலைபட வேண்டாம். அந்த அளவுக்குச் சுத்தமாக முடித்துக்காட்டக்கூடியவர் வேலு. இந்த ஆற்றல் எல்லோருக்கும் வாய்க்காது. அவருக்கு நான் நன்றி சொல்வதை, எனக்கு நானே நன்றி சொல்வதற்குச் சமமானதாகக் கருதுகிறேன். அவருக்கு தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிவருகிறார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் திருவண்ணாமலையில் உயர்ந்து நிற்கிறார்கள் என்றால் தமிழினம் உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

திருவண்ணாமலையையும் தீபத்தையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல திருவண்ணாமலையையும் தி.மு.க-வையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கருணாநிதி சிலை, அண்ணா நுழைவு வாயில்.
கருணாநிதி சிலை, அண்ணா நுழைவு வாயில்.

கட்சி உருவான முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் கொடுத்தது திருவண்ணாமலையைச் சார்ந்த ப.வு.சண்முகம்தான். கழகம் முதன்முதலாகப் போட்டியிட்ட 1957-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 15 உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர். அவர்களில் மூன்று பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல, கழகம் போட்டியிட்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றோம். அவற்றில் ஒன்று திருவண்ணாமலை தொகுதி. அந்த அளவுக்குக் கட்சிக்கு அடித்தளமாக அமைந்த ஊர்தான் திருவண்ணாமலை.

1963-ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், கலைஞர் தேர்தல் பொறுப்பாளராக உழைத்தார், வெற்றியும் பெற்றோம். மலையையே கைப்பற்றிய மகிழ்ச்சியில், அண்ணாவைச் சந்தித்தார் கலைஞர். அந்தத் திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றிதான் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றிக்கு அடித்தளம் என்று கலைஞர் பல மேடைகளில் பேசியுள்ளார். இடைத்தேர்தலில் எளிதில் வெற்றிபெற முடியாது. அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வெற்றிபெறுவது என்பது இயலாத காரியம். ஆனால், அப்போது வெற்றிபெற்றோம். முதன்முதலாக கழகம் ஆட்சியைக் கைப்பற்ற களம் அமைத்து, வெற்றி சூத்திரத்தைக் கற்பித்த ஊர்தான் திருவண்ணாமலை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பயணத்தை திருவண்ணாமலையிலிருந்துதான் தொடங்கினேன். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை, மனுக்களைப் பெற்றேன். கழக ஆட்சி அமைத்ததும் 100 நாள்களில் தீர்வு காண்பேன் என்றேன். அந்தப் பயணம்தான் தி.மு.க வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. அதற்கு தொடக்கம் திருவண்ணாமலைதான்.

பொதுக்கூட்ட அரங்கம் - திருவண்ணாமலை
பொதுக்கூட்ட அரங்கம் - திருவண்ணாமலை

எனது கடமைகளை நான் சரியாகச் செய்துவருகிறேன் என்பதைச் சொல்ல இன்று வந்திருக்கிறேன். 'பெரியாரைப்போல ஆசிரியரும், கலைஞர்போல மாணவரும் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்' அண்ணாவே சொல்லியிருக்கிறார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க உழைத்த உழைப்பால், தமிழ்நாடு மேன்மையடைந்தது. கழக வளர்ச்சியில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் காவலரண் தி.மு.க-தான். இங்கு அமைக்கப்பட்டிருப்பது கலைஞரின் சிலையல்ல... கொள்கை மலை. எந்த நம்பிக்கையில் தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்று நீங்கள் ஆதரவு தந்தீர்களோ... அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்றைக்கும் இருப்போம் என்று அண்ணா, கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன்" என்றார்.