Published:Updated:

ஓராண்டு ஆட்சி: ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்... தொடரும் மோதல் அரசியல்!

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஆளுநர் - தி.மு.க மோதலை சூட்டோடு வைத்திருக்கப் பார்க்கிறது டெல்லி. அதேசமயம், மாநிலத்தில் நிலவும் பல பிரச்னைகளுக்கு 'டேக் டைவர்ஷன்' கிடைக்கும் என கணக்குப் போடுகிறது அறிவாலயம். இருதரப்புமே இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்ட விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.

ஓராண்டு ஆட்சி: ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்... தொடரும் மோதல் அரசியல்!

ஆளுநர் - தி.மு.க மோதலை சூட்டோடு வைத்திருக்கப் பார்க்கிறது டெல்லி. அதேசமயம், மாநிலத்தில் நிலவும் பல பிரச்னைகளுக்கு 'டேக் டைவர்ஷன்' கிடைக்கும் என கணக்குப் போடுகிறது அறிவாலயம். இருதரப்புமே இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்ட விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
ஓராண்டு ஆட்சி: ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்... தொடரும் மோதல் அரசியல்!

தி.மு.க அரசின் கடந்த ஓராண்டு ஆட்சியில், பெரும்பகுதி அவர்கள் மோதியது ராஜ்பவனுடன் தான். நீட் தேர்வு விலக்கு மசோதாவில் தொடங்கிய இந்த மோதல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் மசோதா வரை நீடித்திருக்கிறது. சில சமயங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகவும் இந்த விவகாரம் வெடித்தது. 'ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்' என்கிற கோஷத்தை முன்வைத்து, நாடாளுமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவர தி.மு.க எம்.பி-க்கள் முயற்சித்ததும் நிலைமையை சூடாக்கியது. இந்த மோதல் போக்கிற்கு விரைவில் விடைக் கிடைக்காது என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

ஆளுநர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என் ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மிடம் பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்திலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், "நீட் விலக்கு மசோதாவை கடந்தாண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தபோது, மசோதா மீது எந்த பதிலும் சொல்லாமல் பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது ராஜ்பவன். அப்போதுதான், நாடாளுமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தி.மு.க எம்.பி-க்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். நிலைமை சூடாகுவதை உணர்ந்த பிறகுதான், பிப்ரவரி 1-ம் தேதி மசோதாவை சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி, நிதி மசோதாவைத் தவிர, வேறு எந்த மசோதாவை சட்டமன்றம் அனுப்பினாலும் அதன் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரமுண்டு. அதற்கு காலவரை ஏதுமில்லை. 'இதை தனக்கு சாதகமாக ஆளுநர் பயன்படுத்திக் கொண்டு செயல்படுகிறார்' என்பதுதான் தி.மு.க முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ராஜ்பவனில் இன்றுவரை ஒன்பது மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய ஆளுநர், அதனுடன் சில கேள்விகளையும் அனுப்பினார். 'நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பும் பின்பும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்ன? 'நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதல்ல' என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எந்தத் தரவுகளின் அடிப்படையில் நீட் விலக்கு தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது? இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?' எனப் பல்வேறு கேள்விகளை தமிழக அரசுக்கு அனுப்பினார் ஆளுநர். இதுவரை அந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லை. அதேவேளையில், '‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியது முரசொலி. சூட்டோடு, சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டிய தி.மு.க அரசு, இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. அந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நீட் விவகாரத்தோடு மட்டும் இந்த மோதல் நின்றுவிடவில்லை. ஒன்றிய அரசு சொல்லாடல், துணைவேந்தர் நியமனம், திராவிட மாடல் விவகாரங்களிலும் மோதிக் கொண்டனர். ‘திராவிட மாடல்’ கருத்தாக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார் ஆளுந ரவி. விழாவில் பேசிய அவர், “மாநில ரீதியாகச் சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி, சமமான வளர்ச்சியை உருவாக்காது. அது நம் நாட்டுக்கும் சரியானதல்ல. ஏற்றத்தாழ்வுகள்தான் உருவாகும்” என்றார். இதற்குப் பதிலடியாக, ‘திராவிட மாடல் பா.ஜ.க-வுக்குச் சிக்கலாக இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஆளுநர் பேசுகிறார்’ என்று கட்டுரை எழுதியது முரசொலி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்றிய அரசு சொல்லாடல், கூட்டாட்சி தத்துவம் தொடர்பான விவகாரங்களை தி.மு.க-வினர் பேசியபோது, கோவையில் நடந்த தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் தன் விளக்கத்தை பதியவைத்தார் ஆளுநர் ரவி. 'இந்தியா ஓர் ஒப்பந்தப்பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத் தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத் தன்மையைப் போன்றது' என நீண்டதொரு விளக்கத்தை அவர் அளித்தார். சமீபத்தில், ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை அவர் நடத்திக் கொண்டிருந்த போதுதான், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி, தி.மு.க - ராஜ்பவனுக்கு இடையேயான மோதல் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றனர் விரிவாக.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

தி.மு.க அரசு ஒருபக்கம் குடைச்சல் கொடுத்தாலும், அதற்கேற்ப ஆளுநர் ரவியும் பதிலடிக்கு தயாராகிறார். நீட் விலக்கு மசோதாவில் கேள்விகள் எழுப்பியது, கிடப்பிலுள்ள இதர மசோதாக்கள் மீது தொடர் கேள்விகளை முன்வைப்பது, பா.ஜ.க., அ.தி.மு.க-வினர் அளிக்கும் புகார்களை டெல்லிக்கு அனுப்புவது என தன் பங்கிற்கு சில முன்னெடுப்புகளை அவர் செய்கிறார். இதற்கெல்லாம் மேலாக, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது வரும் புகார்களை விசாரிப்பதற்காகவே பிரசன்ன ராமசாமி என்பவரை தன் துணைச் செயலாளராக நியமித்திருக்கிறார் ஆளுநர். நம்மிடம் பேசிய ஆளுநருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், "தி.மு.க அரசின் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடைபெறுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வந்தால், ஆளுநர்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். தவிர, தன் கான்வாய் மீது கறுப்புக்கொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட போதும், தன்னுடைய பிறந்தநாளில் ஆசிப் பெற்ற அயோத்யா மண்டபத்தை தமிழக அரசு கையில் எடுத்த சம்பவத்திலும் ஆளுநர் டென்ஷனாகி இருக்கிறார். தனக்கான நேரம் வரும்போது எதிர்வினையைக் காட்டுவார்" என்றனர்.

ஆளுநர் - தி.மு.க மோதலை சூட்டோடு வைத்திருக்கப் பார்க்கிறது டெல்லி. ஆளுநரிடம் மோதுவதால், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு, வாக்குறுதிகள் நிறைவேற்றாதது போன்ற பிரச்னைகளுக்கு 'டேக் டைவர்ஷன்' கிடைக்கும் என கணக்குப் போடுகிறது அறிவாலயம். இருதரப்புமே இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்ட விரும்பவில்லை என்பதே நிதர்சனம். ஆக, மோதல் தொடரும் என்பதே நமக்கு கிடைக்கும் தகவல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism