Published:Updated:

`சீமான், அண்ணாமலையைக் கண்டுக்காதீங்க...' - திமுக நிர்வாகிகள் கொதிப்புக்கு தலைமையின் பதில்?!

அண்ணாமலை - சீமான்
News
அண்ணாமலை - சீமான்

சீமான் வேண்டுமென்றே இது போன்று தொடர்ந்து நடந்துகொள்கிறார். இது நாகரிகமான அரசியலுக்கு உகந்ததல்ல என அவர்மீது அரசியல் பார்வையாளர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ஶ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து, மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. தொடர்ந்து, 'சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' என அறிக்கை வெளியிட்டார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் எம்.பி-யுமான ஜெயக்குமார், ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோரும் ‘சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ என்று டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளித்தனர்.

சீமான்
சீமான்

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில், தன் காலில் போட்டிருந்த செருப்பை உயர்த்தி, தி.மு.க-வை எச்சரிக்கும்விதமாக சீமான் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூரில், இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மாநிலப் பேச்சாளர் ஹிம்லர் என்பவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மொரப்பூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்கண்ணன், `மரியாதையாகப் பேச வேண்டும்’ எனக் கூறியபடி அடிக்கப் பாய்ந்தார். கீழே இருந்த மற்றொரு தி.மு.க நிர்வாகி நாற்காலிகளை மேடையிலிருந்தவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினார். உடனடியாக போலீஸார் வந்து தி.மு.க நிர்வாகிகளைத் தடுத்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, செங்கண்ணன் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தி.மு.க நிர்வாகியின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதேவேளையில் இந்தச் சம்பவம் குறித்து, சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, ``ஹிம்லர் இடத்தில் நான் இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன்'' எனப் பேசியது மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த நிலையில், `சீமான் வேண்டுமென்றே இது போன்று தொடர்ந்து நடந்துகொள்கிறார். இது நாகரிகமான அரசியலுக்கு உகந்ததல்ல' என அவர்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சீமான்
சீமான்

இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் பேசும்போது, ``ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்கலாம். ஆனால், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் அடிப்பேன் என்பது, உதைப்பேன் என்பது, காலில் போட்டிருக்கும் செருப்பைத் தூக்கிக் காண்பிப்பது என்பது நிச்சயமாக அரசியல் அநாகரிகம்தான். இது போன்ற விஷயங்களை யார் செய்தாலும் தவறுதான். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிமீது, தி.மு.க-வினர் அடிக்கப் பாய்ந்ததும் தவறுதான். ஆனால், அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் முயலலாம். அதைவிடுத்து, `நான் இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன்’ என்று சீமான் பேசுவது வன்முறையை ஊக்குவிப்பது போன்றது. இனி வரும் காலங்களிலாவது சீமான் அரசியல் நாகரிகத்தோடு நடந்துகொள்ள வேண்டும். அவரின் கட்சி உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது'' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், நாம் தமிழர் கட்சியினரோ, ``நாங்கள் கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸை, தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., அ.தி.மு.க-வையும் விமர்சித்திருக்கிறோம். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், காங்கிரஸ் கட்சியினர் வரிசையாக எங்கள் அண்ணன் மீது புகார் கொடுத்தனர். எங்கள் கட்சித் தம்பிகளை, அண்ணன் சீமானை, அடிப்பேன் உதைப்பேன் என வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியினர் மிரட்டினர். ஶ்ரீபெரும்புதூரில் அண்ணன் பேசியது அதற்கான எதிர்வினைதான். அதேபோல, ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க., பா.ஜ.க-வை எதிர்க்காமல் அடக்கி வாசிக்கிறது. ஆனால், அவர்களைக் கேள்வி கேட்கத் திராணியற்று, எங்களை `பி டீம்’ எனச் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கோபத்தில்தான் எங்கள் அண்ணன் செருப்பை உயர்த்திக் காட்டினார். உருவபொம்மை எரிப்பது போன்று இதையும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், எங்கள் கட்சி நிர்வாகிகளை மேடையிலேயே ஏறித் தாக்கும் வட இந்தியக் கும்பல் தாக்குதல் கலாசாரத்தைத் தி.மு.க-வினர் தமிழகத்தில் தொடங்கிவைக்கின்றனர். இது ஜனநாயகத்துக்கு நிச்சயமாக நல்லது அல்ல'' என்கிறார்கள்.

`நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு சீமான்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் இருக்கும்' எனவும் ஒருசில செய்திகள் வெளியாகிவருகின்றன. இது குறித்து, தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்.

ஸ்டாலின் - சீமான்
ஸ்டாலின் - சீமான்

``சீமான் எங்களை உசுப்பேற்றும்விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறார். காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேசியபோதே அவரைக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் செய்யவில்லை. இப்போதும் நிர்வாகிகள் பலர் தலைவரிடம் இது குறித்துப் பேசிவருகிறார்கள். ஆனால், தலைவர்தான், சீமான் பேசுவதைக் கண்டுகொள்ளாதீர்கள், அவருக்கு பதிலளித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லிவிட்டார். அ.தி.மு.க., பா.ஜ.க-வினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். பா.ஜ.க-விலும் மூத்த தலைவர்களின் விமர்சனங்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யுங்கள். அண்ணாமலையைத் தவிர்த்துவிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். எங்கள் தலைவர் நாளை ஓகே சொன்னால்கூட, சட்டப்படி சீமான்மீது உடனடியாக நடவடிக்கை பாயும். அந்த அளவுக்கு அவர் கடந்த காலங்களில் அவதூறாகப் பேசியிருக்கிறார். ஆனால், எங்கள் தலைமைக்கு அப்படியான எந்தத் திட்டமும் இல்லை'' என்கிறார்கள்.