Published:Updated:

`காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!' - பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்

`காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். விரைவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்கத்தான் போகிறோம்' என புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ இல்ல விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசும் பி.டி.அரசகுமார்
நிகழ்ச்சியில் பேசும் பி.டி.அரசகுமார்

புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமணவிழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், ``உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் ஸ்டாலின். நான் பெருமைக்காகச் சொல்லவில்லை, அரசியலுக்காகச் சொல்லவில்லை. இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, நான் நான் ரசிக்கும் ஒரு தலைவர் ஸ்டாலின்தான். காரணம் நான் வாழும் காலத்தில், வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது நமக்குக் கிடைத்த பெருமை.

திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் உள்ளிட்டோர்
திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் உள்ளிட்டோர்

முதல்வர் இருக்கையை ஸ்டாலின் தட்டிப் பறிக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், ஒரே இரவில் கூவத்தூர் சென்று அதை முடித்து முதல்வராகி இருப்பார். ஆனால், ஸ்டாலினோ ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறார். பொறுத்தார் பூமி ஆள்வார். அதுபோலத்தான் நிரந்தரமாக ஆளும் திருநாள் வருவதற்காகக் காத்திருக்கிறார்.

`அ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்!’ - அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்

2011 அக்டோபர் மாதம் 31-ம் தேதி, நான் நெஞ்சில் வணங்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் இல்லையென்று சொன்னால், அன்று கொலைக்குற்றவாளியாக சிறைக்குச் சென்றிருப்பேன். அதற்காகத்தான் அவரது இறுதிப் பயணத்தின் போது, கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிக்கும் அந்த தங்க முகத்தைக் காண இரண்டு மூன்று முறை காவலர் கட்டுப்பாட்டை மீறிச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

`வேட்டியைக் கட்டு' என்று அண்ணன் நேரு சொன்னார். `அந்தக் கரை வேட்டி நான் கட்டிய வேட்டிதான் அண்ணா, எப்பொழுது வேண்டுமானாலும் எனக்குச் சொந்தமான வேட்டி. அதை யாரும் கொடுத்துக் கட்ட வேண்டாம்' என்பதை நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். விரைவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்கத்தான் போகிறோம்" என்றார். பி.டி.அரசகுமாரின் இந்தப் பேச்சு பா.ஜ.க பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.