Published:Updated:

``சர்வாதிகாரியாக மாறுவேன்..!” - உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஸ்டாலின் எச்சரித்ததன் பின்னணி என்ன?

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்லில் நடந்த தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், “தவறு செய்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி எச்சரிக்கும் அளவுக்கு என்ன நடந்தது?

``சர்வாதிகாரியாக மாறுவேன்..!” - உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஸ்டாலின் எச்சரித்ததன் பின்னணி என்ன?

நாமக்கல்லில் நடந்த தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், “தவறு செய்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி எச்சரிக்கும் அளவுக்கு என்ன நடந்தது?

Published:Updated:
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டை மேடு என்ற பகுதியில் தி.மு.க-வின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நாமக்கல் மாவட்டச் செயலாளர் ராஜேஸ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். “ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால் அதைப் போற்றி, பாதுகாக்கவேண்டிய கடமை உங்களுக்குத்தான் உண்டு. அப்படிக் கிடைக்கும் பொறுப்பை நாம் எப்படிப் பாதுகாக்கிறோம், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம். பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக்கொள்வதுதான் முக்கியம். எனவே, பொறுப்புக்கு வந்திருக்கும் நீங்கள் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருக்கும் பெண்களுக்கு பயமோ, தயக்கமோ, கூச்சமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நேரடியாக நீங்களே கையாள வேண்டும். அதைக் குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்... இதை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு - நாமக்கல்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு - நாமக்கல்

நாம் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்த ஆட்சியை நமக்குத் தந்துவிடவில்லை. 50 ஆண்டுக்காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுக-வின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” எனப் பேசியிருக்கிறார். இப்படி எச்சரிக்கும்விதமாக ஸ்டாலின் பேசியதன் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்தர‌க் கூட்டத்தில் ஐந்து பெண் கவுன்சிலர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்காக, அவர்களின் கணவர்கள் பங்கேற்றதோடு தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்திட்டு ஒவ்வொருவரும் தலா 2,000 ரூபாய் பயணப்படி வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், பவானியில் 30 ஆண்டுகளாக அரசு நிலத்தை தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆக்கிரமித்துவைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. மதுரையில் சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகர்ப் பகுதியில் தி.மு.க பெண் கவுன்சிலர் அர்ச்சகரை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியானது. மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அடிதடியில் ஈடுபட்டதோடு அதைப் புகைப்படம் எடுக்கச் சென்ற செய்தியாளர்களைத் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் ஊராட்சிச் செயலாளர் தன் சாவுக்கு தி.மு.க கவுன்சிலர் ஒருவர்தான் காரணம் எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோட்டிலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் அமைச்சர்கள்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் அமைச்சர்கள்

கோவை, தஞ்சாவூர், ராமநாதபுரம் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தி.மு.க கவுன்சிலர்கள்மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மேலே சொன்னவை அந்தப் புகாருக்கான சில உதாரணங்கள் மட்டுமே…

உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து இப்படி தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான கவுன்சிலர்கள்மீது பல்வேறு புகார்கள் வரிசைகட்டின. குறிப்பாக, பெண் கவுன்சிலர்களின் பணிகளை அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரே கவனித்து வருகிறார் என்ற புகார்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுந்தன. அதோடு பண வசூலில் ஈடுபடுகிறார்கள், கமிஷன் கேட்கிறார்கள், சாலையோரக் கடைகளில்கூட வசூல் செய்கிறார்கள் என விதவிதமான புகார்களும் அடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த வாரம் அறிவாலயத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் உள்ள கவுன்சிலர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியிருக்கிறார். உளவுத்துறை மூலம் ஒவ்வொரு கவுன்சிலர் குறித்தும் விவரங்களைச் சேகரித்து அந்த விவரங்களின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடந்திருக்கிறது. இதையடுத்தே தி.மு.க-வின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

`உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான சக்தியை மக்களுக்காக மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள். நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவதோடு மட்டுமல்ல, உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு வகுப்பெடுத்ததோடு, எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.கஸ்டாலின் என்கிறார்கள்.