Published:Updated:

“மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!”

மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்கும் முதல்வர்கள்

பிரீமியம் ஸ்டோரி
‘அடிமை அரசு’, ‘எடுபிடி அரசு’ என்றெல்லாம் எதிர்க் கட்சியினரால் விளாசப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் கடிதம் மூலமாக மத்திய பா.ஜ.க அரசை விளாசியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல... தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களும் வரிசைக்கட்டி மத்திய அரசை எதிர்க்கின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடம் கேட்ட நிதியும் கிடைக்கவில்லை. கொரோனா என்றில்லை... வழக்கமான நிதி ஒதுக்கீடுகளிலும் பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடு மிகக் குறைவு.

குறிப்பாக, ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட பிறகு வரி வருவாயில் பெரும் பகுதி மத்திய அரசிடம் போய்விடுகிறது. இதனால், மத்திய அரசு நினைத்தால் தான் மாநிலங்களைக் காப்பாற்ற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மதுக்கடைகள் திறப்பு, அரசுத்துறைகளில் 50 சதவிகிதம் வரை செலவீனங்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. கூடவே, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களையும் எழுதிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பின்போது, ‘மாநில அரசுகள் ஐந்து சதவிகிதம் வரை கடன் வாங்கிக்கொள்ளலாம்’ எனக் குறிப்பிட்டார். அத்துடன், ‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றை நிர்ணயித்து அவற்றை உயர்த்துவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வர்த்தகத் தொழில்களை நடத்துவதை எளிமையாக்க வேண்டும். மின்துறையைச் சீரமைக்க வேண்டும்’ என நிபந்தனைகளையும் விதித்தார். இந்த நிபந்தனைகள்தான் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், `கூடுதல் கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தேவையில்லாதவை. மாநிலங்களுக்கு இடையிலான ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு, ஒரு சீர்திருத்தத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்ததல்ல. சீர்திருத்தத் திட்டத்தை மாநிலங்களிடம் விரிவாகக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சூழலின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

சந்திரசேகர ராவ் -  மம்தா பானர்ஜி
சந்திரசேகர ராவ் - மம்தா பானர்ஜி

சீர்திருத்தங்களை கொரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெறும் கூடுதல் கடனுடன் இணைக்கக் கூடாது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மோசமான நிதிச்சிக்கல் இருக்கும் சூழலில், கடன் பெறுவதற்கு கடுமையான கட்டுப் பாடுகளை விதிப்பதால் முக்கிய செலவுகளுக்குத் தேவைப்படும் நிதியை மாநில அரசால் பெற முடியாமல்போய்விடும்’ எனக் கொந்தளித் திருக்கிறார் தமிழக முதல்வர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ``மத்திய நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார சிறப்புத் திட்டங்கள் வெறும் ஏமாற்று வேலை, துரோகம். அது ஒரு சர்வாதிகார மனப்பான்மை, குரூரமான திட்டம். மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள்போல் நடத்துகிறது. மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறை, கூட்டாட்சி உணர்வுகளுக்கு எதிரானது’’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.

மோடி
மோடி

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ``இந்திய வரலாற்றில் முதன்முறையாக மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான பத்திரங்களுக்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது. அப்படி கடன் பெறும் தொகையும் நாங்கள் சொல்லும்படி செலவிடப்பட வேண்டும் என்கிறது மத்திய அரசு. இது ஜனநாயக விரோதம்” என்று கொதித்துள்ளார்.

“கொரோனா வைரஸுக்கு எதிராக மேற்குவங்க அரசு தீவிரமாகப் போரிட்டுவருகிறது. ஆனால் மத்திய அரசோ, எங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறது” என்று கடுமை காட்டியிருக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியது தொடர்பாக அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஒய்.ஜவகர் அலியிடம் பேசினோம். “மாநிலங்கள் கேட்கும் நிதியை வழங்காமல், மொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய் ‘ஸ்பெஷல் பேக்கேஜ்’ அறிவித்துள்ளது மத்திய அரசு. அதனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நேரடியாக நிதியைக் கொடுத்தால்தான், மாநிலங்கள் தங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட முடியும். மத்திய அரசு தனக்கென அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல் படுவது, மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. எனவேதான், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தமிழக முதல்வர் கடுமையாகக் கடிதம் எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது’’ என்றார்.

ஒய்.ஜவகர் அலி - குமரகுரு
ஒய்.ஜவகர் அலி - குமரகுரு

பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். “ஐந்து சதவிகிதம் கடன் வாங்குவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. எந்தத் துறைக்கு கடன் வாங்குகிறார்களோ, அந்தத் துறையிடம் தடை யில்லாச் சான்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்துசெய்யவில்லை. 20 லட்சம் கோடி ரூபாய் அறிவித்து எல்லா மாநில மக்களுக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உட்பட பல திட்டங்களுக்காக தமிழகத்துக்கு 15,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் மொத்த நிதியையும் தங்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எப்படி முடியும்? கூட்டாட்சித் தத்துவம் பற்றிப் பேசும் இவர்கள் 2004-லிருந்து அது எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே “பதிலே இல்லாத கடிதங்களால் என்ன பயன்?” என்று கேட்டு, தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில், `அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சிகளை அழையுங்கள், இணையுங்கள்’ என்று முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதைச் செய்வாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு