Published:Updated:

சட்டமேலவை... அண்ணாவின் கப் அண்ட் சாசர் கனவு... நிறைவேற்றத் துடிக்கும் ஸ்டாலின்!

அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா

தமிழகத்தில் சட்ட மேலவை மன்றம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே செயல்பாட்டிலிருந்த நிலையில், 1986-ம் ஆண்டுதான் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அதை அதிரடியாகக் கலைத்தார்

சட்டமேலவை... அண்ணாவின் கப் அண்ட் சாசர் கனவு... நிறைவேற்றத் துடிக்கும் ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்ட மேலவை மன்றம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே செயல்பாட்டிலிருந்த நிலையில், 1986-ம் ஆண்டுதான் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அதை அதிரடியாகக் கலைத்தார்

Published:Updated:
அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேலவையை மீண்டும் கொண்டுவருவது, கருணாநிதியின் நீண்டகாலக் கனவு. ‘‘ ‘மேலவையும் பேரவையும் கப் அண்ட் சாசர் போன்றவை. கப்பில் காபி சூடாக இருந்தால், அதை சாசரில் ஆற்றிச் சூட்டைக் குறைத்துக்கொள்வதைப்போல மேலவை பயன்படுகிறது’ என்று அண்ணா குறிப்பிட்டார். எனவே, கப் அண்ட் சாசர் வேண்டும். அதற்கான அனுமதியை விரைவில் பெறுவோம்’’ - 2010-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பேசிய வரிகள் இவை. இப்படி அவரது நீண்டகால கனவான சட்டமன்ற மேலவையை இந்த ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் சட்ட மேலவை மன்றம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே செயல்பாட்டிலிருந்த நிலையில், 1986-ம் ஆண்டுதான் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அதை அதிரடியாகக் கலைத்தார். அதன் பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு முறையும், மேலவையைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்ற மேலவை குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அது கிடப்பில் போடப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ம.தி.மு.க-விலிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரவைத்தார். அந்த வழக்கில், ‘மேலவை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்தத் தீர்மானத்தையே ரத்துசெய்தார்.

சட்டமேலவை... அண்ணாவின் கப் அண்ட் சாசர் கனவு... நிறைவேற்றத் துடிக்கும் ஸ்டாலின்!

மீண்டும் 2010-ம் ஆண்டு கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்தத் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ரத்துசெய்யப்பட்டது. இந்தநிலையில்தான் இப்போது தி.மு.க மீண்டும் மேலவையைக் கொண்டுவர முயல்கிறது.

“தி.மு.க-வுக்கு இப்போது மேலவை அவசியமாக இருக்கிறது” என்று சொல்லும் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், அதற்கான காரணங்களை விவரித்தார்கள்... ‘‘தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 மட்டுமே. ஆனால், தி.மு.க-வில் பதவியை எதிர்பார்த்து காத்திருப்போர் எண்ணிக்கை, அதைப்போல பல மடங்காக இருக்கிறது. அதனால்தான், கருணாநிதி தனது ஆட்சிக்காலத்திலேயே மேலவையை உருவாக்கி அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பு கொடுத்து திருப்திப்படுத்த நினைத்தார். அவ்வளவு ஏன்... ‘மேலவையே வேண்டாம்’ என்று கலைத்த எம்.ஜி.ஆரே முதன்முதலில் சட்ட மேலவை உறுப்பினராகத்தான் கோட்டைக்குள் கால்வைத்தார்.

இதையெல்லாம் மனதில்கொண்டுதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் ‘மேலவையைக் கொண்டுவர சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவோம்’ என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட பலருக்கும், ‘ஆட்சி அமைந்தவுடன் சட்ட மேலவையைக் கொண்டுவந்து, அதில் உங்களுக்கு வாய்ப்பு தருவோம்’ என்றும் உறுதியளித்தார். அவர் சொன்னதை நம்பி கட்சி நிர்வாகிகள் பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அப்படி மேலவை அமைக்கப்படும்பட்சத்தில் அதில் சில இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து, அவர்களையும் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார் முதல்வர்’’ என்கிறார்கள்.

“ஒருவேளை மேலவை அமைக்கப்பட்டால், அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்?” என்று அனுபவம் வாய்ந்த மூத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘‘சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்கு வரை மேலவை உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளலாம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 234. அதன்படி மேலவையில் குறைந்தபட்சம் 40 பேர் முதல் அதிகபட்சம் 78 பேர் வரை உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவர்களிலும் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாலும், மேலும் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12-ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் பட்டதாரிகளாலும், மேலும் 12-ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகர்கள் எனப் பல்வேறு துறைகளிலிருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்றார்கள்.

இந்தியாவில் தற்போது ஆறு மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் இருக்கின்றன. ஏனெனில், ஒரு மாநில அரசு நினைத்தால் மட்டுமே மேலவையைக் கொண்டுவர முடியாது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு அரசு மத்தியில் இருந்ததால், மேலவை தீர்மானம் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து மேலவை தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டார். அப்போது தி.மு.க-வில் மேலவை உறுப்பினர்களாக யாரையெல்லாம் நியமிக்கலாம் என்பதுவரை ஆலோசித்தார்கள். ஆனால், 2011-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அந்தத் தீர்மானத்தை ரத்துசெய்தது.

சட்டமேலவை... அண்ணாவின் கப் அண்ட் சாசர் கனவு... நிறைவேற்றத் துடிக்கும் ஸ்டாலின்!

இந்தமுறையும் தி.மு.க அரசு தமிழக சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், மத்திய அரசு அதை அங்கீகரிப்பது சந்தேகமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவருவதை அ.தி.மு.க-வும் ஆதரிக்காது என்கிறார்கள் அவர்கள்.

தமிழகத்தில் ராஜாஜி முதல் மா.பொ.சி வரை அலங்கரித்த அவை, சட்ட மேலவை. ஒருவேளை மீண்டும் மேலவை அமைக்கப்பட்டாலும் மானுடத்தின் மீது பெருங்கருணை கொண்டவர்களும், சமூகநீதியாளர்களும், அறிவுஜீவிகளுமே அதை அலங்கரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism