Published:Updated:

`என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?!'- தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கம் #Anbazhagan

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். அவரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தி.மு.க-வின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டிலே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

க.அன்பழகன்
க.அன்பழகன்

இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச்சூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மறைவுக்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள், தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தி.மு.க கொடிகள் யாவும் ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அன்பழகன் தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் தனது வேதனையை உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்

`முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா...!' என தொடங்கும் அந்த பதிவு....

``திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது

சங்கப் பலகை சரிந்துவிட்டது...

இனமான இமயம் உடைந்துவிட்டது...

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்

என்ன சொல்லித் தேற்றுவது?

எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை..

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!

முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!

எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்!

என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது...

ஸ்டாலின்
ஸ்டாலின்

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்!

பேராசிரியர் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்!

எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்...

எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்...

இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது...

``எனக்கு அக்காள் உண்டு; அண்ணன் இல்லை;

பேராசிரியர்தான் என் அண்ணன்" என்றார் தலைவர் கலைஞர்!

``எனக்கும் அத்தை உண்டு, பெரியப்பா இல்லை"

பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்...

அப்பாவைவிட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம்...

ஆனால் நானோ, பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன்.

அவரே என்னை முதலில் "கலைஞருக்குப் பின்னால்

தம்பி ஸ்டாலினே தலைவர்" என்று அறிவித்தார்...

எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன்

மறைந்தது என் இதயத்தை பிசைகிறது...

அப்பா மறைந்தபோது

பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்...

இன்று பெரியப்பாவும் மறையும்போது

என்ன சொல்லி என்னை நானே தேறுதுல் சொல்வேன்?!

பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்...

இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்?

இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்?

என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பேராசிரியப் பெருந்தகையே!

நீங்கள் ஊட்டிய

இனப்பால், - மொழிப்பால் - கழகப்பால்

இம்முப்பால் இருக்கிறது...

அப்பால் வேறு என்ன வேண்டும்?!

உங்களது அறிவொளியில்

எங்கள் பயணம் தொடரும்...

பேராசிரியப் பெருந்தகையே!

கண்ணீருடன்...

மு.க.ஸ்டாலின்"

எனக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு